“அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் பல உட் பிரிவுகள் தவறானவை எனவே அதை அங்கீகரிக்க முடியாது” என இலங்கை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக 20 வது திருத்த வரைவை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் எஸ்.ரி.ஜயநாக PC வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ‘குற்றங்களிலிருந்து விதிவிலக்கு’ (immunity) என்ற விடயம் பற்றிப் பேசும்போது, “இது ஒரு ஜனநாயக தேசம். இங்கு ஒருவருமே சட்டத்த மீறுபவர்களாக இருக்க முடியாது. நாட்டின் இறையாண்மை மக்களின் கைகளில் இருக்கிறது. எனவே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கை ஒன்றால் நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் நேருமானால், அல்லது, ஒருவரது அடிப்படை உரிமைகளுக்குப் பாதகம் நேருமானால், ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறும் வழியொன்றே ஒருவருக்குண்டு. இப்போது இருக்கின்ற அந்த வழியை 20 வது திருத்தம் அகற்றுகிறது” என்றார் அவர்.
20வது திருத்தத்திற்கு எதிராகத் இலங்கை வழக்கறிஞர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று, முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளதாகவும் செவ்வாய் முதல் அதன்மீது விசாரணைகள் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
20வது திருத்தத்தின் மூலம் நீதித் துறையின் சுயாதீனம் இழக்கப்படுவது பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது, “20வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், உச்ச நீதிமன்றம் உட்பட, சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளும் ஜனாதிபதியினால் மட்டுமே மேற்கொள்ளப்படும். அவர் விரும்பிய ஒருவரை நியமிக்கலாம், விரும்பாத ஒருவரை அகற்றலாம். காரணங்கள் தேவையில்லை” என்றார் அவர்.
“20வது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அது அதிகாரமில்லாத ஒரு சபையாகவே இருக்கும். அதன் பல உறுப்பினர்கள் 17வது, 18வது, 19வது திருத்தங்களுக்கு எல்லாம் கைகளை உயர்த்தினார்கள். 20வதுக்கும் உயர்த்துவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.