Sri Lanka

20 வது திருத்தத்திற்குப் பிறகு இலங்கை சீனாவின் காலனியாகிவிடும் – ஞானசார தேரர் எச்சரிக்கை!


சீனர் ஒருவர் 25 இலட்சம் ரூபாக்களைக் காட்டிப் பாராளுமன்றத்திற்குள் வந்து நானும் ஒரு இலங்கையின் குடிமகன் எனக் கூறப் போகிறார்.

ஞானசார தேரர்
கலகொட அத்த ஞானசார தேரர்

“20வது திருத்தத்தின் பிரகாரம், இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியுமானால் விரைவில் சீனரும் இலங்கைக் குடியுரிமையைப் பெற்று பாராளுமன்றம் செல்வார்கள்” என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

“எங்களிடமுள்ள பிரச்சினை என்னவென்றால், 17 ஆவதுக்குக் கைகளை உயர்த்தியவர்கள் தான் 18 வதுக்கும் உயர்த்தி 19 வதைக் கொண்டுவந்தார்கள். இப்போது 20 வதுக்கும் உயர்த்த அவர்கள் தயாராகிறார்கள். 20 வது திருத்தத்துக்கு வாக்களிப்பார்களானால் அது வரலாற்றுத் தவறாக முடிந்துவிடும்.

“விசேடமாக, இரட்டைக் குடியுரிமை விடயத்தில், சீனர் ஒருவர் 25 இலட்சம் ரூபாக்களைக் காட்டிப் பாராளுமன்றத்திற்குள் வந்து நானும் ஒரு இலங்கையின் குடிமகன் எனக் கூறப் போகிறார். இது கட்டாயம் நடைபெறுமெனவே நான் எண்னுகிறேன், காரணம் இது ஒரு சீன காலனியாக மாறி வருகிறது.

“இது ஒரு ஆப்கானியருக்கோ அல்லது இந்தியருக்கோ கூட நடக்கலாம். இந்த நாட்டின் மீது அவ்வளவு பாசம் இருந்தால் மற்றய குடியுரிமையைத் துறந்துவிட்டு எவரும் அரசியல் செய்யலாமே?

“வெளிநாடுகளில் வாழும் தமிழ் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அவர்கள் கூடப் பாராளுமன்றத்தில் தமது எண்ணிக்கையைக் கூட்டி, பிரபாகரனால் செய்ய முடியாததைச் சாதிக்க முடியும்.



“இது ஒரு மிகவும் ஆபத்தான நிலைமை. விசேடமாக, கொள்வனவு விடயங்கள், கணக்குச் சீர்பார்க்கும் விடயங்களில், இந்தக் குடும்பம் எதை விரும்புகிறதோ அதற்கு நாம் உடன்பட வேண்டி ஏற்படும். எனவே தான் பலரோடும் கலந்தாலோசிக்கப்பட்டு உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை” என தேரர் தெரிவித்தார்.

வியாழனன்று (17), ஃபோர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வரும்போது ஊடகங்கள் மத்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.