NewsSri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தீர்மான அறிக்கை – அவகாசம் நீடிக்கப்படலாம் ?

‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் ஆனால் அதை நான் சொன்னால் பாவம்’ என்றொரு மூத்தோர் கதியுண்டு. சிறீலங்காவின் ஐ.நா 30/1 அறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல் குறித்து இந்தக் கதைதான் துணைக்கு வருகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணயத்திற்கும் சிறீலங்காவிற்குமிடையில் பிரச்சினை எழுவதற்குச் சாத்தியம் உண்டு. அக்டோபர் மாதம் 2015 ம்  ஆண்டு அமெரிக்காவுடன் இணைந்து சிறீலங்கா நிறைவேற்றிய தீர்மானத்தின் (30/1) பிரகாரம் இந்த வருடம் மார்ச் மாதம் சிறிலங்கா தனது இறுதி அறிக்கையை ஐ.நா. ஆணயத்திற்க்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்ட 25 அம்சங்களில் சுமார் 7 ஐ மட்டுமே சிறீலங்கா அரசு அரை குறையாக நிறைவேற்றியிருக்கிறது. அதுவும் இரண்டு வருட கால நீடிப்பைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட பிறகு. மீதியிருக்கும் 17 அம்சங்களை நிறைவேற்றுவதில் இழுத்தடிப்பும் அரசியல் தலையீடும் அம்சங்களின் மீதான கருத்து வேறுபாடும் இன்னுமொரு கால நீடிப்பைக் கேட்பதற்குரிய சூழலையே உருவாக்கியுள்ளன. தேசிய சமாதான சபை கால நீடிப்பு வழங்க வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளது.

போர் முடிவுற்றவுடன் சர்வதேச சமூகத்தினால்  போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தல்களைத் தவிர்க்க அப்போதய ஐ.நா. செயலாளர் நாயகமும் அப்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் செய்துகொண்ட உடன்பாட்டின் பிரகாரமே தீர்மானம் 30/1 சாத்தியமானது. இத் தீர்மானத்தில் முக்கியமான அம்சங்கள்: காணாமற் போனவர்களின் விடயங்கள் தொடர்பாக ஒரு அலுவலகத்தை உருவாக்குதல், துன்புறுத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுபவர்கள் தொடர்பாக சர்வதேச நியமங்களை சட்டமாக்குதல், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மீளக் கையளித்தல், இராணுவத்தினர் மீதான விசாரணைகளை நம்பகத்தனமாக மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய ஒரு சட்டப் பொறிமுறையின் உருவாக்கம் என்பவை சில.

இத் தீர்மானத்தின் இணை முன்னெடுப்பாளர் என்ற வகையில் சிறீலங்கா தான் கொடுத்த வாக்குறுதிகளைக் கொடுக்கபட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற பொறுப்பிற்குள் தள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் சர்வதேச நீதிபதிகளையோ அல்லது விசாரணையாளரையோ அனுமதிப்பது சிறீலங்காவின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல் என சிங்கள கடும்போக்காளரும் ராஜபக்ச தரப்பும் இவ்வெதிர்ப்புக்கு அஞ்சி, கூடவே நல்லாட்சி அரசாங்கமும் இவ் விடயத்தில் இழுத்தடிப்பைச் செய்தன. தற்போது நடைபெற்று முடிந்த ரணில் – மைத்திரி இழுபறியைக் காரணம் காட்டி இன்னுமொரு கால நீடிப்பிற்கு அரசாங்கம் தயாராகுவது தெரிகிறது. கடும் போக்காளர்களின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காக சர்வதேச சமூகமும் ரணில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க இது தருணம் இல்லை என்ற முடிவுக்கு வந்தால் தமிழர் தரப்பு இன்னுமொரு கால நீடிப்புக்கு இணங்கிப் போகவேண்டி நிர்ப்பந்திக்கப்படலாம்.

தமிழர் தரப்பிடையே தமிழர் தேசியக் கூட்டமைப்பு  அரசியல் தீர்வொன்றைக் குறி வைத்தே தனது காய்களை நகர்த்துகிறது. அரசியல் தீர்வொன்றை விரைவில் பெற்றுவிடவேண்டுமென்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் கருவியாகவே ஐ.நா.வை அது பாவிக்கிறது. சர்வதேசத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். போர்க்குற்ற விசாரணைகள் என்ற பலமான ஆயுதத்தை சர்வதேசம் சுழற்றுவதும் அதற்காகத்தான். மறுபக்கத்தில் தமிழ்த் தேசியவாதிகள், இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகள் என்பவற்றின் மீது செலுத்தும் கரிசனையினளவுக்கு அரசியல் தீர்வில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. இது ஒரு வகையில் அரசியல் தீர்வைத் துரிதப்படுத்துவதற்கு கூட்டமைப்புக்கும் ரணில் அரசாங்கத்துக்கும் உதவலாம். அதே வேளை இன்னுமொரு கால நீடிப்பு வழங்கப்பட்டால் அது சிங்கள ஆட்சியாளர்கள் மீதான தமிழர்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாது கூட்டமைப்பின் மீதான தேசியவாதிகளின் பிரச்சாரங்களுக்கு மேலும் உரமேற்றுவதாகவும் அமையும். தென்னிலங்கைக் கடும்போக்காளர்களுக்கு இது அவலாகவே இருக்கும்.

சர்வதேச சமூகத்துக்கு சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதுவே முக்கிய நிகழ்ச்சி நிரல். தமிழர் தீர்வு இரண்டாவது பட்சம். ஐ.நா. தீர்மானத்தில் குறிக்கப்பட்ட அம்சங்களில் பல நிறைவேற்றுப்படவில்லை என்பது தெரிந்தும் தற்போதய அரசின் மீது நெருக்கடியைக் கொண்டுவர மாட்டார்கள். இன்னும் நிறைய தமிழர்களின் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சட்டத்தின் நிழல் படியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். பயங்கவாதத் தடைச் சட்டத்தைச் சர்வதேச நியமங்களுக்கேற்ற வகையில் மாற்றியமைப்போமென்ற உத்தரவாதத்தை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. நல்லிணக்கத்துக்கான நான்கு பொறிமுறைகளில் ஒன்றே ஒன்றுதான் (காணாமற் போனோர்க்கான அலுவலகம்) உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சாசனத் திருத்ததிற்கான இடைக்கால நகல் ஒன்றைத் தயாரிப்பதில் மட்டுமே அரசு வெற்றி கண்டுள்ளது. இக் கவசத்தை மட்டுமே போட்டுக்கொண்டு அரசாங்கமோ கூட்டமைப்போ நீண்டகாலத்துக்கு சமாளிக்க முடியாது.

தேர்தல்கள் அண்மித்து வரும் தருணமிது. ஜனாதிபதி தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடைபெற வேண்டும். மாகாணசபைத் தேர்தல்கள் அதற்கு முன்னால் நடைபெறலாம். இக் காலத்தில் கொஞ்சம் மனச்சாட்சியுள்ளவர்களும் ‘அரசியல்வாதிகளாக’ மாற்விடுவது வழக்கம். அதற்கு முன்னர் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது நல்லது.  பெப்ரவரி 4ம் திகதி அரசியல் திருத்த நகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம். சர்வதேச நீதிபதிகளைக் கொண்டுவருவதை விட அரசியல் தீர்வைக் கொண்டுவருவது அரசுக்கும் நல்லது. அடுத்த தேர்தலுக்கு இலகுவாக முகம் கொடுக்கலாம்.

எனவே இப்படியான நெருக்கடி இருக்கும் பட்சத்தில் அரசு தன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்குச் சமர்ப்பிக்காது. அதைச் செய்யவேண்டுமென சர்வதேசமோ அல்லது தமிழர் தரப்போ நிர்ப்பந்திப்பதனால் தமிழருக்குச் சாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படுமென நம்புவதும் ஏற்புடையதல்ல.

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்…