433 | 2022 இல் இலங்கையில் யானைக் கொலைகள் உச்சம்
மனிதர்களால் யானைகள் கொல்லப்படுவது சென்ற வருடம் குறைந்திருக்கிறது ஆனால் கண்டெடுக்கப்படும் யானைகளின் அழுகிய உடல்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன
அரச வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனெரல் சந்தன சூரியபண்டார
இலங்கையின் வரலாற்றிலேயே அதிக உச்சம் யானைக் கொலைகள் நடைபெற்றிருப்பது 2022 ஆம் ஆண்டு என வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. யானைகளுக்கும் மனிதர்களுக்குமான வாழ்க்கைப் போராட்டமே இதற்குக் காரணம் எனவும் இதன் காரணமாக கடந்த வருடம் மட்டு (2022) 433 யானைகளும் 145 மனிதர்களும் கொல்லப்பட்டிருப்பதாக இச் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இவற்றில் 58 துப்பாக்கிச் சூட்டினாலும், 55 வாய்க் குண்டுகளாலும், 47 மின்சார அதிர்ச்சியினாலும், 14 ரயில்களினால் மோதப்பட்டும், 5 விபத்துக்களினாலும் 1 நஞ்சூட்டப்பட்டும் கொல்லப்பட்டிருக்கின்றன. இதே வேகத்தில் போனால் இன்னும் 25-30 வருடங்களில் இலங்கையில் யானைகள் முற்றாக அழிந்துபோகும் நிலை ஏற்படுமென இச் சபையின் தலைவர் ஜெஹான் கனகரட்ணா தெரிவித்துள்ளார்.
யானைகளின் உணவிடங்களும் உறைவிடங்களும் அழிக்கப்பட்டு வருவதால் அவை உணவு தேடி மனிதக் குடியிருப்புக்களை நோக்கி வருவதனாலேயே இந்நிலை ஏற்படுகிறது. அதே வேளை மனிதர்களால் யானைகள் கொல்லப்படுவது சென்ற வருடம் குறைந்திருக்கிறது எனவும் ஆனால் கண்டெடுக்கப்படும் யானைகளின் அழுகிய உடல்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன எனவும் அரச வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனெரல் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார். யானைக் கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் தமது திணைக்களம் சரியாகவே செயற்பட்டு வருவதையே இது காட்டுகிறது எனவும் புதிதாக அபிவிருத்தி செய்யப்படும் பகுதிகளிலேயே அதிக யானைகளின் மரணம் ஏற்பட்டிருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை பிறக்கும் யானைக்குட்டிகளில் 54% பட்டினியால் மரணமடைகின்றன என யால தேசிய வனத்தில் இயற்கை பாதுகாப்பு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. யானை-மனித பிணக்குகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய செயற் திட்டமொன்றை உருவாக்கி வருவதாகவும் இதன் படி, நெல் வயல்களைச் சுற்றிப் பருவகாலங்களில் வேலிகளை அமைத்தல், கிராமங்களைச் சுற்றி வேலிகளை அமைத்தல், மின்சார வேலிகளை அகற்றுதல் ஆகிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கத்தின் தரப்பில் கலாநிதி சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். (தி சண்டே மோர்ணிங்)