21 ஆவது திருத்தம் பொதுசன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்படலாம் – சட்டமா அதிபர்

புதிய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி பா.உ. ரஞ்சித் மட்டுமபண்டார ஆகியோரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது, 22 ஆவது திருத்தங்கள் வெறும் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியாது, அது பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தோடு சபாநாயகருக்கும் இது குறித்த அறிவிப்பை சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றால் தனியார் சட்ட மூலங்களாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் இத் திருத்தங்களுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பிலும், ராஜபக்ச நண்பர்கள் தரப்பிலுமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இத் திருத்தங்கள் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு முரணானவை எனக்கூறி இரண்டு முறைப்பாடுகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. தேசப்பிரேமி ஜாதிக பெரமுன என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் நுவான் பெலாந்துடாவவும், ஜாதிக சன்விதான ஏகமுத்துவ அமைப்பு மற்றும் கேணல் அனில் அமரசேகர சார்பில் குணதாச அமரசேகரவும் இம் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர்.

இதன் காரணமாக சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சட்டமா அதிபர் இந்திகா தேமுனி டி சில்வா உச்ச நீதிமன்றத்துக்கும் சபாநாயகருக்கும் அரசியலமைப்பு தொடர்பான தமது கருத்தை அறிவித்துள்ளனர்.

இதே வேளை நீதியமைச்சரினால் வரையப்பட்ட 21 ஆவது திருத்த சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. இது நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் 19 ஆவது திருத்தத்திலுள்ள சில அமசங்கள் மீளப் புகுத்தப்படும் அதே வேளை 20 ஆவது திருத்தத்திலுள்ள சில அம்சங்களை அது தக்கவைத்துக்கொள்ளும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவற்றில் முக்கியமான அம்சங்கள் எனக் கருதப்படுபவை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதும், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்பதுமாகும். இரண்டாவது அம்சம் பசில் ராஜபக்சவைக் குறிவைத்து முன்வைக்கப்படுவது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.

ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு விடயத்தில் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்ட மாதிரியான அம்சங்கள் இருக்குமெனவும் அதே வேளை 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டது போல உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற அம்சங்கள் தக்கவைக்கப்படுமெனவும் கூறப்படுகிறது. அத்தோடு இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தக்கவைத்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இத் திருத்தங்கள் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தம் இயற்றப்பட்டபோது அதற்குப் பொறுப்பாக இருந்தவர் தற்போதய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச என்பது குறிப்பிடத் தக்கது.

இதே வேளை இத் திருத்தங்களுக்கு எதிராக பசில் ராஜபக்ச ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகும் தகமையை இழந்துவிடுவார். எனவே பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான ராஜபக்ச ஆதரவாளர் இத் திருத்தங்களுக்கு எதிராக வாக்களிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.