‘3D-பிறிண்ட்’ மூலம் தயாரிக்கப்படும் இறைச்சி
தாவரக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான ‘Redefine Meat’ ஐரோப்பாவில் தனது வியாபார முயற்சிகளை விஸ்தரித்து வருகிறது. இந்த வருட முடிவிற்கிடையில் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உணவகங்களில் இம் ‘மாமிச’ உணவை நீங்கள் உண்ண முடியும்.
இஸ்ரேல், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே உணவகங்களில் பரிமாறப்பட்டுவரும் இவ்விறைச்சி சோயா, பயற்றுப் புரதம், பீற்றூட், நொதியங்கள், தேங்காய்க் கொழுப்பு ஆகியவற்றிக் கொண்டு 3D பிறின்டர்கள் மூலம் வார்க்கப்படுகிறது. விரும்பிய சுவையோடும், பருமனிலும், நிறத்திலும் கணனியில் புரோகிராம் செய்யப்பட்டு பிறிண்டரில் வார்த்தெடுக்கப்படும் இவ்விறைச்சி அடுப்பில் வேகவைத்து எடுக்கப்படும்போது உண்மையான மாட்டிறைச்சியை ஒத்த சுவையுடன் இருக்கிறது எனப்படுகிறது.
இதுவரை இப்படியான செயற்கை இறைச்சி சொஸேஜ் (sausage) , ஹாம்பேர்கர் (hamburger) மற்றும் அரைத்த இறைச்சி (ground beef) போன்ற மாற்றுணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது Redefined Meal என்ற இஸ்ரேலிய நிறுவனம் முதன் முதலாக 150 உணவகங்களுக்கு இவ்விறைச்சியை வழங்கி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் அடுத்த சில வருடங்களில் 5 தொழிற்சாலைகளை நிறுவ இன் நிறுவனம் தயாராகி வருகிறது. அதே வேளை அமெரிக்காவைச் சேர்ந்த Beyond Meat, Impossible Foods மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த Novameat ஆகிய நிறுவனங்களும் இப்படியான 3D பிறிண்ட் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளன.