Spread the love
எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 3
Tam Sivathasan B.Eng.
5G வலையமைப்பினால் ஏற்படும் நன்மை தீமைகள் | பாகம் 3 1

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் 5G வலையமைப்பின் பின்னாலுள்ள தகவல் தொழில்நுட்பத்தின் சில அடிப்படை விளக்கங்களை முதலாம், இரண்டாம் பாகங்களில் பார்த்தோம். தகவற் பசிகொண்டலையும் இன்றய உலகத்திற்குத் தேவையானவை – கட்டுக்கடங்காத தகவல், அதை இமைக்கும் நேரத்தில் கண்கள் முன்னால் கொண்டு வருதல் இரண்டுமே. 5G இந்த இரண்டையும் சாதிக்க வல்லது. ஆனால் அதன் பின் விளைவுகளென்ன?

ஒரு நெடுஞ்சாலையில் 4 ‘லேன்’ கள் இருப்பதற்கும் 24 ‘லேன்’கள் இருப்பதற்குமுள்ள வித்தியாசம், தடையற்ற, நம்பிக்கையான, வேகமான பயணத்தை மேற்கொள்ளலாம்; பெருந்தொகையான வாகனங்கள் ஏக காலத்தில் பயணம் செய்யலாம் எனப் பல.

தகவல் நெடுஞ்சாலையும் அப்படித்தான். எத்தனை ‘லேன்’களை நாம் அதிகரிக்கிறோமோ அவ்வளவுக்கு தொகையான தகவல்களையும், வேகமாகவும் அனுப்பலாம். இதையே நாம் bandwidth அதிகரிக்கிறது என்கிறோம். நெடுஞ்சாலை அகலமாகவும், அதில ‘லேன்’களையும் கொண்டிருக்கிறது என்பதற்காகவே உள்ளூர் தெருக்களில் ஓடுபவர்கள் கூட நெடுஞ்சாலையில் இறங்கி விடுகிறார்கள்.

5G என்ற புதிய நடைமுறையில், ‘மில்லி மீட்டர் அலைகள்’ என்னும் குறுகிய ரேடியோ அலைகள் மூலம் தகவல்கள் அனுப்பப்படுகிறது. இதன் அலைக்கற்றை 30–300 GHz வீச்சினுள் வருகிறது (குறைந்த வலு கூடிய அதிர்வு).

இவை குறுகிய அலைநீளங்களைக் கொண்டவையாகையால் (மைக்குரோ வேவ்ஸ்) அதிக தூரம் போக முடியாதவையென்றும், அதற்காக அதிக கோபுரங்களைக் குறுகிய இடைவெளிகளில் அமைக்க வேண்டுமென்றும் முன்னர் பார்த்தோம். இக் குறுகிய அலைகளால் கட்டிடங்களைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்வது கடினமென்றும், காற்றிலும், தாவர இலைகளிலும் உள்ள நீர்த்துணிக்கைகளினால் இந்த மைக்குரோ அலைகள் உறிஞ்சப்படுகின்றன என்பது இந்த 5G இலுள்ள பெரியதொரு குறைபாடு.

இதை நிவர்த்தி செய்து, அனுப்பப்பட்ட தகவல்கள் சீரழியாது போய்ச் சேருவதற்கு சிறிய கோபுரங்கள் பல (200 முதல் 1000 அடிகளுக்குள் ) அமைக்கப்பட வேண்டும். கட்டிடங்களில் பூ ட்டியிருக்கும் satellite dish கள் போல இவை கட்டிடங்களின் இருப்புக்கு அமைய நிறுவப்படும்.

5G ஆல் ஏற்படக்கூடிய நன்மைகள்
1. பெருமளவு தகவலைக் குறுகிய நேரத்தில் தரவிறக்க / ஏற்ற முடியும்

தகவல் நெடுஞ்சாலையிலும் அப்படித்தான். 3G, 4G என்று வசதிகளை மேம்படுத்திக்கொடுக்க அவற்றின் பாவனையாளர்களும் அதிகரித்துவிட்டார்கள். தகவல் நெடுஞ்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான அரசாங்கங்கள் முதல், அதில் பண்டங்களைச் சுமந்து செல்லும் பார வண்டிகளின் சொந்தக்காரர்கள் வரை (ரெலிகொம் நிறுவனங்கள்) எல்லோரும் இலாபமீட்டுகின்றனர். நுகர்வோருக்குப் பண்டம் விரைவாகவும், தொகையாகவும், தேவையானபோது கிடைக்கவும் செய்கிறது.

தற்போதிருக்கும் 3G, 4G தகவல் நெடுஞ்சாலைகளை 5G அகலமான bandwidth ஐக் கொண்டது. இதனால் இன்ரெர்னெட் நெடுஞ்சாலையில் (super highway) தகவற்பரிமாற்றம் தொகையாகவும், வேகமாகவும் நடக்கும் என்பதே எதிர்பார்ப்பு.

தற்போது பாவனையிலுள்ள 4G அகன்ற வலையமைப்பு (broadband communication) தரம் அதற்கு முன்னரிருந்த 3G யை விட 10 மடங்கு வேகமானது. தற்போதய 4G யின் வேகம் 100 Mbps. 5G யின் வேகம் அதைவிட 20 மடங்கு அதிகம் (20GBps). இந்த வேக, கொள்ளளவு அதிகரிப்பினால் பல நிறுவனங்கள் கேபிளையோ அல்லது ஃபைபர் ஒப்டிக் முறைகளிலோ தங்கியிராமல், நேரடியாக உங்கள் வீடுகளை நோக்கி தகவல்களைக் காற்றிலேயே அனுப்பி விடுவார்கள். உங்களுக்கும் அதிக சனல்கள் கிடைக்கும். வர்த்தகப் போட்டிகளினால் விலையும் மலிவாகும்.

2. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கிராமப்புற மக்கள் பலன் பெற முடியும்

கம்பியில்லாத தகவல் தொழில்நுட்பத்தினால் கிராமங்களில் வாழும் மக்கள் அதிக நன்மைகளைப் பெற்றவர்கள். அதிக சனத்தொகையுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் அறிவு, பொருளாதாரத் துறைகளில் பெரும் புரட்சியையே செய்தது. மொத்தத்தில், இத் தொழில்நுட்பம் அவர்கள் முன் உலகத்தையே விரித்து வைக்கிறது. வசதி குறைந்த கோடிக்கணக்கான மக்களின் வீடுகளைத் தேடி, வெளிநாட்டு வேலைகள் ஓடி வந்தன. கம்யூனிசமும், சோசலிசமும் கொண்டுவர முடியாத சமத்துவத்தைத் தொழில்நுட்பம் கொண்டுவந்தது.

Related:  இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது

கணனிகளைக் கையடக்கத்திற்குக் கொண்டுவந்த பின்னால் தகவல் தொழில்நுட்பமும் மனிதரைத் தொடர ஆரம்பித்துவிட்டது. 2020 இல் உலகத்தில் 4.68 பில்லியன் கைத் தொலைபேசிகள் பாவனையிலிருக்கும் என அறிக்கையொன்று கூறுகிறது. இதனால் பலன் பெறப்போவது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள மக்கள் தான்.

3. அபிவிருத்தியடைந்த நாடுகளில் உற்பத்தித் திறனைப் பெருக்கலாம்.

செயற்கை விவேகப் பிரயோகம் மூலம் ஆளில்லாத வண்டிகள், ஆளில்லாத விமானங்கள், தொழிற்சாலையில் வேலையாட்களுக்குப் பதிலாக ‘ரோபோட்’ எனப்படும் இயந்திர மனிதர்கள் என்று உற்பத்தித் திறனையும், பண்டங்களின் தரத்தையும் அதிகரிக்கலாம். இப்பொழுது கேபிளிலும், ஒளிக் குழாய்களிலும் (fibre optic) பாவனையாளருக்கு வரும் தகவல்கள் கூட (தொலைக் காட்சி) இனி கம்பிகளில்லாமல், காற்றில் ரேடியோ அலைகளின் வடிவத்தில் வரலாம். அதிக பாவனையாளர்களைகே கொண்ட வலையமைப்பில் அதிக வணிகர்களும் இணைவார்கள். எனவே நாட்டின் பொருளாதாரமம் இதனால் அதிகரிக்க முடியும்,

4. நிலமுடையவர்களுக்கு வருமானம்

5G ஒலிக்கற்றைகளின் ஒரு முக்கிய பண்பு அவை தொலை தூரத்துக்குச் செல்ல முடியாதவை. அதனால் குறுகிய இடைவெளிகளில் அதிக செல் கோபுரங்களை அமைக்கவேண்டி வரும். இதனால் வீடுகளின், காணிகளின் சொந்தக்காரர்கள் தங்கள் காணிகளின் துண்டொன்றைத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கலாம்.

5. மருத்துவப் பாவனை

என்ன இருந்தாலும், எங்கள் சொந்த உடலென்று வந்தவுடன் தீமைகளையெல்லாம் மறந்து இந்த 5G யை வரவேற்றேயாக வேண்டும்.

துல்லியம் என்று வரும்போது மருத்துவத்தில் தான் அதன் முழுமையான பலனைப் பார்க்க முடிகிறது. இப்போதெல்லாம் எக்ஸ்ட்றே எடுத்தவுடன் அதிலுள்ள கணனி பல கி.மீட்டர்களுக்கு அப்பால் வீட்டில் இருக்கும் வைத்திய நிபுணருக்கு (consulting radiologist) நோயாளியின் எக்ஸ்ட்றே பிம்பத்தைப் படமாக அனுப்பிவிடுகிறது. அவர் அதை ஆராய்ந்து நோயாளியின் ‘உடல் நிலைமையை’ அவரது குடும்ப வைத்தியருக்கு அனுப்பிவிடுகிறார்.

இதில் பாவிக்கப்படும் தொழில்நுட்பத்தின் இரண்டு அம்சங்கள் (குறைந்தது) புகழப்பட வேண்டியவை. ஒன்று படத்தின் துல்லியம், மற்றது அது நெடுந்தூரம் அனுப்பப்பட்டு (சில மருத்துவமனைகளில் அலுவலகத்தில் கடமைபுரியும் நிபுணர்களும் இருக்கிறார்கள்) சில நிமிட நேரங்களில் அந்த அறிக்கை உரிய இடத்துக்கு வந்து விடுவதற்கான வேகம்.

இனிமேல் டாக்டர்களுக்கே அவசியமில்லாமல் செயற்கை விவேகம் உங்களின் அறிகுறிகளைக் கொண்டே நோயைக் கண்டுபிடிக்க, மறு நிமிடமே ‘ட்றோண்கள்’ மூலம் மருந்தகம் வீட்டுக்கு மருந்தையும் அனுப்பிவிடப் போகிறது. முன்னேற்றமடைந்த ‘ஸ்மார்ட் ஃபோன்கள்’ இவை எல்லாவற்றுக்கும் வழி சமைக்கும். 5G அதைச் சாத்தியமாக்கும்.

6. அனைத்தும் ஓரிடத்தில்

5ஜி மூலம் திறந்து விடப்பட்ட நெடுஞ்சாலையில் ஏராளம் பேர் ஓடப்போகிறார்கள். பெரும்பாலான தகவல்கள் தற்போது காணொளி வடிவத்தியே வருகின்ற. அவை தங்கு தடையின்றி உங்கள் 4கே ஸ்மார்ட் போன் திரையில் துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் இன்னொருவரோடு பேஸ் ரைமில் கதைத்துக் கொள்ளுமளவுக்கு வேகம் அதிகரிக்கப் போகிறது. வீட்டில் 4கே மெகா திரையில் மிகவும் துல்லியமாகத் தியேட்டர்களில் பார்ப்பது போன்று ஸ்ட்ரீம் செய்து படங்களை பார்த்துக்கொள்ளலாம்.

Related:  விற்பனைக்கு: 'ஸ்பொட்' - றோபோ நாய் - US$ 74,500 மட்டுமே!
தீமைகள்
1. கோபுரமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

மேலே குறிப்பிட்டதைப் போல 5G வலையமப்பு திறமையாகச் செயற்படுவதற்கு அதிக செல் கோபுரங்கள் தேவைப்படும். இனி மேல் நம்மூரில், இப்பொழுது பள பளக்கும் கோவில் கோபுரங்களை விட அதிகமாக செல் கோபுரங்கள் உயரமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இப்போதே மின் காற்றாடிகள் வயலுக்குள் வருவதற்குப் போர்க்கொடி தூக்கும் செயற்பாட்டாளர்கள் செல் கோபுரங்களைக் கண்டவுடன் விழுந்து கும்பிடுவார்களென்று எதிர்பார்க்க முடியாது.

2. பழையன தவிர்த்தலும் புதியன வாங்கலும்
5G வலையமைப்பினால் ஏற்படும் நன்மை தீமைகள் | பாகம் 3 2
5G Networks can benefit the IoT, autonomous vehicle and mobile communications industry.

தற்போது பல எலெக்ட்றோனிக் கடைகளிலும் புதிய ‘அதி வேகம் கொண்ட’ பண்டங்களை அறிமுகம் செய்கிறார்கள். கம்பியூட்டர் மொனிட்டர்களின், கமராக்களின் துல்லியம் 4K என்றெல்லாம் சொல்லி விற்பார்கள். இவையெல்லாம் அவர்கள் சொன்னபடி தொழிற்பட வேண்டுமானால் அவற்றோடு இணைக்கப்படும் கணனிகள், அவற்றின் பென்பொருள், அவற்றுக்கு சமிக்ஞைகளைக் கொண்டுவரும் சாதனங்கள் எல்லாமே புதிய வரவுகளை ஏற்றுக்கொள்ளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிலர் இவற்றை 5G Ready, 4K Ready என்றவாறு கூறி விற்பார்கள். மொத்தத்தில், 5G பாவனைக்கு வந்ததும் நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் பெரும்பாலான சாதனங்கள் பாவனையற்றுப் போய்விடும்.

3. செயற்கை விவேகம்

செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI) ) என்பது இப்பொழுது பரவலாகப் பாவிக்கபடும் ஒரு அழகான சொல். ஏகப்பட்ட தரவுகளை எடுத்து வைத்து, மனிதர்களுக்கிணையான (அல்லது மேலான) தர்க்க ரீதியான, விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை நொடிப்பொழுதில் கையாண்டு ஒரு முடிவை உங்களுக்குத் தரவல்ல ஒரு பொறிமுறை இது.

இப் பொறிமுறை ஏற்கெனவே பழக்கத்தில் இருக்கிறது. கணனியில் நீங்கள் ஒரு பொருளைப் பற்றிய தகவலைத் தேடிய பின் அக் கணனியில் வரும் விளம்பரங்கள் எல்லாம் அப்பொருள் பற்றியதாகவே இருப்பதை அவதானித்திருப்பீர்கள். உங்கள் நடவடிக்கைகளை இரகசியமாகப் பதிவு செய்து உங்கள் குணாதிசயம் பற்றி எல்லாம் சொல்ல வல்லது இந்த நவீன ‘காண்டம்’. (காண்ட ஓலையை வாசிப்பதுபோல்).

5G வலையமைப்பினால் ஏற்படும் நன்மை தீமைகள் | பாகம் 3 3
Simplified view of the 5G Network Architecture.

இப்படிக் கோடிக்கணக்கான தரவுச் சேகரிப்பிற்கும், கணப்பொழுதில் அவற்றிடையே ‘முடிச்சுகளைப்’ போட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கும் படு வேகமாகத் தொழிற்படும் கணனியும், படு வேகத்துடன் வந்திறங்கும் தரவுகளும் அவசியம். ‘கூகிளாரின்’ ‘பெரிய புராணம்’ இப்படியான தரவுகளைக் கொண்டே காண்டமாக்கப்பட்டிருக்கிறது. காண்டத்தில் சாத்திரி சொல்வதைப் போலவே உங்கள் பெயரின் கால்வாசியைக் கொடுத்தாலே குடும்ப சரித்திரத்தைச் சொல்லிவிடும் கூகிளுக்கு வழியமைத்துக் கொடுத்தது 3G, 4G போன்ற தகவல் நெடுஞ்சாலைகள் தான். கூகிள் போன்ற ஒற்றர்கள் உங்களை வேவு பார்க்கும் அளவையும், வேகத்தையும் அதிகரிக்க இந்த 5G உதவப்போகிறது.

4. உடல் நலத்துக்குத் தீங்கு

செயற்பாட்டாளர், ஆராய்ச்சியாளர், சுகாதார பணியாளர் எனப் பலர் 5G பாவிக்கும் உயர் அதிர்வெண் அலைகளினால் உடலுக்குத் தீங்கு விளையுமென எச்சரிக்கிறார்கள். பல் சிறிய கோபுரங்கள் மக்கள் வாழும் வசிப்பிடங்களுக்கு மிக அருகில் நிறுவப்படுமாகையால் இவ்வலைகளின் தாக்கம் மனிதரில், விலங்குகளிலும் பாதமாகவே இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். அப்படியில்லை என்பதற்கு நீண்டகால ஆய்வுகள் செய்யப்படவில்லை. தினமும் பாவிக்கும் 5G அலையினால் ஏற்படும் கதிரியக்கம் உயிரினங்களில் மாற்றமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Related:  நிகோலா ரெஸ்லா | உலகுக்கு ஒளி தந்த இரண்டாவது சூரியன்

நாம் முன்னர் பார்த்த அலைக்கற்றை வடிவத்தில் மைக்குரோ வேவ் இற்கு அடுத்ததாக இருப்பது ‘காமா’ மற்றும் ‘எக்ஸ் (gamma ray and x-ray) கதிர்கள் தான். நீண்ட பாவனையில், இவை உடலுக்குத் தீமை விளைவிப்பன என்பது நிரூபிக்கப்பட்ட விடயம். எனவே 5G அலைகளும் நீண்டநாட் பாவனையில் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதில் சந்தேகமில்லை. இதே மைக்குரோ அலைகளைத் தான் நாம் உணவைச் சூடாக்கப் பயன்படுத்துகிறோம். ஆனால் வீடுகளிலுள்ள மைக்குரோ வேவிலிருந்து அலைகள் வெளியேறாமல் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் வரும் கதிர்களில் 5G யில் வருவதைவிட அதிகம் மைக்குரோ அலைகள் வருவதாகவும் நீண்டகாலம் சூரிய ஒளியில் குளித்தவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இருக்கவில்லை எனவும் மறு தரப்பு வாதிடுகிறது. எக்ஸ் கதிர்களைப் போல் மைக்குரோ கதிர்கள் மனித தோலையோ, எலும்பையோ துளைத்துப் போகவல்லனவல்ல. எனவே ஆபத்தில்லை என்கிறார்கள் அவர்கள்.

ஆனால் சூரியக் கதிர்களுக்கும் 5G க்குமுள்ள முக்கியமான வித்தியாசம் சூரியக் கதிர்கள் பரவலாக உடம்பில் படுகின்றன. அதே வேளை 5G கதிர்கள் குவிக்கப்பட்டு (beamforming) செறிவாக்கப்பட்ட நிலையில் நமது உடலில் படுகின்றன . எனவே ஏற்படும் விளைவுகள் பற்றி பரந்த அளவில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. உலக நாடுகளின் தரக்கட்டுப்பாடுகளைத் தீர்மானிக்குமளவுக்கு இன்னும் தரவுகள் கிடைக்கவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை இப்படிக் கூறுகிறது:

“பரந்தளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் குறைந்த அளவிலான மின்காந்த அலைகளினால் மனித உடல் நலத்திற்குகே கேடு விளைகிறதென்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை”

அதன் இன்னுமொரு அறிக்கையில், “ரேடியோ அலைகளின் தாக்கம் பற்றிய பரந்தளவு ஆய்வுகளை மேற்கொண்டு நாம் மெதுவாகவே நகரவேண்டியுள்ளது” என்று அது தெரிவித்துள்ளது.

5. தனி மனிதரின் பிரத்தியேகம்

தற்போது எமது தனிப்படட சுகாதாரம், பண வைப்பு, காப்புறுதி போன்ற பிரத்தியேக தகவல்கள் எங்கோ ஒரு கணனியில் (சேர்வர்) சேமித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. (வை கிப்பை பாவனையின் போது தவிர மற்ற வேளைகளில் அத் தகவல்கள் கம்பிகளூடு பயணம் செய்வதால் அவற்றைத் திருடுவது மிகச் சிரமம்.

5G அலைபரப்பில் அத் தகவல்கள் காற்றில் மிதக்கின்றன எனவே அவற்றைத் திருடுவது சுலபம். அவற்றின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

6. கணனி வைரஸ்

5G வலையமைப்பின் மூலம் எவ்வளவு விரைவாகத் தகவல்கள் பரிமாறப்படுகின்றனவோ அவ்வளவு விரைவாக வைரஸ்களும் பரவ வாய்ப்புண்டு,

Print Friendly, PDF & Email