2023 சர்வதேச புக்கர் பரிசு நீள்-பட்டியலில் இடம்பெறுகிறது பெருமாள் முருகனின் ‘Pyre’

2013 இல் தமிழில் பூக்குழி என்ற பெயரில் பெருமாள் முருகனால் எழுதப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre என்னும் நாவல் 2023 ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்காகத் தெரிவாகிய 13 நூல்களின் பட்டியலில் இடம்பெறுகிறது. 2013 இல் வெளியானபூக்குழி யை 2016 இல் அனிருத்த வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். பூக்குழி என்பது இலங்கையில் ‘தீக்குளிப்பு’ என அழைக்கப்படுகிறது.
1980 களில் நடைபெற்ற சமபவமொன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந் நாவலில் சரோஜா-குமரேசன் என்ற இருவர் சாதிக்கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் அதைத் தொடர்ந்து இத்தம்பதிகள் தென் தமிழ்நாட்டிலுள்ள குமரேசனின் கிராமத்துக்குத் திரும்புவதில் ஏற்படும் சிக்கல்களையும் விபரிக்கிறது. நிஜ வாழ்வில் உயர்வெனக்கருதப்படும் வன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்ட இளவரசன் என்ற தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரது கதையைப் பின்னணியாகக் கொண்டது பூக்குழி. இந்நாவலை பெருமாள் முருகன் இளவரசனுக்கு காணிக்கையாக்கியிருந்தார்.
இதற்கு முன்னர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் என்ற நாவலும் பிரச்சினைகளைக் கிளப்பியிருந்தது. இந்நாவலும் அனிருத்த வாசுதேவனால் One Part Woman என்ற பெயரில் ஆங்கிலத்தில் பிரசுரமாகியிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் வாழ்ந்த குழந்தைகளற்ற தம்பதிகளின் கதையைப் பின்னணியாகக் கொண்டிருந்தது இந் நாவல். இப்பகுதியில் வாழ்ந்த தம்பதிகளால் அக் காலத்தில் பின்பற்றப்பட்ட கலப்பு பாலுறவு சடங்குகளை இத் தம்பதிகளும் பின்பற்றினர் என இந்நாவலில் வர்ணிக்கப்பட்டிருந்தது. இது தமது சாதியினரை இழிவுபடுத்துகிறது எனக்கூறி இப்பகுதியில் உயர் சாதியெனக் கூறப்படும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை 2014 இல் இந்நாவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதன் பிரதிகளைத் தீயிட்டுக் கொழுத்தியுமிருந்தனர். இதைத் தொடர்ந்து “பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார். அவரது நூல்களை இனி நீங்கள் எரித்துவிடுங்கள்” எனவும் இனிமேல் தான் ஒருபோதும் எழுதப் போவதில்லை எனவும் சபதம் செய்திருந்தார். ஆனாலும் அதன் பிறகு அவர் பல நாவல்களை எழுதிவிட்டார்.
இந்த வருடம் இறுதிப்பட்டியலில் தெரிவான 13 நூல்களில் ஏப்ரல் 18 அன்று 6 நூல்கள் குறும் பட்டியலுக்குத் தெரிவாகும். இதைத் தொடர்ந்து மே 23 இல் லண்டன் ஸ்கை கார்டனில் நடைபெறும் விழாவில் புக்கர் பரிசை வெல்லும் நூல் அறிவிக்கப்படும்.