HealthNewsWorld

2021 இல் கோவிட்-19 விடைபெறுகிறது – ஒக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர்

ஒமைக்குறோன் ஏனைய கோவிட் வகை நோய்களைப் போன்றதல்ல

கோவிட்-19 இனி வரலாற்றில் எழுதப்பட்டுவிட்ட ஒன்று என்று என அடித்துக்கூறுகிறார் பிரித்தானிய அரசின் விஞ்ஞான விடயங்களுக்கான ஆலோசகரௌம், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜோன் பெல். செவ்வாயன்று பி.பி.சி.4 வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.



பிரித்தானியா முழுவதிலும் கோவிட் சமபந்தமான தரவுகளை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்பவர் பேராசிரியர் பெல். சாதனைகளை முறியடிக்கும் வகையில் பிரித்தானியாவில் கோவிட் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அவர் கூறுவதை நம்புவதற்குச் சிலர் சங்கடப்படலாம். ஆனால் அவரது தரவுகளின் பின்னால் ஒரு உண்மை இருக்கிறது. இப்போது மருத்துவமனைகளை நிரப்பிக்கொண்டிருப்பவர்களில் வெகு, வெகு குறைவானவோரே தடுப்பு மருந்துகளை எடுத்தவர்கள்.

“தடுப்பு மருந்துகளை எடுத்தவர்கள் மத்தியில் இறப்புக்களும், நோய்ப்பரம்பலும் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு முன்னர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மக்களது உயிர்கள் அகாலமாகப் பிரிந்துகொண்ட வருந்தத்தக்க சம்பவங்கள் இனி வரலாற்றில் எழுதப்படவேண்டியவை” என அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஓமைக்குறோன் திரிபைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஓமைக்குறோன் ஏனைய திரிபுகளைப் போல் தீவிரம் கொண்டது அல்ல. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முன்னர் போல் அதிகளவு ஒக்சிசன் கொடுக்கத் தேவையில்லை. மூன்றே நாட்களில் வீடு திரும்பிவிடலாம். ஒரு வருடத்துக்கு முன்னர் நாம் பார்த்த நோயல்ல இது” என பேராசிரியர் பெல் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுப்படி பிரித்தானியாவில் இதுவரை 12.4 மில்லியன் கோவிட் தொற்றுக்களும் 148,488 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியன நடமாட்டுக் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த போதிலும் இங்கிலாந்தில் அக் கட்டுப்பாடுகள் எதையும் பிரதமர் ஜோன்சன் அறிவிக்கவில்லை. ஜோன்சனின் இந் நடவடிக்கையை பேராசிரியர் பெல் வரவேற்றிருக்கிறார்.