NewsSri Lanka

7 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம்

நீண்டகால இழுபறிக்குப் பின்னர் 7 இலங்கைத் தமிழ்க் கட்சிகள் சேர்ந்து ஜனவரி 6, 2022 அன்று 7 அம்சக் கோரிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள். இந்திய தூதுவருக்கூடாக விரைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள இக் கடிதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முஸ்லிம் கட்சிகள, மலையகத் தமிழர் கட்சிகள் ஆகியன கையெழுத்து வைக்கவில்லை. இருப்பினும் மனோ கணேசன் தலைமையிலான மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணி தாம் இம்முயற்சிக்குக் குறுக்காக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

1948 முதல் தமிழ் பேசும் மக்களால் எதிர்கொள்ளப்பட்டுவரும் பிரச்சினைகளை வரலாற்றுச் சான்றுகளுடன் நிரற்படுத்தி, தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வைப்பெற்றுத்தருமபடி வலியுறுத்தி, ஏழு தமிழ்க் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள இக்கடிதத்தின் இணைப்பாக 7 அம்சக் கோரிக்கை ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விணைப்பில் காணப்படும் 7 அம்சங்களின் சாராம்சம் பின்வருமாறு:  1. 13 ஆவது திருத்தமும் மாகாணசபைகளும்: (அ) இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு அதன் பின்னர் நீக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு, நிதி, காணி, கல்வி, விவசாய சேவைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மீளிணைக்கப்பட வேண்டும். இதை நிறைவேற்றுவதாக இலங்கை ஜனாதிபதியிடமிருந்து தனிப்பட்ட முறையில் வாக்குறுதி பெறப்படவேண்டும். (ஆ) தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அரசாங்கம் ஆணையை வழங்கவேண்டும்.
  2. மொழியுரிமைகள் – 16 ஆவது திருத்தம்: (அ). 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்ததாக, டிசம்பர் 17, 1988 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தை அதில் எழுத்தில் குறிப்பிட்டபடியே முழுமையாக நிறைவேற்ற வேண்டும். (ஆ). தமிழும், சிங்களமும் தேசிய அரச கரும மொழிகளாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருக்குமென 13 ஆவது, 16 ஆவது திருத்தங்களினால் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய அது முழுமையாக நடைமுறைப்படுத்தபட வேண்டும். (இ). அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயம் 18 ஆவது சரத்து, அங்கம் 25A யின்படி நிர்வாகம், சட்டவாக்கம், நீதி பரிபாலனம், பாடசாலைகளில் கல்வி வழங்கல் ஆகியவற்றில் தேசிய மொழிகளின் பிரயோகம் இருக்குமென்பது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  3. மக்கள் வாழிடம், காணி அபகரிப்பு, எல்லை நகர்த்தல்: (அ).பண்டா-செல்வா ஒப்பந்தம்(1957), டட்லி-செல்வா ஒப்பந்தம்(1965) மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தம்(1987) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளமைக்கு முரணாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்கள் குடிப்பரம்பலைத் திட்டமிட்டு மாற்றுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஆ). வடக்கு-கிழக்கு பிரதேசங்கள் மரபுவழித் தமிழர் வாழும் பிரதேசங்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, வனத் திணைக்களம், வன விலங்குகள் திணைக்களம், சுற்றுலாச் சபை மற்றும் பாதுகாப்பு / உள்ளகப் பாதுகாப்பு அமைச்சுகள் மூலம் அவர்களது வாழ்தடயங்களை அழிக்க முயல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். (இ). புத்த சமயம் இங்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னரேயே இங்கு தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதையும் இத் தமிழர்களினால் தான் புத்த சமயம் இங்கு உள்வாங்கப்பட்டது என்பதையும் தொல்லியல் திணைக்களம் ஏற்றுக்கொண்டு தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்துவதையும் வக்கிரப்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். (ஈ). வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கிடையேயான எல்லைப் பிரதேசங்களில், சிங்களக் கிராமங்களைக் குடியேற்றுவதன் மூலமாகவோ அல்லது தமிழ்க் கிராமங்கள் சிங்களக் கிராமங்களுடன் இணைக்கப்படுவதன் மூலமோ, அவற்றின் விகிதாசாரம் மாற்றப்பட்டு தமிழர் பிரதேசங்களில் அவர்கள் சிறுபான்மையினராக்கபடுகிறார்கள். இதனால் தமிழர்கள் உள்ளூராட்சி சபைகளிலும், மாகாண சபைகளிலும், பாராளுமன்றத்திலும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுகிறது. இப்படியான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
  4. குடியுரிமையும் சமத்துவமும்: இலங்கை – இந்திய அரசுகளிடையே நடைபெற்ற நேரு-கொத்தலாவல்(1954), சிறிமாவோ-சாஸ்திரி(1964), சிறிமாவோ-இந்திரா காந்தி(1974) ஒப்பந்தங்கள் அனைத்துமே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழருக்கு காணியுரிமை, வீட்டுரிமை, வாழ்வாதாரம், கல்வி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் கூடிய முழுமையான குடியுரிமையைத் தருவதென இணங்கியிருந்தும்கூட அவை அனைத்துமே இலங்கை அரசின் பாரபட்ச நடவடிக்கைகளினால் முற்றாக உதாசீனம் செய்யப்பட்டுவிட்டன. அவர்களுக்கு மறுக்கப்பட்ட சமத்துவமும் குடியுரிமையும் முற்றாக வழங்கப்பட்டு அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பாரபட்சம் களையப்படவேண்டும்.
  5. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள்: பொதுவாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரயோகிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு அதன் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.
  6. தேர்தல் திருத்தம்: இலங்கைத் தீவில் பரந்து வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் இதர இன, அரசியல் குழுமங்களை பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் உரிய முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும். எனவே விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தொடர்ந்து பேணப்படவேண்டுமென்பதோடு அரசாங்கம் அதைத் தேர்தல் முறைமைக்குள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
  7. ஒரு நாடு ஒரு சட்டக் கருத்துருவாக்கம்: (அ). ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற கருத்துருவாக்கத்தை நடைமுறையில் கொண்டுவர அரசாங்கம் ஜனாதிபதி ஆணையமொன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் சட்டவாக்க உரிமை மத்திய அரசாங்கத்திடம் மட்டுமே இருக்கக்கூடியதாகவும் இதன் மூலம் அதிகாரப் பரவலாக்கம் நடைபெறுவதைத் தடுக்கவோ அல்லது இல்லாமல் செய்வதுவே இவ்வாணையத்தின் நோக்கம் (ஆ). இதன் மூலம் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது பொது வழமைச் சட்டங்களை அனுசரிப்பதன் மூலம் தமது கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாக்க முடியாது போய்விடும். எனவே இவ்வாணையம் முற்றாக ஒழிக்கப்பட்டு இங்கு வாழும் அனைத்து தேசிய இனங்களினதும் தனித்துவமும் உரிமைகளும் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்படவேண்டும்.


மேற்குறிப்பிட்ட 7 அம்சக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா.சம்பந்தன், பா.உ., இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர், நீதிபதி சீ,வி.விக்னேஸ்வரன் பா.உ., தமிழீழ விடுதலை அமைப்பின் தலைவர் அ.அடைக்கலநாதஹ்ன் பா.உ., தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.உ., ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கே.பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா ஆகிய ஏழு பேரும் கையெழுத்திட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியத் தூதரக்ம் மூலம் அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.