4 நிமிடங்களில் பெறுபேறுகளைத் தரும் கொறோணாவைரஸ் பரிசோதனை – சீனா தயாரிக்கிறது

கொறோணாவைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து நான்கே நிமிடங்களில் பெறுபேறுகளைத் தரும் பரிசோதனைமுறையொன்றை சீனா தயாரித்திருக்கிறது என அறிவித்திருக்கிறது. தற்போது பாவனையிலிருக்கும் பி.சீ.ஆர். (Polymerase Chain Reaction (PCR)) பரிசோதனை மிகத்துல்லியமானதாக இருந்தாலும் அது ஆய்வுகூடத்தில் மட்டுமே செய்யப்படவேண்டுமென்பதால் பெறுபேறுகளைப் பெறப் பல மணித்தியாலங்கள் எடுக்கிறது.

ஷாங்காய் மாகாணத்திலுள்ள்ள ஃபியூடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இப் பரிசோதனை முறையில் பருத்திக்குமிழில் எடுக்கப்படும் மனித சுவாச, தொணடைக்குழிப் பதார்த்தங்களிலுள்ள மரபணுக்கூறுகளை மைக்குரோ எலெக்ட்றோணிக்ஸ் கருவிகள் மூலம் ஆராய்ந்து சில நிமிடங்களிலேயே பெறுபேறுகளைப் பெறமுடியுமென ‘நேச்சர் பயோ̀மெடிக்கல் எஞ்சினியரிங்’ (Nature Biomedical Engineering) என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள கட்டுரையொன்று தெரிவிக்கிறது.

காவிச்செல்லக்கூடிய சிறிய கருவியொன்றில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்றோமெக்கானிக்கல் பயோசென்சர் என்னும் ஒருவகை முகரும் கருவி சளிப்பதார்த்தத்திலிருக்கும் RNA வைரஸ்களை நான்கு நிமிடங்களுக்குள் கண்டுபிடித்துவிடுவதாக இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஷாங்காய் மாகாணத்தில் கொறோணாவைரஸ் தொற்றுக்குள்ளாகிய 33 பேர்களில் இப் பரிசோதனைகளையும் அதே வேளை ஒரே காலத்தில் செய்யப்பட்ட PCR பரிசோதனகளையும் செய்து பெறுபேறுகள் ஒப்பிடப்பட்டபோது இரண்டும் 100% ஒத்துப்போயிருந்ததாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

கொறோணாவைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், இன்ஃபுளுவென்சா போன்ற கோவிட் அல்லாத நோயாளிகள் மற்றும் சுகதேகிகள் ஆகிய 54 பேரின் சளிப்பதார்த்தங்களை ஆராய்ந்தபோது இப்பெறுபேறுகள் பெறப்பட்டன எனவும் அதே வேளை எந்தவொரு சளிமாதிரியையும் அது தொற்று எனப் பொய்யாக அடையாளம் காணவில்லை (false positive) எனவும் இவ்விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது ஆரம்ப நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் (prototype) இக்கருவி பெருமளவில் தயாரிக்கப்படும்போது விமான நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் வைத்துப் பரிசோதனை செய்யக்கூடியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது நடைமுறையிலிருக்கும் PCR பரிசோதனைகளைச் செய்ய சளிப்பதார்த்தங்கள் ஆய்வுகூடத்துக்கு எடுத்துச்செல்லப்படவேண்டியுள்ளன. பல நாடுகளில் இப்படியான ஆய்வுகூடங்கள் வெகு குறைவாகவே உள்ளன. அதே வேளை தற்போது நடைமுறையிலிருந்துவரும் ‘றப்பிட் அன்ரிஜென் ரெஸ்ட்ஸ்’ (Rapid Antigen Tests (RAT)) எனப்படும் பரிசோதனை எப்போதும் நம்பகரமான முடிவுகளைத் தருவதில்லை. இதனால் அறிகுறிகளைக் காட்டும் பலரும் PCR பரிசோதனைகளைச் செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள்.

தற்போது அதிகளவு பரிசோதனைப் பொதிகளைத் தயாரிக்கும் நாடாக சீனாவே இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் அது $1.6 பில்லியன் பெறுமதியான பொதிகளை ஏற்றுமதி செய்திருக்கிறது. முதல் (நவம்பர்) மாதத்திலிருந்து இது 144% அதிகரித்திருக்கிறது.