35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்?

35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்?

Spread the love
35 வருட 'ஜியோப்படி' தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்? 1

அமெரிக்க தொலைக்காட்சியில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ந்து 8000 காட்சிகளை ஒளிபரப்பை வரும் போட்டி நிகழ்ச்சியான ‘ஜியோப்படி’ யை (Jeopardy) நடத்திவரும் வழங்குனரான அலெக்ஸ் ட்றெபெக் சதயப் புற்றுநோய் காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சியை நடத்தமுடியாத நிலை ஏற்படலாம் என கனடாவின் சீ.டி.வி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

கனடியரான அலெக்ஸ் ட்றெபெக் தொடர்ச்சியாக நடத்திவரும் ‘ஜியோப்படி’ தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் தரமானதும், பல மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டதுமான நிகழ்ச்சியாகும். போட்டியாளர்கள் உலகத்தின் எந்தத் துறைகளிலென்றாலும் தரப்படும் பதில்களுக்கான கேள்விகளைக் கூறுவதே இன்நிகழ்ச்சி. திரையில் தோன்றும் தலைப்புகளில் ஒன்றையும் அதற்குரிய பரிசுப்பணத்தையும் மூன்று போட்டியாளர்களில் ஒருவர் தெரிவு செய்ய அலெக்ஸ் அதற்குரிய பதிலை வாசிப்பார். இதற்கான பதிலை முதலில் சரியாகச் சொல்பவருக்கு அப்பரிசுப்பணம் கிடைக்கும். அரை மணித்தியாலம் நடக்கும் இந் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுருந்து ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் விண்ணப்பிக்கின்றனர். ஒருவர் தோற்கடிக்கும் வரைக்கும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தோன்றி பரிசுப்பணத்தை அதிகரித்துக்கொண்டே போகலாம். சிலர் பல மில்லியன் டாலர்களையும் வென்றிருக்கிறார்கள். பல தமிழர்களும் இதில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இப் போட்டியை மிகவும் வெற்றிகரமாக நடத்திவரும் அலெக்ஸ் ட்றெபெக் பொழுதுபோக்குத் துறையில் மட்டுமல்ல கற்றோரினாலும் பெரிதாக மதிக்கப்படும் ஒருவர். சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனக்கு நான்காம் நிலையிலுள்ள (stage 4 Pancreatic Cancer) சதையப் புற்றுநோய் பீடித்திருக்கிறது என நிகழ்ச்சியின்போதே பார்வையாளருக்கு அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். சதயப் புற்றுநோய் பீடித்தவர்களில் 9 வீதமானோரே தப்பிப் பிழைப்பதுண்டு. விரைவாகப் பரவிக் குறுகிய நாட்களிலேயே உயிரைக் குடிக்கும் ஒரு நோய் இது. கனடியரால் அதிகம் நேசிக்கப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜாக் லெயிட்டனும் இதே புற்றுநோயினால் மரணமானார் எனக் கூறப்பட்டது.

ஆரம்ப சிகிச்சைகளின்போது ஓரளவு வெற்றியை எட்டலாமென்ற நம்பிக்கை இருந்தாலும் தற்போது அலெக்ஸ் ட்றெபெக் இரண்டாவது கட்ட கீமோ தெறாப்பி எனப்படும் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இதன் பக்க விளைவுகளிலொன்றாகிய வாய்ப் புண்களினால் தனக்கு சொற் தடுக்கல் ஏற்படுவதாகவும் விரைவில் நிகழ்ச்சியிலிருந்து விடுபடவேண்டி நேரலாமெனவும் அவர் சீ.டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் லிசா லபிளாங்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நோய் அறிவிக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு தடவையாவது நிகழ்ச்சி தடைப்படவில்லை. பொதுவாகப் பல காட்சிகளை ஒரே நேரத்தில் முன்கூட்டியே ஒளிப்பதிவு செய்வது வழக்கமாகையால் தடைபடுவதற்கான் அவசியம் ஏற்படவில்லை.

Print Friendly, PDF & Email