• Post category:SRILANKA
  • Post published:September 21, 2020
Spread the love

செப்டம்ப்ர் 21, 2020: இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு நாளை (செப்.22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

நீதி அமைச்சர் அல் சப்றியினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இத் திருத்த வரைவில் பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருப்பின், எதிர் மனுவை, ஏழு நாட்களுக்குள், அதை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பாராளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.

அதே வேளை, இத் திருத்த வரைவை ஏதாவது ஒரு கட்சி ஆட்சேபிக்குமானால் அதையும் ஏழு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனுவாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து 21 நாட்களுக்குள் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வேண்டும்.

இதந் மூலம், 19 வது திருத்தத்திலிருக்கும் பல சரத்துகள் மாற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி அவரது பணிக்காலத்தில் ஏதாவது தவறிழைப்பாரானால் அவரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் சரத்து தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. 19 வது திருத்தத்தின் பிரகாரம் தவறிழைத்தால் ஜனாதிபதி மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

20 வது திருத்தத்தை அமுல் படுத்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்ற கருத்தும் சில சட்ட மேதைகளால் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு அவசியமில்லை எனவும், பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இதைச் சட்டமாக்கலாம் என சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்.



தற்போதுள்ள நிலையில், சிறீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையுடன் ஆளும் கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும். ஆனாலும், பொதுஜன பெரமுன கட்சிக்குள், 20 வது திருத்த வரைவு குறித்து பல அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்.

சென்ற வாரம், வரைவை மாற்றியமைப்பதற்காக மஹிந்த ராஜபக்ச ஒரு உபகுகுழுவையும் நியமித்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் அதை மாற்றுவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்திருந்தாலும், பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு இவ் வரைவை, அதன் ஆரம்ப வடிவத்திலேயே சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பெரமுன அதிருப்தியாளர் எதிராக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலிருந்து பலர் தமது கட்சிக்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள் என பெரமுன கட்சிக்காரர் ஒருவர் நம்பிக்கை தெரிவிதிருந்தார். இதனால் 20 வது திருத்த வரைவு மாற்றங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email