IndiaNews & AnalysisSri Lanka

54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது, படகுகள் தடுத்து வைப்பு!

இலங்கையின் வட கடற் பிராந்தியத்தில் அத்துமீறிப் புகுந்த காரணத்தால் இலங்கை கடற்படை 54 இந்திய மீனவர்களைக் கைதுசெய்துள்ளது. புதனன்று, வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இக் கைதுகளின்போது மீனவர்களின் படகுகளையும் கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனரெனத் தெரிகிறது.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல்களில் மீன்பிடிப்பதனால் உள்ளூர் மீனவர்களின் வளங்கள் சுரண்டப்படுகின்றன எனவும் அதைப் பாதுகாக்க இலங்கையின் கடற்படை இப் பிராந்தியத்தில் அடிக்கடி ரோந்து செல்வதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் கோவிளான் கடற்கரையிலிருந்து சுமார் 3 கடலெல்லைகள் தொலைவில் கைது செய்யப்பட்ட இழுவைப் படகில் 14 மீனவர்கள் இருந்ததாகவும், 75 அடி நீளத்தையும், 22 அடி அகலத்தையும் கொண்ட உருக்கினாலான இப்படகு 280 குதிரைவலு கொண்ட இயந்திரத்தால் இயக்கப்பட்டதெனவும் இதனால் பெருந்தொகையான மீன்களை வாரி அள்ளிக்கொள்ள முடியுமெனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். இதைவிட, மன்னார், பேசாலையிலிருந்து 7 கடலெல்லை தொலைவில் 20 மீனவர்களும், முல்லைத்தீவிலிருந்து 7.5 கடலெல்லை தொலைவில் மேலும் 20 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.

இந் நடவடிக்கையின்போது 1030 கிலோ மீனும், வலையுபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என கடற்படை தெரிவிக்கிறது.

தரையோடு சேர்த்து வாரி அள்ளும் இவ்விழுவைப் படகுகள் சிறிய மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள்வரை சகல உயிரினங்களையும் அகற்றிவிடுவதால் இப்பிராந்தியத்தின் சூழற் சமநிலை பாதிக்கப்படுகிறது என நீண்டகாலமாக இலங்கை மீனவர்களும், சூழற் செயற்பாட்டாளர்களும் முறையிட்டு வந்தனர்.

இதுபற்றி இலங்கை கடற்படை இந்திய அதிகாரிகளிடம் பலதடவைகள் முறைப்பட்டிருந்தனரெனவும் கூறப்படுகிறது.

இதே வேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இந்தியா தம்மை ஏமாற்றிவிட்டது என விமல் வீரவன்சா போன்ற தென்னிலங்கை சிங்களத் தேசியவாதிகள் ஏற்கெனவே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.