Art & LiteratureBooksIndia

44 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் ஆரம்பம்


  • 650 சாவடிகள்
  • காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை திறப்பு
  • மார்ச் 9 வரை

44 வது வருடாந்த புத்தகக் கண்காட்சியை சென்னையிலுள்ள நந்தனத்துக்கு அருகாமையிலுள்ள வை.எம்.சீ.ஏ. அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்ச்செல்வம் புதனன்று (25) திறந்து வைத்தார்.

வருடா வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கல் திருநாளோடு தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்களினால் ஒழுங்குசெய்யப்படும் இக் கண்காட்சி, கோவிட் தொற்றுக் காரணமாக இம்முறை பெப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சி 2021

“இந் நிகழவை ஆரம்பித்து வைக்கும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியமைக்காக நான் நன்றி கூறுகிறேன். இவ் விழாவுக்கு வருபவர்கள், வெறுமனே சாவடிகளைப் பார்த்துவிட்டுச் செல்லாமல் புத்தகங்களை வாங்கி அவற்றில் கூறப்படும் நற் கருத்துக்களை வாழ்வில் தினமும் கடைப்பிடிக்க வேண்டும்” என நிகழ்வை ஆரம்பித்து வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக இவ்வருட விழா பின்போடப்படலாம் என வதந்திகள் பரவியிருந்ததாகவும் அப்படியால்லாது நிகழ்வு நடப்பது குறித்து தான் மகிழ்வடையதாகவும் அனைத்து கோவிட் விதிகளும் பின்பற்றுப்படுமெனவும் அமைப்பாளர் பிரதிநிதி தெரிவித்தார். 650 சாவடிகளைக் கொண்ட இக் கண்காட்சி காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை, மார்ச் 9 ம் திகதிவரை நடைபெறும்.மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் பேசுகையில், தான் நாளொரு புத்தகத்தைப் பரிந்துரைக்கப் போவதாகவும், அவற்றை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஊட்டும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். பல்துறை விற்பன்னரான கமல் ஹாசன் ஏற்கெனவே ‘மையம்’ என்றொரு சஞ்சிகையை வெளியிட்டு வருவதும் அதன் பெயரையே தனது கட்சிக்குச் சூட்டியுள்ளதும் தெரிந்ததே.

“தொலைக் காட்சி போன்ற தொழில்நுட்பங்களின் வரவினால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது. சிலர் கிண்டிள் போன்ற கருவிகளில் வாசிக்கிறார்கள். இச் சூழ்நிலையில், புத்தகக் கண்காட்சி அவசியமா என மக்கள் கேட்கலாம். அத் தேவை இன்னும் இருக்கிறதென்றே நான் கூறுவேன். அறிவைக் கொண்டாடும் எமது நீண்டகால வரலாற்றை நாம் கொண்டாட வேண்டும். பணம் பண்ணுவது மட்டுமே இந் நிகழ்வுகளின் பின்னாலுள்ள காரணமல்ல. தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி அறிய விரும்பும் ஒருவர் இப் புத்தகக் கண்காட்சிக்கு ஒருமுறையாவது வந்து போகவேண்டும். இம் மொழியில் எத்தனையாயிரம் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதையும், பல தலைப்புகளிலும் எத்தனை இலட்சம் நூல்கள் நம் அழகிய தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பதையும் அப்போதுதான் ஒருவரால் அறிந்துகொள்ள முடியும். வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், கலைஞர்கள் சந்தித்து அளவளாவும் ஒரு கலாச்சாரத் திருவிழா இது. கோவா திரப்பட விழா, ஜைப்பூர் இலக்கிய விழா ஆகியவற்றைப் போல் சென்னை புத்தகக் கண்காட்சியும் ஒரு பெரிய விழா” என கமல் ஹாசன் தெரிவித்தார்.

புதுமைப் பித்தனின் சிறுகதைகளை இன்றய நாள் வாசிப்புக்கான நூலாக அவர் பரிந்துரைத்தார்.