Spread the love

35% மான வாக்குகளையே அவர் பெறுவார்

ஒக்ஸ்போர்ட் எகோனோமிக்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்போது மக்களின் வருமானம், பண வீக்கம் ஆகிய பொருளாதாரத் சுட்டிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மாதிரி (model), ட்ரம்ப் வரலாறு காணாத தோல்வியைச் சந்திப்பார் என எதிர்வுகூறியிருக்கிறது.

கொரோனாவைரஸ் பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன், இதே நிறுவனம், நவம்பர் தேர்தலில் 55% மான வாக்குகளை பெற்று அமோக வெற்றியைக் காண்பார் என எதிர்வுகூறியிருந்தது.

“நாட்டின் பொருளாதாரமே ட்ரம்பின் தோல்விக்குக் காரணமாக அமையும். இந்த நிலை மாறினால் அது ஒரு அதிசயமாகவே இருக்கும். 1930 களில் வந்த பொருளாதாரப் ‘பெரு மந்தநிலை’ யைவிட (great depression) மிகவும் மோசமான நிலைக்குப் பொருளாதாரம் வீழப்போகிறது ” என ஒக்ஸ்போர்ட் எகோனோமிக்ஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று மீண்டும் ஒருதடவை நிகழுமானால் ட்ரம்ப் அவசரப்பட்டு ஊரடங்கைத் திறந்துவிட்டு விட்டார் என மக்கள் கூறுவார்கள். நோய்த் தொற்றுக் குறைந்தால் அவருக்கு கொஞ்சம் ஆதரவு அதிகரிக்கும் என அமெரிக்க கொள்கை மூலோபாய நிபுணர் கிரேக் வலியேர் தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரங்களை சீரமைத்து, போட்டியாளர் ஜோ பைடன் மீதான எதிர்ப்பிரசாரங்களை அதிகரித்து, அதே வேளை கொரோனாவைரஸுக்கான முழுப் பொறுப்பையும் சீனா மீது சுமத்தி அதைப் பொது எதிரியாக்குவதன் மூலம் தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் உண்டு என்பதையும் நிபுணர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த ஆய்வு நிறுவனத்தின் மாதிரி வடிவமைப்பு, 1948 முதல் சரியான எதிர்வுகளைக் கூறிவருகின்ற போதிலும் 1968, 1976 ஆம் ஆண்டுகளில் அதன் எதிர்பார்ப்புகள் பிழைத்திருந்தது.

“வழமையாக இம் மாதிரிகள் பிழைப்பதில்லை. இந்தத் தடவை நாம் அந்த ‘வழமையான’ சூழலில் இருக்கவில்லை என்கிறார் வலேரி. (சி.என்.என்.)


Print Friendly, PDF & Email
Related:  லிபியா | உலகின் அடுத்த போர்க்களம்