Sri Lanka

21 இன் எதிரொலி: பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார்?

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பிரதமர் முழு மூச்சாகச் செயல்படுவதாகவும் அதைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட பசில் ராஜபக்ச வேறு வழியின்றிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார் எனவும் கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பசிலுடன் கூடவே இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் மேலும் இரண்டு உறுப்பினர்களும் தமது பதவிகளைத் துறக்கத் தயாராகி வருகிறார்கள் என கொழும்பிலிருந்து வெளிவரும் ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இதர கட்சித் தலைவர்களுடன் கல்ந்துரையாடிய பிரதமதர் ரணில் விக்கிரமசிங்க அதை நிறைவேற்றுவதற்குப் போதுமான உறுப்பினர்களின் ஆதரவைச் சேர்க்க முயன்று வருவதாகவும் தெரிகிறது. 21 ஆவது திருத்தத்தின் வரைவு ஒன்று ஏற்கெனவே கட்சித் தலைவர்களிடத்தில் கொடுக்கப்பட்டு அதற்கான திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு கட்சித்தலைவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ச இச்சந்திப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவருக்குப் பதிலாக பிரதிநிதி ஒருவர் சமூகமளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று பிற்பகல் கூடும் கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது 21 ஆவது திருத்தத்தை வரைந்த குழுவினரும் சமூகமளிப்பார்கள் எனவும் தலைவர்களால் முன்வைக்கப்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதோடு அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள், திருத்தங்களை உடனடியாக திருத்தத்தில் உள்வாங்க இக்குழு தயாராகவுள்ளதாகவும் தெரிகிறது.

21 ஆவது திருத்தத்தில் எப்படியான மாற்றங்களைச் செய்தாலும் ஜனாதிபதி அதிகாரக் குறைப்பு மற்றும் இரட்டைக் குடியுரிமைத் தவிர்ப்பு ஆகிய இரண்டு அம்சங்களையும் மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவ் விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்கவிற்குமிடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கட்சியிலிருந்து விலகிசு சுயாதீன உறுப்பினராகச் செயற்பட ரணவக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரணில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியைப் பெறவிருக்கிறார் என்று வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என ரணவக்க திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

மே 9 சம்பவங்களைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதும் ஆளும் கட்சிக் கூட்டணியில் மட்டுமல்லாது அதன் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ச சகோதரர்களிடையே உள் மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. 21 ஆவது திருத்தத்தின் சூத்திரதாரியான ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியைக் குழப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டு ராஜபக்ச சகோதரர்களால் முன்வைக்கப்படுகிறது. 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் தான் பிரதமர் பதவியைத் துறக்கத் தயாராகவுள்ளேன் என ரணில் அறிவித்ததன் பின்னர் அதை நிறைவேறாமல் செய்வதற்கு பசில் ராஜபக்ச தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும் இதனால் பெரமுன கட்சிக்குள் பாரிய இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே வேளை 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் எனபதில் தனக்கு ஐயம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி ராஜபக்ச ‘புளூம்பேர்க்’ சஞ்சிகைக்குப் பேட்டியளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதுவரை வெளிவந்த செய்திகளின்படி, 21 ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து போதுமான ஆதரவு கிடைத்திருக்கிறதென்றே தெரியவருகிறது.

21 ஆவது திருத்தத்தைக் குழப்புவதில் ஈடுபட்டுவரும் பசில் ராஜபக்ச தரப்பு புதிதாக ‘ரணில் கோ கம’ என்றொரு ஆர்ப்பாட்டமொன்றை பிரதமரிந் இல்லத்துக்கு முன்பாக நடத்தி வருவதாகவும் ஆனால் இதற்கும் கோதா கோ கம ஆர்ப்பாட்டக் குழுவுக்கும் இதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. ‘ரணில் கோ கம’ ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பாக விசாரணையொன்றை பேற்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

21 ஆவது திருத்தம் மீதான மாற்றங்கள் உள்வாங்கப்பட்டதும் அதற்குப் பின் இவ்வரைவு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுப் பின்னர் பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படும். இங்குதான் பசில் ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க பலப்பரீட்சையின் பெறுபேறுகள் தெரியவரும் எனப் பேசப்படுகிறது.