• Post category:TECHNOLOGY
  • Post published:September 22, 2020
Spread the love

The Cybertruck is Tesla’s attempt to transform the pick-up truck market
ரெஸ்லாவின் ‘சைபர்ட்றக்’

செப்டெம்பர் 22, 2020: மின்வலுவில் இயங்கும் வாகனங்களின் பாவனைக்காக, 500% அதிக வலுவை வழங்கவல்ல புதிய மின்கலங்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், இது மின்வலு வாகனத் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறதென்றும், ரெஸ்லா நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இலான் மஸ்க் இன்று அறிவித்துள்ளார்.

ரெஸ்லாவின் ‘பற்றறி நாள்’ என்ற நிகழ்வில் பேசும்போது, “மின்வலு வாகனங்களின் செயல்திறனைப் பாரிய அளவில் முன்னேற்றும் அதே வேளை, வாகங்களின் விலை குறைப்புக்கும் அது வழி வகுக்கும்” என மஸ்க் தெரிவித்தார்.

மின்வலுவில் இயங்கும் வாகனங்களில் நம்பகத்தன்மையுடன் செயற்படாத ஒரு முக்கிய அங்கமாக மின்கலம் (battery) இருப்பதனால், எரிபொருளில் இயங்கும் வாகனங்களை, மின் வாகனங்களால் இன்னும் மாற்றீடு செய்ய முடியவில்லை. செயல்திறனும், நம்பகத்தன்மையும் கொண்ட மின்கலங்களை வடிவமைப்பதில் உலகில் பல விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் செல்வந்தர்களில் ஒருவரும், எண்ணை நிறுவன மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் மின்வாகனங்களைத் தயாரித்து புரட்சி செய்தவருமான இலான் மஸ்க் தனது இலக்கை நோக்கி அயராது உழைத்து வருகிறார்.

தற்போது பாவனையில் இருக்கும் அநேகமான, மீள-வலுவேற்றும் மின்கலங்கள் (re-chargeable) லித்தியம்-அயன் வகையைச் சார்ந்தவை. இவற்றின் செயல்திறன், வலுவேற்ற எடுக்கும் நேரம், எத்தனை அம்பியர் மின்சாரத்தை அது வழங்கும், எவ்வளவு நேரத்துக்கு வழங்கும், குளிர் காலத்தில் அதன் செய்ல திறனில் குறைபாடு ஏற்படுமா, வாகனத்தின் எடை அதிகரிக்க அதன் செயல்திறனில் குறைபாடு ஏற்படுமா, மின்கலத்தின் உள்ளே வெப்பம் ஏறி வெடித்துச் சிதறுமா என்கின்ற பல அனுபவரீதியான பிரச்சினைகளை முன்வைத்து மின்கலங்களின் வடிவமைப்பை முன்னேற்றப் பலரும் முயற்சிகளை மேர்கொண்டு வருகிறார்கள்.



இலான் மஸ்க் அவர்களால் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், தற்போது பாவனையிலுள்ள மின்கலங்களை விட, 500% அதிக வலுவைத் தருமெனக் கூறியுள்ளார். அத்தோடு, இப் புதிய மின்கலங்களின் தயாரிப்புச் செலவு 56% த்தால் குறைக்கப்படுவதால் பாவனையாளர்கள் US$25,000 இற்கு வாகனங்களை வாங்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் எதிர்வு கூறுகிறார்.

இதைச் சாதிக்க வேண்டுமானால், சுரங்கத்தொழிலிலிருந்து பாவிக்கப்பட்ட மின்கலங்களை மீள்சுழற்சி செய்வதுவரை நாம் எமது சிந்தனைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என அவர் கூறுகிறார்.

மின்கலத் தயாரிப்பில் மிக முக்கிய பாகமான லிதியம் என்ற உலோகம் நிலத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட வேண்டும். இச் சுரங்க அகழ்வை ரெஸ்லா இனிமேல் தானே மேற்கொள்ளப் போகிறது என்கிறார். “நிலத்தின் அடியில் தேவைக்கும் அதிகமான லிதியம் இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லிதியத்தின் மூலம் மட்டும், இங்கு ஓடும் அத்தனை வாகனங்களையும் மின்வாகனமாக மாற்றி விடலாம்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஆனால் ஒன்று – இத் தொழில்நுட்பம் இன்னும் குறைந்தது, இரண்டு வருடங்களுக்குப் பாவனைக்கு வராது.

ரெஸ்லா, தற்போது மொடெல் S, மொடெல் 3, மொடெல் X, மொடெல் Y ஆகிய நான்கு வகையான மின் வாகனங்களைத் தயாரிக்கிறது. மேலும் பலவகைகளுக்கான திட்டங்களையும் வைத்திருக்கிறது. ‘ரெஸ்லா செமி’ என்ற பெயரில் ஒரு பார வாகன வகையும், ‘சைபர்ட்றக்’ என்ற ‘பிக்கப்’ வகையும் தற்போது தயாரிப்பில் உள்ளன.

Print Friendly, PDF & Email