Spread the love

அலம்பலும் புலம்பலும்: சிவதாசன்

இலங்கை அரசியல் அங்கு வாழும் பூர்வ குடிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது – என்று எழுதினால் என்னை விக்கியரோடு சேர்த்துக் கொண்டாடவென்று சிலர் புறப்படலாம். விக்கியர் பாராளுமன்றத்தில் இப்படி ஒரு போடு போட்டதும் அங்கிருந்த சில ஜந்துகள் துடித்துக்கொண்டு கிளம்பியது பெரிய விவகாரமாகப் போனது. அவரும் அதை எழுந்தமானமாகச் சொன்னாரா அல்லது தேவை கருதிய வார்த்தைகளா? தெரியாது. ஆனால் பேராசிரியர் நிரஞ்சன் சில நாட்களுக்கு முன் ‘கொலொம்பொ ரெலிகிராபில்’ எழுதிய கட்டுரை அதற்கு வேறொரு வடிவம் கொடுத்திருந்தது.

பேராசிரியர் நிரஞ்சன் எழுதும் கட்டுரைகள் மிகவும் சுவாரசியமானவை, பெரும்பாலும் நையாண்டி வாசம் (satirical) கொண்டவை. பிரித்தானியாவில் ஒரு மதுபான நிலையத்தில் (pub) தனது குடிகார சகாவான தேவாரத்துடன் (fictional character, may be?) உரையாடுவதாக சமகால அரசியல் நிலவரங்களை அவர் பிய்த்துப் போடுவது அலாதி, குடியாதவர்களும் சிரிக்கலாம்.

கடைசியாக எழுதிய கட்டுரையில், இரண்டு V கள் பற்றி எழுதியிருந்தார். இரண்டு பேரும் அரசியல்வாதிகள், தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒரு V ஒரு காலத்தில் இடதுசாரி. இன வேறுபாடுகள் இருக்கக்கூடாது எனச் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து வந்தவர். யாழ்ப்பாணம் வரை வியாபித்திருந்த அவரது கட்சியால் மக்களை அசைக்க முடியவில்லை. இறுதியில் அம்போவென்று தன்னுடைய இடத்துக்குள் முடங்கிக்கொண்டு வெல்லும் ஆயுதத்தைக் கையிலெடுத்தார். திடீரென்று born again சிங்களவாராகினார். இனவாதம் ஒரு அதி சக்திவாய்ந்த ஆயுதம். இப்போது அவர் ஆளும் கட்சியில் ஒரு பிரமுகர், ஒரு mover and shaker.

இரண்டாவது V தென்னிலங்கையில் நல்ல மரியாதையான தொழிலிலிருந்தவர், நாலு பேராலும் மதிக்கப்பட்டவர். இனவேறுபாடுகளில்லாமல் சகலருக்கும் மனு நீதியைப் பரிபாலித்து வந்தவர். இளைப்பாறிக்கொண்டு அம்போவென்று கொழும்பில் பேரப் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தவர். அவரை யாழ்ப்பாணத்துக்கு சிற்றரசசராக்கி கூட்டமைப்பு அழகுபார்த்தது. கூட்டமைப்பின் வேலியைப் பாய்ந்து தனது சொந்த அரசியலை brand செய்ய முயற்சித்தார். ஊஹூம். எதுவும் அசைவதாக இல்லை. திடீரென்று ஒரு நாள் அவர் born again தமிழரானார். இப்போது பாராளுமன்றத்தில். இனவாதம் ஒரு அதி சக்திவாய்ந்த ஆயுதம்.

மேலே கூறியது பேராசியரின் கட்டுரையை அடியொற்றியது. வசனங்கள் பல என்னுடையவை. ஆனால் கட்டுரையை அவர் இப்படி முடித்திருந்தார்.

“வார விடுமுறைகளில் இருவரும் தமது பேரப்பிள்ளைகளோடு விளையாடுவார்கள்”.

அது 2V க்களின் சமரசம் உலாவும் இடம்.

Satire at it’s best.*****

கோதாவின் நேரடி நெறிப்படுத்தலில் உருவான 20 வது திருத்தம், கிட்டத்தட்ட ‘The Book of Sinhalese’ எனக் கூறலாம். அதி சக்தி வாய்ந்த வஸ்திராயுதத்தை மக்கள் அவருக்குத் தட்டில் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

கோதாவின் வரவு தற்செயலானதல்ல. மெளரிய அரசன் அசோகனைப் போல. உலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த அசோகனின் மத மாற்றம் இந்திய உபகண்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தவன் என வர்ணிக்கப்படும் அசோகன் ஏன் திடீரென்று புத்த மதத்துக்கு மாறினான்? குற்ற மனம் காரணமென்று சொல்பவர்களும் புத்த தத்துவங்களால் திடீரென்று ஞானம் பெற்றிருக்கலாமென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே வேளை புத்த சமயப் பரம்பலினால் இதர சமயங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகிய புத்த சங்கத்தினர் பலமான அரசர்களிடம் மண்டியிட்டு இறுதியில் அவர்களை மதம் மாற்றும் நிகழ்வுகளில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம். இப்படியாகத் தமிழ்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு இலங்கையில் அடைக்கலம் கொண்ட போர்க்குணம் கொண்ட துறவிகளின் தொடர்ச்சி தான் இப்போதுள்ள மகாசங்கத்தினர் எனக் கூறுபவரும் உள்ளனர்.

எப்படியாயினும், அசோகனின் கலிங்கம் போன்றதுதான் கோதாவின் முள்ளிவாய்க்காலும். பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் கபாலங்களைக் கண்டு கோதா திடீரென்று பெளத்தராகிவிட்டாரென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரை அதி சக்தி வாய்ந்த ‘அசோகராக’ மகா சங்கம் கண்டுவிட்டது. போரின்போதும் போருக்குப் பிறகும் அவருடைய நடத்தைகளில் அமைதி தெரிகின்றது. மத சடங்குகளில் அதிகம் ஈடுபடுகிறார். புத்த சங்கங்களின் பீடாதிபதிகளைத் தனது உத்தியோகபூர்வ ஆலோசகர்களாக நியமித்திருக்கிறார். இலங்கையைப் புத்த தேசமாக்குவதற்காக அவர் பகிரங்கமாகவே உழைத்து வருகிறார். புத்தர் புடை சூழ அவர் இருப்பதைக் கண்டு ஆனானப்பட்ட கே.பி.யே வசமாகி விட்டார். என்னவோ கோதாவில் போர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அது தமிழர் மீதான கொலைவெறியாகவும் இருக்கலாம்.

கோதாவின் அரசியல் வருகை எழுந்தமானதானதல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எப்படித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்டார்களோ அதே போன்று சிங்கள மக்கள் கோதாவைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். எப்படித் தமிழீழ விடுதலைக்காக விடுதலைப் புலிகள் செய்த மாற்றியக்கப் படுகொலைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்களோ அதே போன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் நாட்டைக் காப்பாற்ற சிங்கள இராணுவமும் கோதாவும் மேற்கொண்ட ‘புண்ணிய பாவங்களாக’ சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.


அதற்குப் பரிசாக அவர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள். ஆனால் ஊழலற்ற அரசை அவரால் நிர்வகிக்க முடியவில்லை. 2015 இல் ஆட்சியை மாற்றினார்கள். துரதிர்ஷ்ட வசமாக நல்லாட்சி அரசு ஊழல் விடயத்தில் ஒரு படி மேலாகப் போனது. 2020 இல் வந்த ஆட்சி மாற்றம் கோதா என்ற ஒரு தனி மனிதனுக்கான மக்களின் பரிசு. இப்போது கோதா அசோகராக மாறியிருக்கிறாரா அல்லது மாற்றப்பட்டிருக்கிறாரோ, அவர் கலிங்கத்துக்குப் பின்னான அசோகராகவே நடந்து கொள்கிறார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இன்னும் பழைய சேற்றில் உழன்றுகொண்டிருப்பது மக்களுக்குக் தெரியும். கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும் கூட அவர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அது கோதாவின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக மட்டும்தான். இந்த ஊழல் பெருச்சாளிகளினால் கோதாவின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்கான checks and balances உடன் உருவாக்கப்பட்டதுதான் 20A. பிரதமராகவிருந்தாலென்ன, எந்த அமைச்சராகவிருந்தாலென்ன எவரையும் பதவி நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. அவர் தனது வச்சிராயுதத்தை தமிழர்கள், முஸ்லிம்கள் மீது பாவிக்கலாம். அல்லது சிங்கள தலிபான்கள் கைகாட்டும் இடங்களில் அவை பிரயோகப்படுத்தப்படலாம். சாதாரண புத்த பிக்குகளுக்கு அன்னமளிக்கும் கிராமத்து சிங்கள மக்களை அவர் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார். 20A திருத்தம் நிறைவேறுமானால் கோதா சர்வ வல்லமை பொருந்திய ஒரு அரசருக்குச் சமம். அடுத்த படி கோதா தெய்யோ தான்.

19A ஒரு பாவப்பட்ட ஜன்மம். ஒரு பல்லின மக்கள் வாழும் நாட்டுக்குத் தேவையான அத்தனை ஜனநாயகப் பண்புகளையும் கொண்டிருந்தது. அதை உருவாக்குவதில் மிகச் சிரமப் பட்டவர்கள், டாக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ண மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர். அதிலுள்ள முக்கிய அம்சம், அதிகாரப் பிரிவாக்கம் (separation of powers). ஒரு நாட்டைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான மூன்று அம்சங்களான, நிறைவேற்று அதிகாரம் (executive), சட்டவாக்கம் (legislative), நீதி பரிபாலனம் (judiciary) ஆகியன ஒன்றுக்கொன்று முரண்படாமல் அதே வேளை ஒன்றை ஒன்று மீறிவிடாமலும், தமது தனித்துவங்களோடும் சீரான ஆட்சியை நிர்வகிக்க வழிசெய்திருந்தது.

20A மூலம் ஜனாதிபதி (executive), உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையோ (judiciary) தனக்கு விருப்பமானவர்களை நியமிக்கலாம். பிரதமரையோ (legislative) அல்லது வேறெந்த அமைச்சர்களையோ ஜனாதிபதி எப்போதும் மாற்றலாம். அதாவது முக்காலியின் இரண்டு கால்களை இழுத்துப் பறிக்கும் உரிமையை ஒரு காலுக்கு மட்டும் வழங்குகிறது இந்த 20A.

*****பல வருடங்களுக்கு முன்னர் எனது அம்மா நோய்வாய்ப்பட்ட உறவினரைப் பார்க்க அழைத்துப் போயிருந்தார். நான் அப்போ சின்னப் பையன் (இப்போதும் தான்). உறவினர் இறப்பிற்கான தருணங்களை எதிர்நோக்கியிருந்தார். அம்மா என்னை வெளியே நிற்கச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வந்தார். வெளியே வரும்போது அவர் கண்களால் நீர் கொட்டியது. “பாக்க ஏலாமல் இருக்கு. நானெண்டாக் கழுத்தை நெரிச்சுக் கொலை செய்து போடுவன்” என்று சொந்னார். ஒரிரு வருடங்களின் பிறகு எனது தந்தையாருக்கு அந்த நிலை வந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் அம்மா மடியில் சுமந்தபடியிருந்தார். அருகிலிருந்த கழுத்தை அவரால் நெரிக்க முடியவில்லை.

தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி, ‘சின்னப் பாம்பெண்டாலும் பெரிய தடியால அடிக்க வேணும்’ என்று. முள்ளிவாய்க்காலில் நான் அம்மாவை யோசித்தேன்.

‘ஒரு மக்கள், ஒரு சாம்ராஜ்யம், ஒரு மக்கள் (EIN VOLK, EIN REICH, EIN FÜHRER!)’ என சர்வாதிகாரி ஹிட்லர் கூறியதாக வரலாறு சொல்கிறது. அவருக்குப் பின்னால் அப்போது குழந்தைகள் முதல் கூனியோர் வரை திரண்டார்கள். அதிகாரத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கோதாவும் ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்பதைப் பகிரங்கமாகவும் மீதியை இரகசியமாகவும் கூறுகிறார். ஹிட்லரும் தானாக வரவில்லை.

****

Print Friendly, PDF & Email