400 அடிகளுக்கு மேலிருந்து போட்ட கிரிக்கெட் பந்தைப் பிடித்து அவுஸ்திரேலிய தமிழர் கின்னெஸ் சாதனை!

அதி உயரத்திலிருந்து வீசப்படும் கிரிக்கெட் பந்தைக் கைகளினால் பிடிக்கும் போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிமோதி ஷனன் ஜெபசீலன் கின்னெஸ் உலகசாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறார்.



393 அடிகள் 3 அங்குலம் உயரத்திலிருந்து ‘ட்றோன்’ மூலம் போடப்பட்ட இப்பந்தைப் பிடித்ததன் மூலம் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர், 2019 இல் நடைபெற்ற போட்டியில், பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ்டன் போம்கார்ட்னெர் என்பவர் 374 அடிகள் உயரத்திலிருந்து போடப்பட்ட பந்தைப் பிடித்ததன்மூலம் உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

2019 இல் நடைபெற்ற போட்டியிலும் ஜெபசீலன் பங்குபற்றியிருந்தாலும் அப்போது தனது விரலொன்றை முறித்துக்கொண்டதனால் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது.

“நான் சிறுவனாக இருக்கும்போதே கின்னெஸ் உலக சாதனையொன்றை நிகழ்த்தவேண்டுமென்ற கனவு என்னிடமிருந்தது” என இவ்வெற்றிபற்றி ஜெபசீலன் தெரிவித்துள்ளார் (UPI)