• Post category:ENVIRONMENT
  • Post published:October 9, 2020
Spread the love

சூழல்

அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞானக் கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, சுமார் 15 மில்லியன் தொன் மைக்கிறோபிளாஸ்டிக் கழிவுகள் கடலினடியில் படிந்துபோயுள்ளதாக அறியப்படுகிறது. கட்லில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளோடு ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்காகும்.

வருடா வருடம் பல மில்லியன் தொன்கள் பிளாஸ்டிக் கழிவு கடலை அடைகிறது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருந்தும், கடலினடியில் படிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் நுண் துணிக்கைகள அவர்கள் இதற்கு முன்னர் கணித்திருக்கவில்லை. 5 மி.மீ. அளவிலும் சிறிய பிளாஸ்டிக் கழிவுகளை ‘மைக்கிறோ பிளாஸ்டிக்’ என வகைப்படுத்துகிறார்கள். கடலின் அடியில் வாழும் உயிரினங்களையும் சூழல் சமநிலையையும் இது வெகுவாகப் பாதிக்கிறது.

இந்த ஆய்வுக்காக, விஞ்ஞானிகள் தொலையியக்கக் கருவிகளைக் கொண்டு 51 வித்தியாசமான கடற்படிவுகளைத் துளைத்தெடுத்து ஆராய்ந்தனர். தென் அவுஸ்திரேலிய கடற்கரைக்குச் சமீபத்திலுள்ள 6 இடங்களில், 5,430 முதல், 10,046 அடிகள் ஆழத்தில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளிந்படி ஒரு கிராம் படிவில் 14 பிளாஸ்டிக் துணிக்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவைக் கடற் பரப்பு முழுவதும் விஸ்தரித்தால் 15 மில்லியன் தொன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்தரைமீது படிந்திருக்க வாய்ப்புண்டு என அவ் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கடலில் மேல் மிதக்கும் பல பிளாஸ்டிக் கழிவுகளை சுறாக்களும், திருக்கைகளும், திமிங்கிலங்களும் உண்பதால் அவை சமிபாடடையாது இவ் விலங்குகள் இறக்க நேரிடுகின்றன. சில பிளாஸ்டிக் நாடாக்களும், சுருள்களும் ஆமைகள் போன்ற விலங்குகளின் உடல்களில் சுற்றி அவற்றின் இயக்கத்தைத் தடுத்துவிடுகின்றன. கடலினடியில் தேக்கமடையும் மைக்கிறோபிளாஸ்டிக் கழிவுகள் சிறிய உயிரினங்களின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வியலைப் பாதிக்கின்றன என அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இப்படியான ஆய்வுகள் மூலம் மக்கள் தமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளக் கூடுமெனத் தாம் நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email