2021 ஆம் ஆண்டு 400,000 குடிவரவாளர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் – பிரதமர் றூடோ

பிரதமர் றூடோவின் புத்தாண்டுச் செய்தி

கனடாவின் குடிவரவுச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 75 ஆவது வருட நிறைவவையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

“யார் கனடிய பிரஜையாக வரமுடியுமென்று வரையறுக்கும் இச் சட்டம் நடைமுறைக்கு வந்து இன்றுடன் 75 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இது எங்கள் தேசத்தின் அடையாளத்தைப் பிரகடனப்படுத்தும் முக்கியமான சாட்சியமாக விளங்குகின்றது” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



இச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் பிரித்தானிய பொதுநலவாய நாடுகளில் தனது குடிவரவைத் தானே தீர்மானிக்கும் முதல் நாடாக கனடா திகழ்கிறது. 75 வருடங்களில் இச் சட்டம் பல மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டு தற்போது “குடிவரவுச் சட்டம்” (Citizenship Act) என அழைக்கப்படுகிறது. இம்மாற்றங்களை அரவணைத்துக்கொண்டதன் மூலம் இன்று உலகெங்கும் வாழும் கனடியர்கள் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை மதிக்கும் அதே வேளை அவர்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பூரணமாக அனுபவிக்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களில் 2 மில்லியன் குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியிருக்கிறது. அதில் 400,000 குடிவரவாளர்களை அனுமதித்ததன் மூலம் 2021 வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய வருடமாகப் புகழ் பெறுகிறது.

“குடிவரவில் முதலீடு செய்வதன் மூலம் கனடிய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள முடியுமென கனடிய அரசு நம்புகிறது. அதே வேளை கனடாவைத் தமது நாடாக வரித்துக்கொள்ள விரும்பும் பலரது கனவுகளைப் கோவிட் பெருந்தொற்று நொருக்கிவிட்டதை நாமறிவோம். அதனால் தான் அகதிகள் மறுவாழ்வுத் திட்டம், குடும்ப உறவினர்களை ஒன்றிணைக்கும் திட்டம் ஆகியவற்றைத் துரிதப்படுத்துவதன் மூலம் குடிவரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கனடிய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஏற்றத்தாழ்வின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் சமத்துவமான பிரஜைகளைக் கொண்ட ஒரு நாடாகக் கனடாவை உருவாக்க வேணுமென்பதே எமது விருப்பம். ஒருவருடைய பின்னணி எதுவாக இருந்தாலும் ஒரு கனடியர் எப்போதுமே கனடியர் தான். துர்ப்பாக்கியமாக, பெருந்தொற்றுக் காரணமாக சிலர் சமூக, பொருளாதார ரீதியில் தடைகளை எதிர்கொண்டிருக்கலாம். நாடெங்கிலும் பல குடிவரவாளர்கள் வெறுப்புணர்வு, பாகுபாடு, அமைப்பு ரீதியான இனவெறுப்பு ஆகியவற்றினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோவிட் ஒழிப்பில் முனைப்போடு செயற்பட்டு வரும் அதே வேளை கனடியர்கள் அனைவரும் வெற்றியீட்டுவதற்கான சமமான சந்தர்ப்பங்களை வழங்குவதிலும் கனடிய அரசு தொடர்ந்து உழைக்கும்



ஒரு தேசமாக, நாம் பலமாக இருக்கிறோம். அதற்காக எமது மக்கள், எமது பற்சமூக அமைப்பு, எம்மிடையே காணப்படும் பேதங்கள் எனச் சகலதுக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டவன். குடிவரவாளர்களும், புதிய கனடியர்களும் பல தலைமுறைகளாக வெளிப்படைத்தன்மை, இரக்கம், மரியாதை ஆகிய தமது விழுமியங்களால் வரையறுத்துக்கொள்ளும் அதே வேளை எம்மெல்லோரையும் ஒன்றிணைக்கவும் செய்கின்றார்கள். இந் நாட்டைத் தமது ‘வீடு’ என அழைப்பதன் மூலம் இந் நாட்டின் அடையாளத்தை நிர்ணயிக்கும் அதே வேளை தமது சமூக, கலாச்சார, பொருளாதார பங்களிப்புகளினால் இன்று நாம் வாழும் நாட்டையும் உருவாக்கியிருக்கிறாகள். இதை நாம் மறக்கவோ அல்லது சாதாரணமான ஒன்றாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

கனடிய குடிவரவைக் கொண்டாடும் இந்த 75 ஆவது ஆண்டில், ஒரு கனடியனாக இருப்பதிலுள்ள பெருமையைக் கொண்டாடவும், இக் குடியுரிமையுடன் ஒருவருக்கு கிடைக்கும் உரிமைகளையும், பொறுப்புகளையும் கற்றுக்கொள்ளவுமென நான் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், விழுமியங்களையும் ஒரு கனடியக் குடும்பமாக நாம் அனுபவிக்க நான் அழைப்பு விடுக்கிறேன். பன்முகப்பட்ட அதே வேளை எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவருக்கும் நான் அறைகூவல் விடுக்கிறேன்” என கனடிய பிரதமர் ஜஸ்டின் றூடோ தனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் றூடோவின் அறிக்கை ஆங்கிலத்தில்