SportsSri Lanka

2021 LPL | ஜாஃப்னா கிங்ஸ் கப்டனாக மீண்டும் திசார பெரேரா – கழகம் அறிவிப்பு

விளையாட்டு


‘ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்’ என்ற பெயரில் விளையாடி, 2020ல் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது லங்கா பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை வென்ற கிரிக்கெட் கழகமான ‘ஜஃப்னா கிங்ஸ்’ இந்த வருட சுற்றுப் போட்டிக்குத் தயாராகி வருகிறது.

‘ஜாப்னா ஸ்டாலியன்ஸ்’ கழகத்தின் இலச்சினை

சென்ற வருடம் பல பணிப்பாளர்களின் கீழ் இயங்கிய ‘ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்’ கழகத்தை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பிரபல வியாபார நிறுவனமான ‘லைகா’ குழுமத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா இந்த வருடம் வாங்கியதுடன் அதன் பெயரை ‘ஜாப்னா கிங்ஸ்’ எனவும் மாற்றியிருந்தார்.

இந்த வருட ஆட்டத்துக்குத் தயாராகும் கழகத்தில் சில முக்கிய பதவி மாற்றங்களைச் சுபாஸ்கரன் செய்துள்ளார். இவற்றில் லண்டனைச் சேர்ந்த கணேசன் வாகீசன், கழகத்தின் கிரிக்கெட் பணிப்பாளராகவும், திலினா கண்டம்பி தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும், சாரங்க விஜயரத்ன ஊடகம் / சந்தைப்படுத்தல் பணிப்பாளராகவும் முக்கிய பதவிகளை வகிப்பார்கள். கழகத்தின் அணித்தலைவராக (கப்டன்) திசார பெரேரா தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்.

சென்ற வருடம் ‘ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்’ கழகம் மிகச் சிறந்த முறையில் விளையாடி LPL கிண்ணத்தைத் தட்டிக்கொண்டமைக்கு அணித் தலைவர் திசார பெரேரவும் ஷோயைப் மாலிக்கும் காரணமாகவிருந்தார்கள் எனினும் வாகீசனின் முகாமைத்துவமும் வெற்றிக்குப் பங்களித்திருந்தது. பிரித்தானியாவில் பல மூன்றாம் நிலைக் கழகங்களுக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்த வாகீசன் சென்ற வருடம் ‘ஸ்டாலியன்ஸ்’ கழகத்தின் முகாமையாளாராகப் பணியாற்றியிருந்தார். ‘ஜாஃப்னா கிங்ஸ்’ கழகத்தில் அவரது பதவி கிரிக்கெட் பணிப்பாளராக (Director of Cricket) உயர்த்தப்படுகிறது.

‘ஸ்டாலியன்ஸ்’ கழகத்தின் 2020 LPL வெற்றிக்கு உறுதுணையாகவிருந்த, முன்னாள் தேசிய கிரிக்கெட் ஆட்டக்காரரான திலினா கண்டம்பி ‘ஜாஃப்னா கிங்ஸ்’ கழகத்தில் தலைமைப் பயிற்றுவிப்பாளாராகப் (Head Coach) பதவியேற்கிறார்.

உலகத் தர ஆட்டக்காரரும், சிறந்த ‘ஆல்ரவுண்டரும்’, சென்ற வருடம் ‘ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்’ கழகத்தின் LPL வெற்றிக்கு காரணகர்த்தாவாகவுமிருந்த அணித் தலைவர் திசார பெரேராவின் தலைமையில் 2021 LPL போட்டியிலும் கிண்ணத்தைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு ‘ஜாஃப்னா கிங்ஸ்’ கழகத்துக்கு உண்டு என எதிர்பார்க்கலாம்.