BusinessColumnsScience & Technology

3AxisLabs|யாழ். தகவல் தொழில்நுட்ப சமூகத்திற்கு மேலுமொரு வருகை

வளரும் வடக்கு-8

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா


யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) ஏனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங், கை முழுவதும்தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது புதிய படைபுக்களையோ அல்லது பண்டங்களையோ இங்கு காட்சிப்படுத்தவில்லை. மாறாக அது நமது சமூகத்திலிருந்து முளைத்தெழும் இளையதலைமுறையினரையும் அவர்களது கூட்டு முயற்சிகளையுமே காட்சிப்படுத்துகிறது. பலதடவைகளில் போட்டி முடிவில் இவர்களது படைப்புக்கள் பயனளிக்காமல் போய்விடுவதுண்டு எனினும் அவற்றை உருவாக்கிய குழுவினர் தொடர்ந்தும் வேறுபல முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை ஈட்டிவருவது இந் நிகழ்வுக்குப் பெருமை சேர்ப்பதாகும். 3AxisLabs என்னும் நிறுவனம் இப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்ட படைப்பு மட்டுமல்ல வெற்றிகரமாக இயங்கிவரும் வியாபார முயற்சியுமாகும்.

Busseat.lk

இ-வ: 3AxisLabs ஸ்தாபகர்கள்: பிரசாந்த், நிரோஜன், சாஹித்யன்

Busseat.lk என்ற தனியார் பஸ்சேவை பயணச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்யும் சேவையை வழங்கும் இணையத்தளத்தை எடுத்துக் கொள்வோம். இது 2014 இல் நடைபெற்ற, YGC போட்டித் தொடரின் மூன்றாவது நிகழ்வில் (YGC3) பங்குபற்றி வெற்றியீட்டிய ஒரு இளைஞர் குழுவின் வெற்றிக் கதை. ஐந்து பேரைக் கொண்ட இக்குழுவிலிருந்து மூவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றச் சென்றுவிட்டார்கள். ஒருவர் PhD மேற்படிப்பை மேற்கொள்வதற்கெனச் சென்றுவிட்டார். இறுதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் அக் குழுவின் தலைவரான பிரசாந்த் சுபேந்திரனுக்கு கொழும்பிலுள்ள மிகவும் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO) பதவிக்கான அழைப்பு வந்தது. ஆனாலும் அப் பதவியை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு Busseat.lk நிறுவனத்தை ஆரம்பித்தார்.

YGC3 நிகழ்வின் வழிகாட்டிகளில் ஒருவரும், YGC நிறுவனத்த்தின் ஆலோசகர்கருமான ஜெஸ்டன் நிரோஜன் 3AxisLabs நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களில் ஒருவராவார். பிரசாந்தின் குழுவினருக்கு அவர் வழிகாட்டியாக (mentor) இருக்காவிடினும், அக்குழுவின் நடவடிக்கைகளை உற்று அவதானித்த ஜெஸ்டன குறிப்பாக ஒரு விடயத்தை அவதானித்தார். அதாவது, காட்சிப்படுத்தலின்போது பிரசாந்தின் கவனம் தொழில்நுட்பத்தில் எழுந்த சவால்களை எதிர்கொள்வதை விடவும் அதன் வியாபார முன்னேற்பாடுகள் குறித்த சவால்கள் மீதே குவிந்திருந்தது. பின்னர் ஒருநாள், வெள்ளவத்தையில் நிரோஜன் பிரசாந்தைச் சந்திக்கும் சந்த்ர்ப்பம் நேரிட்டபோது பிரசாந்தின் கோரிக்கையை ஏற்று அவரோடு இணைந்து செயற்பட இணங்கிக்கொண்டார் ஜெஸ்டன்.

இச் சத்திப்பைத் தொடர்ந்து கொழும்பின் பிரபலமான நிறுவனமான Hsenid இல் பணிபுரிந்துகொண்டிருந்த நிரோஜன் தன் பதவியைத் துறந்துவிட்டு பிரசாந்துடன் சேர்ந்து தனது கனவுப் பயணத்தில் காலடி எடுத்து வைத்தார். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை, வெள்ளிகளில் காலை 7 முதல் பி.ப. 3 மணிவரை, சனி ஞாயிறு என்று வாரம் முழுவதும் முழுநேரமாக இருவரும் உழைத்தனர். சமைப்பதற்கோ உடை அலங்காரத்திற்கோ இருவருக்கும் நேரமில்லை. வெள்ளவத்தை கடைகளே அவர்களுக்கு உணவளித்தன. Busseat.lk முகிழ்த்தது. அதில் இணைந்துகொள்ளுமாறு கொழும்பிலுள்ள தனியார் சொகுசு வாகன உரிமையாளர்களிடம் வேண்டிக்கொண்டனர். அவ்வப்போது சினிமாவுக்கும் அழைத்துப்போவது வழக்கமாகியது. மே 2015 இல் Busseat.lk விற்கான மென்பொருள் தயாரிப்பு ஆரம்பமாகியது. ஐந்தே மாதங்களின் பின்னர் அதே வருடம் ஆகஸ்ட்டில் Busseat.lk தனது சேவைகளை ஆரம்பித்தது.

தனது மொறட்டுவ பல்கலைக்கழகத் தோழர்கள் நவநாகரீக ஆடைகளை அணிந்துகொண்டு குளிரூட்டப்பட்ட கொழும்புக் கோபுர அறைகளில் பணிபுரியும்போது தான் மட்டும் வியர்வையில் தோய்ந்து முதலாளிகளின் படிகளில் ஏறி இறங்குவதைப்பற்றி பிரசாந்த் முகச்சுழிப்போடு கூறிக்கொள்வார். பஸ் முதலாளிகளைத் தமது சேவையயில் இணைத்துக்கொள்வது ஏறத்தாழ இயலாமலேயே இருந்தது. பொதுவாக தொழில்நுட்ப அறிவிலிகளாக இருந்த அவர்கள் அன்னியமாக இருந்த இச்சேவையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இலங்கையில் இருந்த 20 பஸ் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக மறுப்புத் தெரிவித்துவிட்டன. அதன் பின்னர நோர்வேயிலிருந்து இலங்கையில் சொகுசு வாகனசேவை ஒன்றை நடத்திக்கொண்டிருந்த தமிழர் ஒருவரை அணுகினார்கள். ஆரம்பத்தில் தன்னிடமுள்ள ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு ஆசனங்களை அவர் Busseat.lk வுக்கு வழங்கினார். இதைப் பார்த்த இதர முதலாளிகள் பலரும் படிப்படியாக Busseat.lk யிற்குப் படையெடுத்தனர். இவர்களது வரவுடன் Busseat.lk யின் மென்பொருள் அபிவிருத்தியும் வளர்ச்சியடைந்தது. வாகன சேவைகளின் பாதைகளையும் நேர-கால அட்டவணைகளையும் செவ்வனே நிர்வகிக்க Busseat.lk யின் மென்பொருள் அவர்களுக்கு மிகவும் உதவியது. பயணிகளும் முகவர்களும் ஆசனங்களை முற்கூட்டியே பதிவுசெய்ய Busseat.lk யின் சேவை உதவியது.

குறைந்தபட்ச சாத்தியப் பண்டம் (Minimum Viable Product (MVP))

தலைப்பு குழப்பமாக இருந்தாலும் கருத்து இதுதான். ஒரு பண்டத்தை -இவ்விடயத்தில் ஆசன ஒதுக்கீடு – தெரிவுசெய்யும்போது அத் தேர்வு முறையை எது இலகுவாக ஆக்குகிறதோ அப்பண்டத்தையே மக்கள் விரும்புவார்கள். இப்படியான அணுமுகுறையுடனேயே Busseat.lk தனது சேவைய ஆரம்பித்தது. பூரண திருப்திதரும் ஒன்றாக அது இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் ஏனைய சேவைகளைவிட Busseat.lk மிகவும் தரமானதாகவும் இலகுவானதாகவும் இருந்தது. ஒரு பாவனையாளர் தனது வாகன ஆசனப்பதிவுக்காக பயண முகவர்களைத் தேடி யாழ்ப்பாணத்தின் புழுதி தெளித்த வீதிகளில் அலைவயாமலோ அல்லது அவர்களது தொலைபேசிகளில் நீண்ட நேரங்களைச் செலவழிக்காமலோ பதிவுகளைச் செய்வதற்கு Busseat.lk வசதிசெய்தது. நானே எனது கொழும்பு பயணத்துக்காக தொலைபேசிகளில் தூங்கி வழிந்தும், ஆஸ்பத்திரி வீதியில் பயண முகவர் அலுவலகங்களில் ஏறி இறங்கியுமிருக்கிறேன். இப்போது Busseat.lk எனது குறைகளை நிவர்த்தி செய்திருக்கிறது. குறிப்பாகத் தமிழ் மொழிப் பாவனையில் இடர்ப்படும் எனக்கு மனித தொடர்பாடல்களே அவசியமில்லாது எனது காரியங்களைப் பூர்த்தி செய்ய இச்சேவை உதவுகிறது.

பூரண திருப்தியைத் தராதபோதும் அத்தியாவசிய தேவைகளை வழங்கக்கூடிய ‘குறைந்த சாத்தியப் பண்டமாக’ அறிமுகப்படுத்தப்பட்ட Busseat.lk பயணிகளின் (பயண) அனுபத்தை அறிந்துகொள்வதையே தனது முதல் குறியாகக் கொண்டிருந்தது. பிரயாணிகள் தமது பயணத் தேவைகளை இலகுவாகப் பதிவிசெய்துகொள்வதை அது இலகுவாக்கியது. பதிவுகளைப் பெற்றதும் பின்னணியில் அத் தகவல்களைக் கையாள்வது முதல் பயணிகளுக்கு அவற்றை மின்னஞ்சல் மூலம் அறிவிப்பது வரை எல்லாமே மனிதர்களாலேயே செய்யப்பட்டது.

வருடங்கள் நகர, பயணிகளின் அனுபவங்களைக் கொண்டு Busseat.lk மேலும் வளர்ச்சியடைந்தது. விமானப் பயணச்சீட்டுகளைப் பதிவுசெய்யும் தரத்துக்கு அது இப்போது வளர்ந்திருக்கிறது. வாகனத்தின் பயண இருக்கைகளைக்கூட ஒரு பயணி தற்போது தேர்வுசெய்துகொள்ளலாம். ஒரு பெண் பயணி தனக்குப் பக்கத்தில் இன்னுமொரு பெண்ணே இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தால் அதையும்கூட பதிவின்போது தெரிவு செய்யமுடியும். நாட்டு நடப்புகளை விடுப்புப் பார்க்க விரும்பும் ஒருவர் யன்னலோரமாக ஆசனங்களைத் தெரிவுசெய்துகொள்ளவும் வசதியுண்டு. குடும்ப உறவினர் எல்லோரும் அருகருகேயோ விருப்பமில்லாவிட்டால் மிகவும் தூரத்திலேயோ தமது ஆசனங்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

கணனியில் ஆசனங்களைத் தெரிவுசெய்யும் படிவம்

https://busseat.lk/

2015 இல் Busseat.lk நிறுவனத்தை ஆரம்பித்ததுமே பிரசாந்தும் நிரோஜனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தனர். ஆனால் அதைச் சாத்தியமாக்குமளவுக்குப் போதுமான திட்டங்கள் அவர்கள் கைவசம் இருக்கவில்லை. இதனால் பிரசாந்த் கொழும்பில் தங்கி Busseat.lk அலுவல்களைக் கவனிக்க 2017 இல் நிரோஜன் யாழ்ப்பாணம் திரும்பினார். யாழ்ப்பானத்தில் அவர் ஆரோக்யா லைஃப் சிஸ்டம்ஸ் (Arogya Life Systems) என்னும் நிறுவனத்தில் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இணைந்து கொண்டார். YGC நிகழுகளின் பெறுபேறாக உருவாகிய இன்னுமொரு தொழில்நுட்ப நிறுவனமே ‘ஆரோக்யா’. முன்னணி மருத்துவமனைகளான Durdans, Hemas உட்பட இலங்கையின் பல மருத்துவமனைகளின் செயற்பாடுகளை நிர்வகிக்கும் மென்பொருளைத் தயாரித்தது இந் நிறுவனமே.

3AxisLabs இன் ஆரம்பம்

2021 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கோவிட் நகர்முடக்கம் Busseat.lk யின் செயற்பாட்டுக்கு மிகவும் பேராபத்தாக அமைந்தது. மக்களின் நகர்வுகளுக்கு விதிக்கப்பட்ட நீண்டகாலப் பயணத்தடையால் Busseat.lk யின் ஆசனப்பதிவுகள் ஏறத்தாழ இல்லாமலேயே போய்விட்டது. 2019 இல் பிரசாந்தும் நிரோஜனும் மீண்டும் இணைந்து இன்னுமொரு தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டார்கள். அதுவே 3Axis Labs. ஆரோக்யாவின் சகோதர நிறுவனமான அரிமாவில் பணியாற்றிக்கொண்டிருந்த தனது நண்பரான சாஹித்யன் விக்னேஸ்வரனையும் நிரோஜன் தம்முடன் இணைத்துக்கொண்டார். 2019 முதல் 2021 வரை இம் மூவரும் தமது திட்டத்தைப் பூரணப்படுத்தினார்கள். பிரசாந்த், நிரோஜன், சாஹித்யன் ஆகிய மூவரையும் இணை ஸ்தாபகர்களாகக் கொண்டு, ஏப்ரல் 2021 இல் 3AxisLabs பிறந்தது. ஒரு வருடத்தின் பின்னர், ஏப்ரல் 2022 இல் அது மேலும் 9 பணியாளர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

3AxisLabs team, not including 2 on leave and 1 working from home

ஒரு நிறுவனத்தைத் தனியாக ஆரம்பிப்பதென்பது இலகுவானதொரு காரியமல்ல என்கிறார் பிரசாந்த். மாறுபட்ட செயற்திறன்களைக் கொண்டுள்ளவர்களைப் பங்காளிகளாகக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஒவ்வொருவரும் தத்தமது திறன்களில் நம்பிக்கையோடு செயற்படவும் மற்றவர்கள் தமது துறைகளிலும் அதே போன்றே செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறுவனத்தை முன்கொண்டு நகர்த்தவும் இது உதவும் என்பது பிரசாந்தின் நம்பிக்கை. 3AxisLabs நிறுவனத்தில் பிரசாந்த் பண்ட விருத்தி (product development), விற்பனை (sales), திட்ட நிர்வாகம் (project management), வாடிக்கையாளர், முதலீட்டாளர் தொடர்புகள் (customer and investor relations) ஆகிய விடயங்களைக் கையாள்கிறார். தொழில்நுட்ப முனைவராக சாஹித்யன் செயலிகள் உருவாக்கம் (mobile applications), முன்னணி (front end), பின்னணி (back end) இயங்குதளங்கள் மற்றும் சிஸ்டம் கட்டுமானம் (system architecture) ஆகிய விடயங்களைக் கையாள்கிறார். முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technology Officer) ஆக நிரோஜன் நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் செலவிடுகிறார்.

சர்வதேச வாடிக்கையாளர்கள், கவர்ச்சியான பெயர்

3Axis Labs நிறுவனத்திற்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், டென்மார்க், பிரித்தானியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் சிபார்சுகள் மூலமாகவே வருகிறார்கள். லிங்க்ட் இன் (linked-in) போன்ற சமூக ஊடகத் தளங்களும் பேருதவி புரிகின்றன. பிரித்தானியாவிலுள்ள நிறுவனமொன்று 2017 இல் இந்தியாவில் தனது பண்டமொன்றைத் தயாரித்தது. ஆனால் வேறு துறைகளுக்கு மாறிக்கொண்டுவிடதனாலோ என்னவோ அதன் இந்தியத் தயாரிப்பாளர் பின்னர் காணாமற் போய்விட்டார். மிகவும் தெளிவற்ற மூலாதாரத் தகவல்களைக் கொண்ட இத் திட்டத்தை 3Axis Labs தத்தெடுத்துக்கொண்டது மட்டுமல்லாது அதை மேலும் மெருகூட்டியும் கொடுத்தது. புதிய பண்டங்களைத் தயாரிப்பதில் மட்டுமல்ல ஏற்கெனவே இயங்குநிலையில் இருக்கும் பண்டங்களையும் புதிய தளங்களில் (platforms) இயங்குவதற்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொடுப்பதிலும் 3Axis Labs மிகத் திறமையாகச் செயற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது சிங்கப்பூரிலுள்ள ஒரு வாடிக்கையாளரின் மென்பொருள் அபிவிருத்திக்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கெனெத் தனது பணியாளர்களையும் இணைத்துக்கொண்டுள்ளது.

எப்படியான தொழிநுட்பத் தளங்களில் மென்பொருள்களைத் தயாரிக்கிறீர்கள் என நான் பிரசாந்திடம் கேட்டேன். நான் அறிந்தே இராத நீண்ட பட்டியலோடு வந்தார். இங்கு எழுதமுடியாத அளவுக்கு நீணடது அது. Clojure; Quarkus; Flutter; MongoDB; Neo4j; Hadoop; Kubernetes; JanusGraph ஆகியன அவற்றில் சில. எனது மென்பொருள் பணிக்காலத்தில் எனக்குத் தெரிந்த மென்பொருள் மொழி BASIC மட்டுமே. தொழில்நுட்பவியலாளர்கள் இப்போது தமது கற்பனைகளை எங்கெங்கெல்லாமோ கொண்டுபோய்விட்டார்கள்.

3Axis Labs இணை ஸ்தாபகர்கள் எது தேவையோ அதைச் செய்துமுடிக்கும் வல்லமை கொண்டவர்கள். ஒரு பணி அதன் உயர் தரத்துக்கேற்பச் செய்து முடிக்கப்படாவிடில் மூவரில் ஒருவர் அவரது துறைக்கேற்ப வழிகாட்டியாக இயங்கி அப்பணியைத் திறம்பட முடித்துவிடுவார். அல்லாது போகில் அவரே அப்பணியை எடுத்து எதிர்பார்த்த தரத்திற்கு அதைச் செய்து முடித்துவிடுவார். மென்பொருள் நிறுவனமாயிருந்தாலென்ன வெதுப்பகமாயிருந்தாலென்ன, மெழுகுதிரித் தொழிற்சாலையாகவிருந்தாலென்ன சிறு நிறுவனங்களின் ஸ்தாபகர்கள் தேவையானால் தாமே களத்தில் இறங்கித் தமது பண்டத்தின் தரத்தைச் சீர்செய்துகொள்ளவேண்டும்.

இப்போது இல்லாவிடில் எப்போது?

தனது பெரும்பாலான வாடிக்கையாளர்களை 3Axis Labs புலம்பெயர் தமிழர்கள் மூலமாகவே பெற்றுக்கொள்கிறது. வடக்கின் மீள்நிர்மாணத்தைச் செய்வதற்குப் புலம்பெயர் தமிழர்களால் செய்யக்கூடிய அதியுயர் உதவி இதுவாகவே இருக்கும். பண முதலீடுகள் மட்டுமல்ல வாழ்நாட்டு நிறுவனங்களுடனான இணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக வியாபார வலையமைப்பை விருத்திசெய்வதும் எமது மக்களுக்கான உதவிதான்.

பிரசாந்த், நிரோஜன், சாஹித்யன் ஆகியோர் உற்சாகத்துடனும், இலட்சியத்துடனும் தமது இளைய நிறுவனத்தைக் கட்டியெழுப்பி வருகிறார்கள். மென்பொருளுக்கும், தகவல் தொழிநுட்பத்துக்கும் உலகம் தேடும் சிறந்த இடமாக யாழ்ப்பாணம் இன்னும் உருவாகவில்லை. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், அனுபவம் மிக்க பணியாளர்களைத் தேடி தனியார் நிறுவனங்கள் ஓடி வருவதற்கும் தக்க வகையில் பிரபலமானதொரு யாழ்ப்பாணத்தை உருவாக்க வேண்டும். ஆரோக்யா, 3Axis Labs, Yarl IT Hub, Yarl Geek Challenge உட்பட்ட நிறுவனங்களும் அமைப்புக்களும் இப்பணியைச் செய்வதற்குப் பாடுபடுகின்றன. சமகால பொருளாதாரச் சீர்குலைவு நாட்டைப் பாதித்திருக்கும்போது இப்படியான நிறுவனங்களுக்கு ஆதரவுதருவதன் மூலம் நாம் அனைவருமே நன்பமை பெறமுடியும்.

வடக்கில் தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க எண்ணுபவர்களும், முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களும் ‘சரியான தருணத்துக்காக’ தாம் எத்ரிபார்த்திருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படியாகப் பலர் எதிர்பார்த்து எதிர்பார்த்து சரியான தருணங்களை இழந்துவிட்டிருக்கிறார்கள். ‘முழுநிறைவு முன்னேற்றத்தின் எதிரி’ (Perfection is the enemy of Progress) என வின்ஸ்டன் சேர்ச்சில் கூறுவார். “அழகற்ற வைரம் சிப்பியை விடச் சிறந்தது” (A flawed diamond is better than a pebble) எனக் கூறுகிறார் கொன்ஃபூசியஸ்.

பிரசாந்த் சுபேந்திரனோடு தொடர்புகொள்ள விரும்புபவர்கள் prasanth@3axislabs.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

( — இக்கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து தனது இரண்டு வயதில், குடும்பத்தினருடன் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தவர். இலண்டனில் வளர்ந்த இவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம்பெற்றபின் இரண்டு தசாப்தங்களாக தகவற் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். இதைல் அரைவாசிக்காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை இலங்கையிலும், இந்தியாவிலும் நிர்வகித்தார். 2015 இல் இலங்கைக்குத் திரும்பிய ஜெகன் யாழ்ப்பாணத்தைத் தனது தளமாகக் கொண்டு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். விரும்புபவர்கள் jekhanaruliah@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.-)

(இக் கட்டுரை லங்கா பிசினெஸ் ஒன்லைன் (Lanka Business Online (LBO)) என்ற இணையப் பத்திரிகைக்காக எழுதப்பட்டுப் பிரசுரமானது. தலைப்பு மற்றும் சிறிய மாற்றங்களுடன், ஆசிரியரின் அனுமதியுடன் இங்கு மீள் பிரசுரமாகிறது)