22 ஆவது திருத்தம் 19 ஆவது திருத்தத்தை விட பலம் குறைந்தது; மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் – சுமந்திரன்

“அரசியல் சாசனத்தின் 22 ஆவது திருத்தமெனக்கூறி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 21 ஆவது திருத்தம் 19 ஆவது திருத்தத்தைவிடப் பலம் குறைந்தது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு இனி வரப் போகும் ஜனாதிபதி மீதே நடைமுறைப்படுத்தப்படும், தற்போதுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை அது எவ்விதத்திலும் பாதிக்காது என ஊடகங்கள் மத்தியில் பேசும்போது திரு சுமந்திரன் குறிப்பிட்டார்.

“இது ஒரு முரண்நகை ஏனென்றால் தற்போது மேற்கொண்டு வரும் போராட்டங்கள் மூலம் ஜனாதிபதியை வீட்டுக்குப் போகும்படி மக்கள் கேட்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இம் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் ராஜபக்சவுக்கு அடுத்து வரும் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறிப்பதாகவே இத் திருத்தம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆவது திருத்தத்தின் மூலம் பெறப்பட்ட முழு அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சியை அனுபவிக்கப் போகிறார். இதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்குப் பிறகு கொண்டுவரப்படவிருக்கும் இன்னுமொரு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார முறைமை முற்றாக ஒழிக்கப்படவிருக்கிறது என மக்களுக்குக் கூறி ஏமாற்றுகிறார்கள். அப்படியான எண்ணம் அவர்களுக்கு இல்லை. இபோது எமக்குத் தேவையானது நடைமுறையில் அடிப்படையான மாற்றம். அதையே மக்களும் கேட்கிறார்கள்” என சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் கடந்த புதனன்று வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி அதற்குஇக் கிடைத்திருந்தது. அரசியலமைப்புத் திருத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் ஜூன் 6ம் திகதி சமர்ப்பிக்கப்படிருந்த இத் திருத்தம் ஆளும் கட்சியின் பலத்த எதிர்ப்புக்களின் காரணமாக மேலும் பலவீனப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது நிறைவேறுகிறது. (மூலம்:டெய்லி நியூஸ்)