30 வருட சிறைவாழ்வின் பின் பேரறிவாளன் பிணையில் விடுதலை
ரஜிவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த 7 பேரில் ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளனைப் பிணையில் விடுதலை செய்யும்படி மார்ச் 9 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி சட்டமா அதிபர் கே.எம்.நடராஜின் பலத்த எதிர்ப்பையும் மீறி நீதிபதி எல். நாகேஸ்வரராவ் பேரறிவாளனுக்கு பிணை வழங்கும்படி உத்தரவிட்டார். தற்காலிக விடுதலையில் (parole) இருக்கும் பேரறிவாளன் மாதம் ஒருதடவை பொலிஸ் நிலையத்தில் சமூகமளித்து கையெழுத்திடவேண்டுமென்பது பிணையின் ஒரு நிபந்தனையாகும்.
இதுவரை மூன்று தடவைகள் தற்காலிக விடுப்பில் போக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் மீது புதிதாக எதுவித முறைப்பாடுகளும் செய்யப்படாத காரணத்தை அனுசரித்ததுடன் அவர் தனது வாழ்வின் மூன்று தசாப்தங்களைச் சிறையில் கழித்தமையையும் கருத்தில் கொண்டு அவரது பிணையனுமதியை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
ரஜிவ் காந்தியின் கொலையில் ஒரு சந்தேகநபராகக் கைதுசெய்யப்பட்டபோது பேரறிவாளனுக்கு 19 வயது. முனாள் பிரதமரைக் கொலைசெய்வதற்குப் பாவித்த குண்டில் பொருத்தப்பட்ட மின்கலங்களைப் பேரறிவாளனே வழங்கியிருந்தார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இக் கொலைவழக்கு விசாரணை நீதிமன்றத்தினால் (trial court) விசாரணை செய்யப்பட்டு மொத்தம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. பின்னர் 1999 இல் உச்ச நீதிமன்றம் இவர்களில் 19 பேரை நிரபராதிகள் எனக்கண்டு விடுதலை செய்திருந்தது. மீதியான 7 பேர்களில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனைகளும் எஞ்சிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டிருந்தன. 2014 இல் இந் நால்வர் மீதான மரணதண்டனைகளையும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனைகளாக மாற்றியிருந்தது.
2017 இல், பேரறிவாளனது ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான முக்கியமான ஆதாரமொன்றை இணைக்கத் தவறியமை குறித்து சீ.பி.ஐ. அதிகாரி ஒருவர் தனது தவறை ஒத்துக்கொண்ட காரணத்தால் அவரது வழக்கு மீண்டும் முன்னிலைக்கு வந்திருந்தது. கொலையில் பாவிக்கப்பட்ட மின்கலங்கள் என்ன தேவைக்கு வாங்கப்பட்டன என்பதைத் தான் அறிந்திருக்கவில்லை எனப் பேரறிவாளன் அலித்திருந்த சாட்சியத்தை அதிகாரி தியாகராஜன் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதனால் பேரறிவாளன் இரண்டு தசாப்தங்களாகச் சிறையில் வாடுவது குறித்துத் தான் மிகவும் கவலையுறுவதாகவும் 2017 இல் தியாகராஜன் எழுத்துமூலம் ஒப்புதல் செய்திருந்தார்.
செப்டம்பர் 2018 இல் எடப்பாடி பழனிச்சாமி அரசு பேரறிவாளன் உட்பட்ட ஏழு கைதிகளையும் விடுதலை செய்யும்படி கோரி அமைச்சரவைத் தீர்மானமொன்றை நிறைவேற்றி அதை அப்போதைய தமிழக ஆளுனருக்குச் சமர்ப்பித்திருந்தது. ஆனாலும் ஆளுனர் அதன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. (தி நியூஸ் மினிட்)