News & AnalysisWorld

2 வருடங்களுக்கு மேலாக கிறிஸ்துமஸ் தீவில் வாடும் தமிழ்க் குழந்தைகள் – அகதிக் கோரிக்கை மறுக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்

2019 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பமான முருகப்பன் குடும்பம் மீண்டும் உலக அரங்கில் பேசப்படுமொன்றாக வந்திருக்கிறது.

2012, 2013 இல் தனித் தனியாக படகுகளில் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்த முருகப்பனும் அவரது மனைவி பிரியாவும் அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்து, கோபிகா, தர்சிகா என இரு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

அவுஸ்திரேலியாவின் குயீ*ன்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள கிராமப்புறமொன்றான பயோஎல என்னுமிடத்தில் வாழ்ந்த இக் குடும்பத்தின் அகதிக் கோரிக்கையை அரசு 2019 இல் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்களை விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலிய அரசு. இருப்பினும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை கொடுக்கப்படவேண்டுமென பல மனித உரிமை அமைப்புக்கள், மத ஸ்தாபனங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும், நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தும் இருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, முருகப்பன் குடும்பத்தை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியாது எனத் தற்காலிகத் தடையுத்தரவை வழங்கியதன் மூலம், விமானத்தில் ஏற்றப்பட்ட குடும்பத்தை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அழைத்திருந்தார். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு மறுக்கப்பட்ட அகதிக் கோரிக்கையில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல், பெற்றோரின் விசா காலாவதியானதும், அக் குடும்பத்தை கிறிஸ்துமஸ் தீவிற்கு அனுப்பி அங்கே இதர அகதிகளுடன் முகாம்களில் சிறை வைத்தது.

2019 முதல் இங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் முருகப்பன் குடும்பத்தின் இளைய புதல்வி தர்சிகாவுக்குச் சமீபத்தில் நிமோனியா நோய் வந்ததன் காரணமாக தர்சிகா, அவரது தாயார் பிரியாவுடன் அவுஸ்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்கள்.

முருகப்பன் குடும்பத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

இக் குடும்பத்தை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், மத ஸ்தாபனங்கள் எனப் பல அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் அரசாங்கம் அதற்கு இணங்க மறுத்து வருவதுடன், இக் குடும்பத்தை அமெரிக்கா அல்லது நியூசீலந்தில் குடியமர்த்த தாம் முயற்சிப்பதாக சமீபத்தில், மத்திய வெளிவிவகார அமைச்சர் மறிஸ் பெய்ன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

“இரண்டு குழந்தைகளும் அவுஸ்திரேலிய மாகாணமான குயீன்ஸ்லாந்தில் பிறந்தவர்கள். குயீன்ஸ்லாந்து அவர்களைத் திருப்பி அழைக்க விரும்புகிறது. அவர்களை மூந்றாவது நாடொன்றுக்கு அனுப்புவது தேவையற்றது மட்டுமல்ல கொடியதுமானது. ஆயிரக் கணக்கான அவுஸ்திரேலியக் குடும்பங்கள் இக் குடும்பத்தை திருப்பி அழைக்க விரும்புகின்றன. அப்படியிருக்க அவர்களை மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்புவது பற்றி யோசிப்பது தேவையற்றது” என தமிழ் அகதிச் சபை ஸ்தாபகர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

“மூன்றாவது நாடொன்றில் இக் குடும்பத்தை குடிமக்களாக்குவது பற்றிய பேச்சுக்கள் ஒருபோதும் எழவில்லை. அது பற்றி எனக்கோ அல்லது முருகப்பன் குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்கவில்லை. இப்படியிருக்க அமைச்சரது இவ்வறிக்கையை ஊடகங்கள் மூலம் நாம் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்” என முருகப்பன் குடும்பத்தின் அகதிக் கோரிக்கையைக் கையாளும் சட்டத்தரணி கரீனா ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தீவில் திருப்திகரமான வைத்திய வசதிகள் இல்லையெனவும், இதுவரை இக் குடும்பத்தை அங்கு வைத்துப் பராமரிக்க $6.7 மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கிறது எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.