1983 ஆடிக் கொடுமைகள்: தொடரும் நினைவுகள்….
தலையங்கம்
41 வருடங்கள். வருடா வருடம் நினைவுகூர்கிறோம். கொடுமைகளைப் புரிந்தவர்களும் அவர்களது சந்ததிகளும் இவற்றை நினைவுகூர்வார்களா? தெரியாது.
அவரவர் வயதுகளுக்கேற்ப அவரவர் நினைவுகளுக்கேற்ப, அவரவர் உணர்வுகளுக்கேற்ப, அவரவர் தேவைகளுக்கேற்ப அவரவர் வழிகளில் நினைவுகள் மீட்கப்படுகின்றன. அந்த வகையில் கொடூரத்தில் மோசமானவையாக இருந்தாலும் எண்ணிக்கையில் ஏழ்மையான 1956, 1977 ஆண்டுகள் வித்தியாசமானவை. உலக ஊடகங்களின் பார்வைக்குள் அதிகம் சிக்காதவை. விமானங்கள் இல்லாமையால் அகதிகளைக் கப்பல்களே தாயகம் கொண்டு சேர்த்தன. 1956, 1977 களில் கப்பல்களில் தப்பி ஓடியவர்கள் அடுத்த சில மாதங்களில் ரயில்களில் மீண்டார்கள். 1983 இல் விமானங்களில் தப்பியோடியவர்கள் மீளவேயில்லை. மாறாக மேலும் பலரை ஏற்றுமதி செய்தனர்.
உலக வரலாற்றில் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற்றுள்ளன. திட்டமிடப்பட்ட வகையில் மாறுபட்ட இனங்களிடையே தூண்டப்பட்ட வன்முறைகள் இன்னும் நடைபெற்றவண்ணமே இருக்கின்றன. கல்வியறிவும் நாகரீகமும் வளர்ச்சியுற்ற நாடுகளில் கொடுமைகள் புரிந்தவர்கள் மனச்சாட்சிகளால் தண்டிக்கப்படாவிட்டால் சட்டம் அவர்களைத் தண்டித்திருக்கிறது. இலங்கை இரண்டுமே இல்லாத நாடு. ஒருவகையில் மரத்துப்போன மனிதர்களைக் கொண்ட நாடு. பாதிப்பைச் செய்தவர்களும், பாதிப்புற்றவர்களும் எதுவுமே நடைபெறவில்லை என்பதுபோல் இயல்புவாழ்வுக்குத் திரும்பிவிட்ட காலம். இதனால் பரிகாரத்திற்கான தேவைபற்றி இருசாராருமே கவனிக்காத நிலை. இதன் காரணமாகவே இந்த வருடமும் நேற்றைய, நாளைய வருடங்களைப் போல் கடந்துபோகும். தீபங்களை ஏற்றி “நாமும் உள்ளோம் ஐயா” கணக்கில் நினைவுகூர மட்டுமே எம்மால் முடியும்.
1956 முதல் 2009 வரை இக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது எமது நோக்கமானால் தத்தம் பாரம்பரிய வாழிடங்களில் பாதுகாப்பாக வாழ தமிழருக்கு நாம் வழிசெய்து கொடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் அதற்காக முயற்சித்துத் தோல்வியடைந்தது. அரசியல் போராட்டம் இன்னும் உட்களத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
தமிழினம் நான்கு இனப்படுகொலைகளைச் சந்தித்துவிட்டது. ஐந்தாவது நடக்கவே கூடாது என்பதற்கான எந்தவித திட்டமும் தமிழர்களிடம் இல்லை. இறந்தவர்களை நினைவுகூர்வதில் தப்பில்லை. இனிமேல் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்பதற்கான திட்டங்கள் எங்குமே தீட்டப்படுவதாக இல்லை. அதுவரை 41, 42, 43…என ஜூலைப் படுகொலை நினைவுகள் தொடரும். பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தருள்க….
