2023 | கனடிய பொருளாதாரம் மோசமடையலாம்?
பலர் வேலைகளை இழக்கும் சாத்தியமுண்டு
2022 பலவழிகளிலும் மோசமான வருடமென நீங்கள் நினைத்தால் 2023 அதை விட இன்னும் மோசமாக இருக்கப்போகிறது என எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
வட்டி வீத உயர்வு, பணவீக்க உயர்வு எனக் கனடிய பொருளாதாரம் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாகுமெனவும் இதன் காரணமாக பொருளாதாரம் மந்தநிலைக்குத் (recession) தள்ளப்படுமெனவும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடந்த வருடம் கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம் 0.25% மாக இருந்தது. தொடர்ந்து 7 தடவைகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அது இப்போது 1.25% த்திற்கு வந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான வணிக வங்கிகள் தாம் வாடிக்கையாளருக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டிகளையும் அதிகரித்திருக்கிறார்கள். இதனால் பாவனையாளர்கள் பண்டங்களை வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லாமையால் பண்டங்கள் தேக்கமடைவதுடன் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் குறைக்கப்படவும் அதன் காரணமாக பணியாட்கள் பலர் வேலைகளை இழப்பதற்குக் காரணமாகவும் அமையலாம் என டெஜார்டேன் கப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் றோய்ஸ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் தற்போது 8.1 ஆக இருக்கிறது. கோவிட் மற்றும் யூக்கிரெய்ன் போர் காரணமாக எரிபொருள் வழங்கல் மற்றும் சீன உற்பத்தி ஆகியவற்றில் பாரிய தளர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்தன. முக்கியமாக உணவுப் பொருட்களின் விலை 30-40% உயர்ந்தது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பண்டங்களை ஏற்றி இறக்கும் போக்குவரத்துச் செலவு அதிகரித்தமை இதற்கு ஒரு முக்கிய காரணம். அதேவேளை எரிபொருள் விலை உயர்வால் விவசாயிகளின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
இப்பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கெனக் கூறி உலகின் பல அபிவிருத்தியடைந்த நாடுகளும் தமது வட்டிவீதங்களை அதிகரிக்கின்றன. கனடிய, அமெரிக்க மத்திய வங்கிகள் இந்நடவடிக்கைகளை மிகவும் தாமதமாக மேற்கொண்டதால் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது எனவும் 2023 ஆண்டு முழுவதும் நிலைமை இப்படியே இருக்குமெனவும் இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்படுமெனவும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குடிவரவு
நிலைமை இப்படி இருக்கையில் கோவிட் பெருந்தொற்றினால் உற்பத்தித் துறையில் தளர்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பல நிதி உதவிகளை நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் தாராளமாக வாரி வழங்கியிருந்தது. இதன் பக்க விளைவாக பணியாளர் பற்றாக்குறை ஆரம்பித்தது. இதை ஈடுசெய்வதற்காக வருடாந்த குடிவரவாளர்களின் எண்ணிக்கையை 400,000 இலிருந்து 1.5 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானோர் ஏற்கெனவே நாட்டில் வதியும் வெளிநாட்டு மாணவர்கள். அத்தோடு பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வாரம் 20 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட இம் மாணவர்கள் கட்டற்ற மணித்தியாலங்களுக்கு வேலை செய்யமுடியுமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக கனடியர்கள் பலருக்கு வேலை பறிபோகும் சாத்தியமிருக்கிறது.
உலக பொருளாதாரம்
இப்பொருளாதார மந்தம் கனடாவை மட்டும் பாதிக்கும் என்பதில்லை. அமெரிக்காவின் நிலைமையும் இதுதான். இன்னும் சில வருடங்களுக்கு அமெரிக்க பொருளாதாரம் உறை நிலையில் இருக்கப்போகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். யூக்கிரெய்ன் போர் காரணமாக அமெரிக்காவின் இராணுவ தளபாட ஏற்றுமதி ஓரளவு அந்நியச்செலவாணியைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் கனடாவின் 85% மான ஏற்றுமதி அமெரிக்காவுக்குச் செல்வதால் அதன் வாங்கும் திறமை குறையும்போது கனடிய பொருளாதாரமே மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
அத்தோடு உலகின் உற்பத்தி நிலையம் எனப் புகழப்படும் சீனாவின் அதிகரித்துவரும் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக அதன் உற்பத்தித் திறனும் அதன் விளைவாக ஏற்றுமதித் திறனும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இறக்குமதிச் செலவு 30-40% அதிகரித்திருக்கிறது. வீடு கட்டுமானச் செலவுகளும் அதேயளவு அதிகரித்திருக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. கட்டுமானத்தை நம்பியிருக்கும் இதர உற்பத்தித் துறைகளும் ஸ்தம்பிதமடைகின்றன. இதன் காரணமாக பல பணியாட்கள் வேலைகளை இழக்கக்கூடும்.
பொருளாதார மந்தம்
கனடா ஏற்கெனவே பொருளாதார மந்தநிலைக்குள் காலடி வைத்துவிட்டது எனவும் அது 2023 ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் எனவும் கனடிய பொருளாதாரத்துக்கான ஒக்ஸ்ஃபோர்ட் பணிப்பாளர் ரோனி ஸ்ரில்லோ தெரிவித்துள்ளார். அதே வேளை சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார ஒத்துழைப்பு,அபிவிருத்திக்கான அமைப்பு (OECD) ஆகியனவும் பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படும் எனவே எதிர்வு கூறியுள்ளன.
எனவே தேவையற்ற பெரும் செலவுகளைச் செய்யாமல் சிக்கனமாக இருக்கும்படி நிபுணர்கள் எச்சரித்துவருகிறார்கள். (Image Credit:Photo by D koi on Unsplash)