6 ஆவது வருடத்தை எட்டும் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்

நூற்றுக்கும் மேலான உறவினர்கள் பங்கு பற்றிய ‘காணாமலாக்கப்பட்டோருக்கான’ போராட்டம் ஒன்று இன்று (பெப். 20) கிளிநொச்சியில் நடைபெற்றது. ‘காணாமலாக்கப்பட்டோரின்’ உறவினர்களின் சங்கத்தினால் ஆரம்பிக்கப்படடுத் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இப்போராட்டம் தற்போது 2,190 ஆவது நாளை அண்மிக்கிறது. தமது உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இச்சங்கத்தின் அங்கத்தவர்கள் சார்பில் அதன் தலைவர் யோகராசா கனகரஞ்சனி அவர்கள் இன்று மீண்டும் தமது கோரிக்கையை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தி வலியுறுத்தினார்.

“இது உண்மைக்கும் நீதிக்குமான ஒரு போராட்டம். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்னரங்கில் இப் போராட்டத்தை நாங்கள் பெப்ரவரி 20, 2017 அன்று ஆரம்பித்து வைத்தோம். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாகாணங்களிலுமிருந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இதில் கலந்துகொண்டு வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36 ஆவது அமர்வு முதல நாம் எமது கோரிக்கையைச் சர்வதேச சமூகத்திடம் தொடர்ச்சியாகக் கோரி வருகிறோம். காணாமற்போன எமது உறவினர்களின் நிலை என்ன என்பதை அறிவதில் சர்வதேசமும் காலத்தை இழுத்தடித்து வருகிறது. அடுத்து வரும் அமர்விலாவது எமக்கான நீதி வழங்கப்படவேண்டும். ஆறு வருடங்களைக் கடந்து ஏழாவது வருடத்தில் அடி வைக்கும் எமக்கு இது மிகவும் துன்பகரமான ஒன்று. சர்வதேச சமூகம் இதை மேலும் இழுத்தடிக்காது உடனடியாக எமது இத்துன்பங்களுக்கு ஒரு முடிவை எட்டித் தரவேண்டும்” என திருமதி கனகரஞ்சனி ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.

“எமது உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமைக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தியாகவேண்டும். இதைச் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளே முன்நின்று செய்ய வேண்டும். பலநாடுகளில் இதுபற்றிப் பேசப்பட்டாலும் காத்திரமான முடிவொன்றும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த எமது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண யாரும் முன்வருவதாகத் தெரியவில்லை” என கனகரஞ்சனி மேலும் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மிரட்டல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுவதுபற்றிக் கேட்டபோது ” நாங்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யும்போது பல்வகையான தடைகளை எதிர்கொள்கிறோம். நாங்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யக்கூடாது என நீதிமன்றங்கள் மூலம் தடைகளைக் கொண்டுவருகிறார்கள். புலனாய்வு அதிகாரிகளால் நாம் மிரட்டப்படுகிறோம். ஆனாலும் இதில் பயப்படுவதற்கு எங்களுக்கு எதுவுமேயில்லை. எம்முன்னாலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும்வரை, காணாமற்போன எமது உறவினர்களை நாம் மீண்டும் சந்திக்கும்வரை எமது போராட்டம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரரின் ஊர்வலம் காணாமற்போனோர் அலுவகம் (OMP) வரை சென்று அதன் முன்றலில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தது. “எங்களுக்கு காணாமற்போனோர் அலுவலகம் தேவையில்லை; எங்களுக்கு நட்ட ஈடு தேவையில்லை” என்பது போன்ற சுலோகங்களுடன் இவ்வார்ப்பாட்டம் அங்கு நடைபெற்றது. (தி மோர்ணிங்)