Columnsமாயமான்

21 ஆவது திருத்தம்: களப்பலி யார்? ரணிலா பசிலா?

-ஒரு பட்சி சாத்திரம்

மாயமான்

Disclaimer: இது ‘தி இந்து’ பத்திரிகை வெளியிட்ட ‘புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டும்’ ஒரு செய்தியால். இதை நீங்கள் நம்பலாம்: ரணில் விக்கிரமசிங்கவின் தேனிலவு பாதியிலேயே முடிந்து விடலாமென்று பட்சி சொல்கிறது. .அவரைத் தத்தெடுத்திருந்த ஆளும்கட்சி விரைவில் அவரை மீண்டும் நடுரோட்டில், புல் பையுடனும் பாயுடனும் விட்டுவிடும் என்கிறது அது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவென்று பல திட்டங்களோடு வந்தவர் எதையுமே சாதிக்காது 21 ஆவது திருத்தத்தை ஏன் அவசரம் அவசரமாகக் கொண்டுவர முயற்சிக்கிறார் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் ரணிலைத் தோய்த்துக் காயவிடுவதற்குத் தயாராகிறார்கள். இதன் பின்னால் வழமையான சூத்திரதாரி, பசில் பிரதர் இருப்பதாகக் கூறுகிறார்கள். காரணம், 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இரட்டைக் குடியுரிமை அவரது பாராளுமன்றக் கனவுகளைத் தகர்த்துவிடும். எனவே அவர் தனது கைங்கரியங்களைக் காட்ட முற்படுகிறார். என்கிறது பட்சி.

கோதாவின் அருளும் ஆசீர்வாதமும் இல்லாமல் ரணில் இந்த விசப் பரீட்சையில் இறங்கியிருக்க மாட்டார். கோதா விக்கிரகத்தில் இருந்து நிச்சயம் பூ விழுந்தே இருக்கும். கோதா கோ கம குழப்படிகாரரைச் சற்றே சாந்தப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கிறேன் என வெளிக்கிட்ட ரணில் 19 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டுவரப் போவதாக வாணம் விட்டார். 21 என்று நாமமிட்டு அதைக் கொண்டுவருவதால் ‘குழப்படிகாரரைக்’ கொஞ்சநாள் தாக்காட்டலாம் என அவர் நினைத்திருக்கலாம். 21 ஐ வரைந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்னுமொரு குட்டி நரி என்பதும் அவருக்குத் தெரியும். அதுக்கு ஏற்கெனவே கோதாவோடு கொஞ்சம் புகைச்சல். அதற்கு பசில் பிரதரே முக்கிய காரணம் எனபதும் இன்னுமொரு கொசிறு.

பொதுஜன பெரமுன கட்சியைக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பி தேர்தலில் வெல்ல வைத்த பெருமை பசில் பிரதரையே சாரும். ஊரில் உள்ள அத்தனை போக்கிரிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களிடமும் காசை வாங்கிக்கொண்டு தேர்தலுக்கு நிற்க ‘டிக்கட்’ கொடுத்தவர் பசில். கொடுத்த பணத்தைத் திரும்பவும் எடுப்பதற்குத் தமக்குத் தார்மீக உரிமையுண்டு எனப் பிரதேச சபைகள் முதல் பாராளுமன்றம் வரை வெள்ளை ஆடைகளுடன் வலம் வரும் அத்தனை காவாலிகளும் இன்னமும் பசிலரோடுதான் நிற்கிறார்கள். துணைச் சபாநாயகர் விடயத்தில் அவர்கள் வாக்களித்து ரணிலின் அம்மையாரைத் தோற்கடிதத விடயத்தில் தெரிந்துவிட்டது யார் ‘பொஸ்’ என்று. அப்போதே ரணில் விட்டு விட்டு ஓடியிருக்க வேண்டும்.

21 என்ற பேரில், இப்போது மீண்டும் பசிலரோடு மோதத் தினவெடுக்கிறார் ரணில். ஆனால் பொதுஜன பெரமுன போக்கிரிகள் ஏற்கெனவே பாராளுமன்றத்துக்குள் முகாமடித்து விட்டார்கள், #ரணில்கோகம என்று அதற்குப் பெயர். “21 நிறைவேறாவிட்டால் நான் பதவியிலிருந்து ஒதுங்கி விடுவேன்” என்று மிரட்டல் வேறு. அப்படி அவர் செய்தால் கோதாவின் கனவும், நாட்டு மக்களின் கொஞ்ச நஞ்ச நப்பாசையும் தவிடுபொடியாகிவிடும். இப்போது கோதா அவசரம் அவசரமாக பெரமுன பிரமுகர்களைச் சந்திக்கப் போகிறாராம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் நேற்று முந்தினம் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 21 ஐப் போட்டு வாங்கியிருக்கிறரர். “19 தே அப்பிடி இப்படி, 21 அதைவிட மோசம்” என அவர் சாடியிருந்தார். இலங்கையில் இன்றைக்கு இருக்கக்கூடிய, அரசியலமைப்பைக் கரைத்துக் குடித்த ஒருவர் என்றால் அது சுமந்திரனாகவே இருக்க முடியும். அவரே சொல்லிவிட்டார் 21 இல் எதுவுமே இல்லை என. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க அதில் எதுவுமில்லை. இது கோதாகோகம முகாம்களில் மட்டுமல்ல ரணில்கோகம முகாம்களிலும் மீண்டும் அடுப்புக்களை எரிய வைத்திருக்கிறது. ரணிலுக்கு இப்போதுதான் காற்சட்டை நனைய ஆரம்பித்திருக்கிறது.

ரணிலுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்த நாளிலிருந்து கோதாவின் சன்னிதானத்தில் கட்சிப் பிரமுகர்கள் நித்திய பூசை செய்துவருகிறார்கள். கோதாவுக்கு கொஞ்சம் மேல் வீடு அப்படி இப்படி என்று சொன்னாலும் ரணிலைக் கொண்டு (வந்து) மஹிந்தவைக் காட்டுக்கு அனுப்பிய வித்தை மெச்சக்கூடியது தான். அதன் சூத்திரதாரி ரணிலாவே இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் கோதாகோகம குழப்படிகள் ஆரம்பித்து 50 நாட்கள் நிறைவேறிய பின்னரும் அந்தாள் அரியாசனத்தை விட்டுவிட்டு ஓடவில்லை என்பது ஒரு சாகசம் தான்.

ரணிலுக்கு ஒரு நிதியமைச்சர் போன்று ஒரு முக்கிய பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பசில் பிரதருக்குக் கொடுத்திருக்கலாம் அல்லது அவரது அடிமை ஒருவருக்குக் கொடுத்திருக்கலாம் என்று பலர் கோதா சன்னிதானத்தில் விழுந்து புரண்டு பிரதிஷ்டை பண்ணிப் பார்த்தார்களாம். ஆனால் ரணில் அதில் வென்றுவிட்டார். இதனால் அவருக்கான குழிபறிப்புக்கள் உடனேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. 21 என்ற பெயரில் அவரே பசிலும் நாற்பது கள்வர்களும் கரந்துறையும் காட்டுப் பாதையில் நடக்கவாரம்பித்திருக்கிறார். விழுவது நிச்சயம், எப்போது என்பதே கேள்வி.

ரணில் எதிர்பார்த்த வகையில் சர்வதேசங்கள் ஒன்றும் கொண்டுவந்து கொட்டவில்லை. குழப்படிகாரரும் காலிமுகத் திடலில் ‘ஹாயாக’ வாழப் பழகிக்கொண்டு விட்டார்கள். இருந்துமென்ன பிரயோசனம் என நினைத்து அந்தாளும் நழுவும் வழிகளை யோசித்திருக்கலாம். 21 அதற்கொரு அருமையான சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கலாம். பெற்றோல் பஞ்சம், சமையல் வாயுப் பஞ்சம் ஆகியவற்றுக்கு இந்தியா முண்டு கொடுத்திருந்தாலும் வரப்போகும் சோற்றுப் பஞ்சத்துக்கு என்ன செய்யப்போகிறார் என்பது பெரிய கேள்வி. வீட்டுத் தோட்டங்களில் மரவள்ளிகளை வளருங்கள் என கமக்கார அமைச்சர் இப்போதே கத்தத் தொடங்கிவிட்டார். இதைச் சமாளிக்க இந்தியாவிலிருந்து சப்பாத்திக் கப்பலைக் கொண்டுவரமுடியாது. எனவே பஞ்சம், பட்டினி நிச்சயம். என்ன இருந்தாலும் மஹிந்தவைப் போல மாலைதீவுக்கு ஓடி ஒளியத் தேவையில்லை, ரணிலுக்கு கச்சதீவே கை கொடுக்கும் என நம்பலாம்.

ஆளும் கூட்டணிக்குள் இப்போது எழுந்துள்ள கசமுச மீண்டும் பசில் பிரதரின் கைகளை ஓங்க வைக்குமானால், ஒதுங்கியிருந்தமையால் மானபங்கப்பட்டுப்போன எதிர்க்கட்சிகளுக்கு பழம் நழுவி வாயில் விழுந்த ஒரு சந்தர்ப்பமாக அமையும். அவர்கள் எதிர்ப்பார்த்த ‘பொதுத் தேர்தல்’ இறுதியில் கைகூடும். காசு கொடுத்து எம்.பிக்களை வாங்கவேண்டிய தேவை இருக்காது. கோதாகோகமவும் கோதாவும் வெற்றி தோல்விகளின்றி ஒருவரையொருவர் தோற்கடிக்காமால் வீடுகளேகுவர். சிங்கள-பெளத்த தேசிய இனம் எல்லாவற்றையும் மறந்து, மன்னித்து புலி வாலை மீண்டும் இறுகப் பிடிக்கும். என்ன இருந்தாலும் தமிழர்களிடமிருந்த புலிவாலை அவர்கள் அடாத்தாகப் பறித்தவர்கள். விட்டால் அவர்களுக்கு வாழத் தெரியாது.

எமக்கு? வாழத் தெரியும். இதுவும் கடந்து போகும். லம்போகினிகளுடன் மரண ஊர்வலங்களும், மணமக்கள் ஊர்வலங்களும் நடந்தேயாகும். நாங்கள் யார்? இதில் குறை குற்றம் காண்பவர்கள் பட்சி@பட்சி.கொம் மூலம் அழுது கொட்டலாம்.