Spread the love
CBC Marketplace மேற்கொண்ட விசாரணை
சிவதாசன்

பெப்ரவரி 7, 2020

தென்னாசியப் பெண்களிடையே தோலை வெண்மையாக்கும் பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக மிகவும் மும்முரமாகி வருகிறது. தமிழர் கலாச்சாரத்தில் எப்போது இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டதோ தெரியாது ஆனால் அதற்கு ஆண்களும் முக்கியமான காரணம் தான்.

வெள்ளைத் தோலுள்ள ஆண்களும் பெண்களும், அழகு குறைந்தவர்களாயினும் திருமணம் என்று வரும்போது அவர்களுக்கு மவுசு தான். இதனால் தமது தோலை வெண்மையாக்குவதில் முதலீடு செய்பவர்கள் அதிஒக லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மை.

பல நூறாண்டுகளாக இப் பழக்கம் தென்னாசிய, ஆபிரிக்கப் பெண்களிடம் இருந்து வருகிறது. இலங்கை, இந்தியாவில் சந்தனம், மஞ்சள், கடலை மாவு என்று அரைத்துப் பூசுவது வழக்கமாக இருந்துவருகிறது. அவையும் ஒரு காலத்தில் ‘அழகுக்கு அழகு சேர்க்கும் ஆபரண’ வகைகளில் ஒன்றாக இருந்து வந்தன. செயற்கைச் ‘சாயமகற்றிகள்’ (bleach) சந்தையில் குவிக்கப்படும் வரை.

இச் சாயமகற்றிகள் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறதென்று கனடாவில் பெரும் சமூக விற்பனை நிலையங்களில் அவற்றை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இங்குள்ள ‘சிறுபான்மையினரின்’ கடைகளில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. வெள்ளை இனத்தவர் இவற்றைப் பாவிக்கத் தேவையில்லை என்பதாலோ என்னவோ அரசாங்கங்களும் இவை பற்றி எந்தவித அக்கறையும் எடுப்பதில்லை.

இந்த வாரம் கனடாவின் பிரதான ஊடகமான CBC தொலைக்காட்சி தனது ‘Marketplace’ என்ற பிரபலமான நிகழ்ச்சியொன்றின் மூலம் இத் திருட்டு வியாபாரத்தின் பின்னாலுள்ள அதர்மச் சமூகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இந் நிகழ்ச்சி பொதுவாக, அதிகாரமும் பலமும் மிக்கவர்களுடன் பொருத முடியாதிருக்கும் பலம் குறைந்த மக்களிடையே இருக்கக்கூடிய சமூகப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் பல நல்ல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தோல் ‘ப்ளீச்’ சுகளைப் பற்றி (bleach = பளீச்) CBC எப்படியோ அறிந்துவிட்டது. இந்த தோல் வியாபாரத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் நிறையப் பெண் செயற்பாட்டாளர்களும் இருக்கிறார்கள். ‘Shadeism’ என்றொரு குறும்படம் / ஆவணப்படம் ஒன்றைக் கனடியத் தமிழர் நயானி தியாகராஜா எடுத்திருந்தார்.

‘நிறம்’ எங்கள் இயற்கை அழகு என்று தன்நம்பிக்கையுடனும், ஒருவகை இறுமாப்புடனும், இருக்கவேண்டுமென்ற போக்கை அடிப்படையாகக் கொண்ட து இப்படம்.

CBC சொல்ல வருவது இந்த செயற்கை ‘பிளீச்’ கள் பற்றியது.

CBC இப்படியான சாயமகற்றிகளைப் பரிசோதனைகூடத்தில் பரிசோதித்து அவை எவ்வளவு தூரத்துக்கு உடலுக்குத் தீங்கி விளைவிக்கக்கூடியவை என்பதைப் புட்டுப் புட்டு வைக்கிறது. சிலவற்றில் மேர்க்குரி, ஹைட்றோகுயினோன், ஸ்டெறோயிட்கள் கலந்திருப்பதாக ஆய்வுகூடப் பகுப்பாய்வுகள் மூலம் CBC கண்டறிந்துள்ளது.

மேர்குரி, ஹைட்றோகுயினோன் ஆகியன, நீண்டகாலப் பாவனையின்போது, புற்றுநோய்களை விளைவிக்கக்கூடியன (carcinogens) என மருத்துவ சமூகம் தெரிவிக்கிறது. கனடாவில் இப் பொருட்களின் விற்பனை சட்டவிரோதம் என கனடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related:  அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு

CBC Marketplace குழுவினர் கனடாவின் பல மாகாணங்களிலுமிருந்தும், பல நகரங்களிலுமிருந்தும் இப்படியான பொருட்களைக் கொண்டுவந்து ஆய்வு செய்தார்கள். இக் குழு இப் பொருட்களை வாங்குவதற்குக் கடைகளுக்குச் செல்லும்போது ஒளித்துவைக்கப்பட்ட வீடியோ கமராக்கள் மூலம் அங்குள்ள பணியாளர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களையும் பதிவு செய்திருந்தார்கள். அவர்களில் சிலர் இப் பொருட்கள் பற்றிய உடற் தீங்குகள் பற்றி எச்சரித்தும் இருந்தனர். ‘இக் கிரீமைப் பூசிச் சில செக்கண்டுகளில் வெள்ளையாகி விடுவீர்கள். இரண்டே வாரங்களில் அதன் முழுப்பலனும் தெரியும்’ என ஒருவர் கூறியிருந்தார்.

ரொறோண்டோ சரும வைத்தியர் டாக்டர் லீசா கெல்லெட் அவர்களை CBC செவ்வி கண்டிருந்தது. அதில் அவர் இப் பொருட்கள் பற்றி எச்சரிக்கிறார். ஒருவரது சருமம் இப்படியான கிரீமைப் (hydroquinone) பாவித்ததால் நிரந்தரமாக நீலமும் கறுப்புமாக மாறிவிட்டது என்க் கூறுகிறார்.

'14 நாட்களில் வெள்ளைத் தோல்' விளம்பரங்களை நம்பாதீர் | CBC எச்சரிக்கை! 1
ஹைட்றோகுயினோன் மிகைப் பாவனையின் விளைவு – படம் CBC / Indian Journal of Dermatology

தனது நோயாளி ஒருவர் மிக மோசமான எக்சிமாவுடன் வந்தார் எனவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி வந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

தமது ஆய்வுகூடப் பெறுபேறுகளில் பெரும்பாலான பொருட்கள் மிக மோசமான ஆபத்தான பொருட்களைக் கொண்டிருந்தன எனவும் அவற்றில் ‘Maxi Light’ என்ற கிரீம், சுகாதாரத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டை மீறிய அளவுக்கு (2%) ஹைட்றோகுயினோன் பதார்த்தத்தையும், பட்டியலில் சொல்லப்படாத குளோபற்றசோல் புறோப்பியோனேட் என்னும் பதார்த்தத்தையும் கொண்டிருந்தது என்கிறது CBC. குளோபற்றசோல் புறோப்பியோனேட் ஒரு சருமத்தில் பூசப்படும் ஸ்டெரோயிட். மருத்துவரிந் சிபார்சு இல்லாது பாவிப்பவர்களுக்கு சில வேளைகளில் சருமம் எரிந்துபோகவும் கூடும்,

‘Miss White’ எனப்படும் கிரீம் இரண்டு மடங்கு ஹைட்றோகுயினோனைக் கொண்டிருந்தது. ‘இரண்டு வாரங்களில் வெள்ளையாகிவிடும்’ வித்தையை இம் மருந்தை விற்பவர் தான் கூறியிருந்தார். இக் கிரீமை விநியோகம் செய்யும் கனடிய விநியோகிஸ்தர் The Mitchel Group’ இன் பேச்சாளர் கருத்துப்படி அப் பொருட்களைத் தாம் விநியோகிப்பதில்லை எனவும் ‘அது கள்ளக் கொப்பி (counterfeit)’ ஆக இருக்கலாம் என அவர் கருதுவதாகவும் சொன்னார்.

உலகம் முழுவதும் பிரபலமானதும், அதிகம் விற்பனையாவதுமான Caro White எனப்படும் கிரீமின் லேபிளில் 2% hydroquinone எனக்கூறியிருந்தாலும் ஆய்வுகூடப் பரிசோதனையின்போது 4% த்தைக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதை விநியோகிக்கும் Dream Cosmetics நிறுவனமும் ‘அது கள்ளக் கொப்பி’ கதையேதான் சொன்னார்களாம்.

CBC தொடர்புகொண்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை சொன்னது ” அப் பொருட்களைக் கனடாவில் விற்பனை செய்வதற்கு நாம் அனுமதிக்கவில்லை” சிலர் ” அவற்றை நாம் சருமத்தை வெள்ளையாக்குவதற்கெனத் தயாரிக்கவில்லை, மாறாக வித்தியாசமான நிறங்களை (different shades) உருவாக்குவதற்காகவே தயாரிக்கிறோம்” என்கிறார்கள்.

இப் பொருட்கள் பலவும் ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா போன்ற இடங்களிலுள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டாலும் கனடாவில் அவற்றுக்கு ஏகப்பட்ட கிராக்கியுண்டென்றும், பெரும்பாலான தெற்காசிய, ஆபிரிக்க, கரீபிய சமூகங்களைச் சேர்ந்தவர்களின் ‘ அழகுக்கு அழகு சேர்க்கும்’ கடைகளில் அவர்களது சமூகத்தினருக்கே விற்பனையாகிறதென்றும் CBC சொல்கிறது.

Related:  அழற்சி (inflammation) என்றால் என்ன?

இவ் ‘வெள்ளையாக்கிகள்’ மேலை நாடுகளில் நல்ல வருமானத்தையீட்டிக் கொடுக்கின்றன. 2024 இல் US$ 31 பில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் இவ் வியாபாரத்தின் ஏக விநியோகஸ்தராக நவீன ‘East India Company’ இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'14 நாட்களில் வெள்ளைத் தோல்' விளம்பரங்களை நம்பாதீர் | CBC எச்சரிக்கை! 2
நிறம் மாறும் பூ

படத்தில் காணப்படுபவர் கனடா, பிரம்டனைச் சேர்ந்த சப்றீனா மங்கு. இவர் 10 வயதில் தனது ‘வெள்ளைப்படுத்தும்’ காரியத்தை ஆரம்பித்தாராம். பின்னர் அவர் வெள்ளையாகிவிட்டது மட்டுமல்ல அழகுராணிப் போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறார். “என்னுடைய வெளிறிய தோலைக் குடும்பத்தினரும், நண்பர்களும் புகழ்கிறார்கள். எனது குடுபத்தினரிடமிருந்து தான் இதைக் கற்றுக்கொண்டேன்” எனத் தன்னைப் புகழ்ந்து கொள்கிறார்.

'14 நாட்களில் வெள்ளைத் தோல்' விளம்பரங்களை நம்பாதீர் | CBC எச்சரிக்கை! 3
சப்ரீனா மங்கு (இடது, பின் வரிசை) படம்: CBC/ Sabrina Manku,
'14 நாட்களில் வெள்ளைத் தோல்' விளம்பரங்களை நம்பாதீர் | CBC எச்சரிக்கை! 4
‘பெயர்ஸ் சவர்க்காரத்தின் 19ம் நூற்றாண்டு விளம்பரம் – படம் CBC / Historytoday.com

‘வெள்ளை’ வியாபாரம் புதியதல்ல என்பது சவர்க்கார விளம்பரத்தைப் பார்க்கவே தெரிகிறது.

தென்னாபிரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகள் இப்படியான ‘அழகுசாதனப்’ பொருட்களின் விற்பனையைத் தடைசெய்து வருகின்றன. குறிப்பாகப் பிரித்தானியாவில் இவற்றை விற்பனை செய்யும் கடைகள் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுத் தேடுதல் நடத்தப்படுகின்றன. அங்கு உள்ளக விவகார மந்திரி ஒரு இந்திய வம்சாவளியினராக இருப்பதற்கும் இந் நடவடிக்கைக்கும் எந்தவித சம்பந்தமுமுண்டு என நான் கூற வரவில்லை.

கனடாவிலும் சில கடைகளில் சுகாதார திணைக்களத்தார் சென்று பார்த்ததாக அறியப்படுகிறது. CBC நிகழ்ச்சியின் பிறகு அத் திணைக்களம் ஒரு எச்சரிக்கை அறிக்கை விட்டிருக்கிறது. இனி அடுத்த அரசாங்கத்தின் காலத்தில் ஏதாவது நடக்குமா என்று பார்க்கலாம். எல்லாம் வாக்கு வங்கிகளில் கைவக்கும் விடயம், கொஞ்சம் அவதானமாகக் கையாளப்பட வேண்டியது. ‘We are taking it very seriously’ எனக் கனடியப் பிரதமர் விரைவில் அறிக்கை விடவும் கூடும்.

கனடியப் பிரதமர் உண்மையில் பாவம் தான். ஏற்கெனவே அவர் ‘Blackface’ விடயத்தில் மிகவும் நோகடிக்கப்பட்டுவிட்டார். அதிலிருந்து மீளுவதற்கு ‘Whiteface’ என்றொரு கலகத்தைத் தூண்டிவிடக் கன்சர்வேட்டிவ் காரர்கள் முயலலாம். அதில் அவர்கள் “பிரதமர் ட்றூடோ இப் பொருட்களைத் தானே பாவித்து மீண்டும் வெள்ளையாக வந்துவிட்டபடியால் தான் இப் பொருட்களைத் தடைசெய்ய முயலவில்லை’ என்றொரு போராட்டத்தையும் ஆரம்பிக்கலாம்.

'14 நாட்களில் வெள்ளைத் தோல்' விளம்பரங்களை நம்பாதீர் | CBC எச்சரிக்கை! 5
ட்றூடோவைப் பிரச்சினையில் மாட்டிய படம்

முடிவாக, சப்றீனா மங்கு தான் இப்போது வெள்ளையாக்கும் கிரீம் எதையும் பாவிப்பதில்லை எனவும் தனது சொந்த நிறத்தையிட்டுத் தான் பெருமைப்படுவதாகவும், ஏனையோரும் தன்நைப் பின்பற்றவேண்டுமென்றும் கூறியதாகச் CBC கூறுகிறது.

ஒன்றில் அவர் திருமணம் செய்திருக்கலாம் அல்லது அவர் ‘Shadeism’ படத்தைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் நயானி தியாகராஜா பெருமைப்படக் காரணமுண்டு.

கிரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் அவர் தலையைக் கொண்டுவந்தால் மில்லியன் டாலர் தருவதாக fatwa போடாமலிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

CBC Marketplace நிகழ்ச்சியை Asha Tomlinson, Jeremy McDonald, Tyana Grundig ஆகியோர் தயாரித்து வழங்கியிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email