அமைச்சர்களுட்பட 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலக முடிவு?

  • அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரியா பொது வேட்பாளர்?
  • நிறைவேற்று ஜனாதிபதை முறைமையை ஒழிக்க மீண்டும் முயற்சி?
வண. மாதுலுவாவே சோபித தேரர்

மக்களிடையே விரைவாகச் செல்வாக்கை இழந்துவரும் அரசாங்கத்திலிருந்து அமைச்சர்கள் உட்பட்ட 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளனரென உறுதிப்படுத்தமுடியாத செய்தியொன்று தெரிவிக்கிறது.

இந்நகர்வின் பின்னாலுள்ள முக்கியஸ்தர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பல பங்காளிக் கட்சிகளுடனும், சில் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியாவின் தலைமையின் கீழ் அமையவிருக்கும் புதிய அணியில் இவர்கள் இணைந்துகொள்ளவிருப்பதாகவும் தெரியவருகிறது.

வண. மாதுலுவாவே சோபித தேரர் உருவாக்கிய நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் (National Movement for a Just Society (NMJS)) என்ற சிவில் சமூக அமைப்பின் தற்போதய தலைவரான கரு ஜயசூரியாவின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைத்து ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு இவ்வணி திட்டமிடுகின்றது எனக் கூறப்படுகிறது.2015 ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் செயற்பட்ட கோட்டை விகாரதிபதி சோபித தேரரின் (1942-2015) மரணத்திற்குப் பிறகு அவர் உருவாக்கிய தேசிய இயக்கத்திற்குத் தலைவராக கரு ஜயசூரியா இருக்கிறார். அவரின் தலைமையில் உருவாக இருக்கும் மூன்றாவது அணியின் கீழ் பலர் இணையவுள்ளதாகவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இம் மூன்றாவது அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் 100 நாட்கள் மட்டுமே அப்பதவியை வகிப்பார் எனவும் அதற்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டுவிடுமெனவும் இம் மூன்றாவது அணியின் பின்னாலுள்ள திட்டமிடல் குழு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ‘100 நாள் ஜனாதிபதிக்கான’ வேட்பாளரைத் தேர்ந்தெடூக்கும் விடயத்தில் பல எதிர்க்கட்சிகளிடமும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் இவ் வேட்பாளர் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நம்பத் தகுந்தவராக இருக்கவேண்டுமென்பதில் இத் திட்டமிடல் குழு கவனமாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இறுதியில் கரு ஜயசூரியவைப் பொது வேட்பாளராக நிறுத்தும் எண்ணத்தில் பலரும் உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே எண்ணத்துடனே, நவம்பர் 21, 2014 இல் மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இம்முறையும் பல சிவில் சமூக அமைப்புகள் பின்னணியில் செயற்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

பசில் ராஜபக்ச அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பல முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் குறிப்பாக யுகதனாவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ததன்மூலம் இலங்கையின் மின்விநியோகத்தைத் தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன என்ற குற்றச்சாட்டில் பல தொழிற்சங்கங்களும் அரசாங்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் ஆளும் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் உருவாகிவருகின்றன எனவும் புத்தாண்டில் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடுமென தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெஹ்ரிவிக்கின்றனர்.