2019, வரலாற்றிலேயே சமுத்திரங்கள் அதியுச்ச வெப்பத்தை அடைந்த வருடம்!

Spread the love

ஜனவரி 13, 2020

“2019 இல் சமுத்திரங்களின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது இப் பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது என்பதையே காட்டுவதுமல்லாது அது காலநிலை அவசரத்தின் அளவுகோலாகவுமிருக்கிறது” என்கிறார்கள் சமுத்திரங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள்.

புதைபடிவ எரிப்புகளினாலும் (fossil fuel burning), காடுகளின் எரிப்பினாலும் உருவாகும் கரி வாயு, பூமிக்கும் அயனமண்டலத்துக்குமிடையில் சிறைப்பட்டிருக்கும்போது அது பூமியின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகிறது. இவ் வெப்பத்தின் 90 வீதத்தைச் சமுத்திரங்களே உறிஞ்சுகின்றன.

சமுத்திரங்களின் வெப்பம் அளவுக்குமதிகமாக உயரும்போது அது கடல் நீரில் கரைந்திருக்கும் உயிர் வாயுவை (ஒக்சிசன்) அகற்றி விடுகிறது. இதனால் அதில் வாழும் மீன் போன்ற உயிரினங்கள் சுவாசிக்கப் போதுமான உயிர்வாயு கிடைக்காமல் பெருந்தொகையாக மரணமடைகின்றன. இதனால் ஒட்டு மொத்த உணவுச் சங்கிலியே அறுக்கப்பட்டு உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் ஆபத்து விளையப்போகிறது என்று அச்சப்படுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். எனவே தான் இதைக் ‘காலநிலை அவசரம்’ (climate emergency) என அவர்கள் வர்ணிக்கிறார்கள்.

சமுத்திர வெப்பநிலை பற்றிய புள்ளி விபரங்கள் எடுக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த 10 வருடங்கள் வரலாற்றில் சமுத்திர வெப்பநிலை உச்சம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொருவரும் 100 மைக்கிரோவேவ் ஓவென்களை 24 மணித்தியாலங்களுக்கும் இயக்குவதற்குச் சமமான வெப்பத்துக்கு இணையானதாக அது கருதப்படுகிறது.

சூடான சமுத்திரங்கள் புயல், வெள்ளம், வரட்சி, காட்டுத் தீ, கடல் நீர் உயர்வு எனப் பல விளைவுகளுக்கும் காரணமாகின்றன. கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிவதற்கும் அவை காரணமாகின்றன.

பூமி எப்படி விரைவாக வெப்பமாகிறது என்பதைச் சமுத்திரங்களின் வெப்ப அதிகரிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். 2019, வரலாற்றில் அதியுச்ச வெப்பநிலையைக் கண்டது மட்டுமல்ல கடந்த பத்து வருடங்களில் ஒரு வருடத்தில் திடீரென்று வெப்பநிலை உயர்ந்த வருடமாகவும் அது பார்க்கப்படுகிறது.

1955 – 1986 இடைவெளியில் உயர்ந்த வெப்பத்தை விட, 1987 – 2019 இடையில் நாலரை மடங்கு அதிகமாக வெப்ப உயர்வு நிகழ்ந்திருக்கிறது. இதன் நேரடி விளைவாக , வரட்சி கொடிய வரட்சியாகவும், வெள்ளம் கொடிய வெள்ளமாகவும், குளிர் கொடிய குளிராகவும் எதிர்பாராத பிரதேசங்களை எதிர்பாராத காலங்களில் தாக்கும் வகையில் காலநிலை மாறும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

உலகின் பனி மூடிகள் உருகுவதால் சமுத்திரங்கள் உயர்ந்து சில நாடுகளும், தீவுகளும் நீரில் அமிழ்ந்து காணாமற் போகவும், நாடுகள் நீரினால் பிளவுபடவும் வாய்ப்புகளுண்டு எனச் சூழலியலாளர் எச்சரிக்கின்றனர். 1900 இற்குப் பிறகு, கடந்த 10 வருடங்களில் கடல் நீரின் மட்டம் அதிக உயர்வைக் கண்டுள்ளது. இன் நூற்றாண்டு முடிவடையும்போது கடல் நீர் 1 மீட்டர் வரை உயர்ந்திருக்குமெனவும், அதனால் 150 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பார்கள் எனவும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.

சமுத்திரங்கள் வெப்பமடைவது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அதன் 2000 மீட்டர் ஆழம் வரை தரவுகளைச் சேகரித்திருந்தார்கள். இப் பகுதியில் தான் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன. இத் தரவுகளை வைத்துக்கொண்டு இப்போதே நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தால் பூமியையும், அதில் வாழும் உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு இன்னும் சந்தர்ப்பமிருக்கிறது, ஆனால் அவசரமாகச் செயற்பட வேண்டுமென்கிறார்கள் அவ்வாய்வாளர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>