234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சியின் 117 பெண், 117 ஆண் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

ஏப்ரல் 6 நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சியான நாம் தமிழர் கட்சி வேறெந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேராமல் தனித்து நின்று போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது போலவே இந்தத்தடவையும் அதன் வேட்பாளர்களாக 50% பெண்களையும், 50% ஆண்களையும் அது தேர்ந்தெடுத்திருக்கிறது.

சென்னை, ராயப்பேட்டையிலுள்ள வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று (07) நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் அனைத்து 234 வேட்பாளர்களையும் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

“நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். அதற்கு முன்னர் அதை முதலில் எங்களுள் கொண்டுவர வேண்டும். அது எங்களது கடமையும், பொறுப்பும் கூட. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற கருத்தியலில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்பதையே நாம் நம்புகிறோம். பெண்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால், நாட்டை விடுதலை செய்ய முடியாது” என சீமான் தெரிவித்தார்.

“திராவிடக் கட்சிகளின் ஊழலுக்குள் சிக்குப்பட்டிருக்கும் தமிழ் நாட்டையும் அதன் மக்களையும் நாம் விடுதலை செய்யவேண்டும். ஒரு சில குடும்பங்களின் கைகளில் அது சிக்குப்பட்டிருக்கிறது. அதைச் சாதிக்க இதுவே தருணம்” எனத் தெரிவித்தார் சீமான்.

தங்களது ஆட்சியில், சகலருக்கும் இலவச கல்வி, சீரான மருத்துவம், தரமுள்ளவர்களுக்கு அரச பணிகள் ஆகியந வழங்கப்படுமெனவும், விவசாயம், மாடு மேய்ப்பு ஆகியன அரச பணிகளாக அறிவிக்கப்படுமெனவும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையிலுள்ள திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என முன்னர் கூறப்பட்டது.