3 மில்லியன் சீன (சைனோவாக்) தடுப்பூசிகளை நிராகரித்தது வட கொரியா

சீனாவின் தயாரிப்பான, 2.97 மில்லியன் சைனோவாக் (Sinovac) தடுப்பூசிகளை வட கொரியா நிராகத்துவிட்டதாகவும், மோசமாகப் பாதிக்கப்பட்ட வறிய நாடுகளுக்கு அவற்றை கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஐ.நா. மூலம் விநியோகிக்கும்படி அது சீனாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

வட கொரியாவில் இதுவரை, ஒருவரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகவில்லை எனக் கூறப்படுகிறது. ஜனவரியில் கோவிட் தொற்று அறிவிக்கப்பட்டபோது வட கொரியா உடனேயே தனது எல்லைகளை மூடிக்கொண்டதுடன், மிகவும் கடுமையான பொதுமுடக்கத்தையும் மேற்கொண்டிருந்தது. தனது நாட்டில் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு அது இதுவரை அறிவிக்கவில்லை.

அதே போல, பாதுகாப்பு காரணம் கருதி அஸ்ட்றா செனிக்கா தடுப்பூசிகளையும், சென்ற மாதம் (ஜூலை), வட கொரியா நிராகரித்திருந்ததென தென் கொரியா தெரிவித்திருந்தது. இரத்தம் கட்டியாதல் அச்சம் காரணமாகப் பல மேற்கு நாடுகளும் அஸ்ட்றா செனிக்காவின் பிரயோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தன. உலக சுகாதார நிறுவநத்தின் அறிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் பின்னர் அஸ்ட்றா செனிக்கா தடுப்பூசிகளைப் பாவிக்கத் தொடங்கியுள்ளன.

சீன தடுப்பூசிகளின் செயற் திறன் போதாமை காரணமாக அவற்றைப் பவிப்பதில் வட கொரியா அக்கறை கொள்ளவில்லை எனத் தென் கொரிய உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு இன்ஸ்டிடியூட் (Institute for National Security Strategy (INSS)) தெரிவித்துள்ளது.