18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாம்களில் கட்டாயத் தலைமைத்துவப் பயிற்சி – அமைச்சர் வீரசேகர வலியுறுத்து

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவ முகாம்களில் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவேண்டுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா வலியுறுத்தியுள்ளார்.

“இராணுவ முகாம்களில் பயிற்சியளிப்பதென்பது அவர்களை இராணுவ வீரர்களாக மாற்றுவது என்பதில்லை. அது சமூகத்தில் ஒழுக்கத்தைக் கொண்டுவரும். தற்போது நாட்டில் ஒழுக்கம் மிகவும் சீர்கெட்டுவிட்டது. மக்கள் பயமின்றி வாழவேண்டுமானால் சமூகத்திலிருந்து மோசடிக்காரரும் பாலியல் துஷ்பிரயோகிகளும் அகற்றப்பட வேண்டும். ஒரு குழந்தை காணாமற் போகிறது என்றால், தற்போதய நிலமைகளின்படி, அக் குழந்தையின் எதிர்காலத்தை நாம் உறுதி செய்ய முடியாது. ” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் மட்டும்தான் தற்போது தலைமைத்துவப் பண்புகளைப் போதிக்கும் வளங்களைக் கொண்டுள்ளன. அவைகளால் மட்டுமே ஒழுக்கத்தைப் போதிக்க முடியும். ஒரு தனி மனிதனின் ஆளுமையை முன்னேற்ற முறையானதொரு கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டால் அது ஒரு ஒழுக்கமான சமூக உருவாக்கத்துக்கு உதவி செய்யும்” என பாணந்துறையில் அளுபோமுல்ல மற்றும் ஹிரான பொலிஸ் நிலையங்களைத் திறந்துவைத்து உரையாற்றும்போது அமைச்சர் வீரசேகரா தெரிவித்தார்.