திருத்த வரைவை ஆராய குழு நியமனம்
செப்டெம்பர் 13, 2020: பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை அரசியல் யாப்பின் 20 வது திருத்த வரைவு பிரதமர் ராஜபக்சவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதெனத் தெரிகிறது.
பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்படப் பல்வேறு குழுக்கள், 20 வது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் , புதிய வர்த்தமானி அறிவிப்பு மூலம் அது சமர்ப்பிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொஸ்கமவில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு இத் தகவலைத் தெரிவித்தார்.
கட்சித் தலைவருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின்படி, பிரதமர் ராஜபக்ச இவ் விடயத்தில் தலையிட்டதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதென அமைச்சர் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
“கெளரவ பிரதம மந்திரி கட்சித் தலைவரின் கூட்டத்திற்காக அழைப்பு விடுத்திருந்தார். அக் கூட்டத்தில் நானும், வேறு பல கட்சித் தலைவர்களும் 20 வது திருத்தத்திலுள்ள சில அம்சங்கள் பற்றி பிரதமரிடம் எமது கரிசனையைத் தெரிவித்தோம். அதன் பின்னர் நீதியமைச்சருடன் இது பற்றிக் கலந்துரையாடத் தீர்மானித்தோம். ஆனால் அது நடைபெற முடியாமற் போய்விட்டது. இதன் பிறகு, 20 வது திருத்த வரைவை மீளாய்வு செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே இத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளிவரும்” என அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.