• Post category:SRILANKA
  • Post published:October 19, 2020
Spread the love

பெளத்த மகா சங்கத்தின் அனுமதியில்லாது ஜனாதிபதி அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவாராயின், நாமும் அதற்கேற்றவாறு எமது நடைமுறையை மேற்கொள்வோம் என அபயராம விகாரையின் முதன்மைப் பிக்கு முறத்தெட்டுவ ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

நேற்று, பெவிடி ஹண்டா இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட புத்த பிக்குகளின் கூட்டத்தில் பேசும்போது தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

“20 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமெனவே நாம் ஜனாதிபதிக்குக் கூறுவோம். அது நடைமுறைப்படுத்தப்படவேண்டுமானால் மகா சங்கத்தின் அனுமதியுடனேயே அது நடைபெற வேண்டும். பிடிவாதம் காரணமாகவோ அல்லது வேறு எவர்களின் தேவைகளுக்காகவோ அதை நடைமுறைப்படுத்த முயன்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

“20 வது திருத்தத்திலுள்ள பலவீனங்களைத் திருத்துங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றைக் களையுங்கள். அதை விட்டுவிட்டு, மகா சங்கத்தை ப் புறக்கணித்துவிட்டோ, அவர்களை இழிவுபடுத்தியோ அல்லது அவர்களது ஆலோசனைகளைக் கேட்காமலோ அதை நடைமுறைப்படுத்தினால் நாமும் அதை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம்” என தேரர் மேலும் தெரிவித்தார்.

முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் ராஜபக்சக்களுடன் நீண்டகால நட்பபைப் பேணி வருபவர். 2015 ஜனதிபதி தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதிலிருந்து ராஜபக்ச அரசியலின் செயற்பாட்டு மையமாக அபயராம விஹாரையே இருந்து வருகிறது.

Print Friendly, PDF & Email