2/3 பெரும்பான்மை கிடைத்தால் 19வது திருத்தம் மாற்றப்படும் – ஜனாதிபதி ராஜபக்ச
டிசம்பர் 1, 2019
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாந்மை வாக்களித்தால் 19வது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படுமென ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது ‘தி இந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
13வது திருத்தம் நிறைவேற்றுப்பட்டுத் தமிழர் பெரும்பானமையாக வாழும் பிரதேசங்களுக்கு அதிகாரப்பகிர்வு கிடைக்குமா என்று பத்திரிகையாளர் கேட்டபோது, அது முழுமையாக நிறைவேற்றப்படாது என்றும், குறிப்பாகக் காவற்துறை அதிகாரம் போன்ற விடயங்கள் பற்றி இன்னும் பேசவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்பு விடயங்களில் இந்தியாவிடமிருந்து எந்தவகையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டபோது, முந்தைய அரசாங்கம் பாதுகாப்பு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை மாறாக, இந்த அரசு அதில் கூடிய கவனம் செலுத்துகிறது. ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தருகின்றன. சிறீலங்கா போலல்லாது, இந்தியா போன்ற நாடுகள் அவை பற்றிய போதிய புலனாய்வுத் தகவல்களை வைத்திருக்கின்றன என்றவர் தெரிவித்தார்.