எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ‘ஜந சுவய’ என்னும் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டத்தின் 22வது அங்கமாக 2,320,000 ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் (dialysis machine) மற்றும் Portable RO System ஆகிய உபகரணங்கள் இவற்றில் அடங்கும்.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பவானந்தராஜா விடம் இவ்வுபகரணங்கள் கையளிக்கப்பட்டன. த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சமாகி ஜன பலவேகய கட்சியின் துணைத் தலைவர் ராஜித சேனாரத்ன, திருகோணமலை மாவட்ட பா.உ. இம்ரான் மஹரூஃப் மற்றும் பலர் சமூகமளித்திருந்த இவ்வைபவம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
சமாகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்றக் குழு, கட்சியின் வெளிநாட்டுக் கிளை அங்கத்தவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு கட்சி ஆதரவளர்கள் ஆகியவர்களினால் இலங்கையில் கொறோணாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்காக ‘விபக்ஷாயன் ஹுசாமக்’ என்னும் திட்டத்தின் பிரகாரம் இவ்வுதவி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.