52 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து சஜித் கட்சித் தலைவராகினார்!
ஜனவரி 17, 2020
நேற்று நடைபெற்ற வாக்களிப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் 52 பாராளுமன்ற உறுப்பினரின் வாக்குகளுடன் சஜித் பிரேமதாச கட்சித் தலைமையைக் கைப்பற்றியுள்ளார். கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவரது நியமனம் உறுதிசெய்யப்படும் என பா.உ. ரஞ்சித் மட்டும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“நியமனம் உறுதிசெய்யப்பட்டவுடன் மற்றய கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணியொன்றை உருவாக்குவதன் மூலம் தேர்தலை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, டிலிப் வெட்டாராச்சி உட்பட்ட பலரும் இதை உறுதிப்படுத்தினர்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரேமதாசாவைப் பிரேரிக்காத பட்சத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பிரேரித்துத் தெரிவு செய்துள்ளோம் எனச் சரத் பொன்சேகா தெரிவிதார். “நாங்கள் அனைவரும் தொடர்ந்தும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களாக இருந்து கூட்டணி ஒன்றை உருவாக்குவது பற்ற யோசிக்கவிருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் சானத்தின்படி, கட்சியின் வருடாந்த மாநாட்டில் மட்டுமே கட்சித் தலைவர் மாறுவது வழக்கம் எனவும் இபடியான வாக்கெடுப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் சில கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்திருந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் நியமனத்தைக் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே.
அதே வேளை, கட்சித் தலைமைப் பதவியை இழந்ததும், வங்கி ஊழலைக் காரணம் காட்டி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்படலாம் என்ற காரணத்தினால் தான் அவர் பதிவியைத் துறக்க மறுத்து வந்தார் எனவும் செய்திகள் கசிந்திருந்தன.