13 A | ரணிலிடம் மாட்டிய சுமந்திரன்
வடிவேலர் உலா
கிருஷ்ணானந்தா
வடிவேலர் இன்று வேளைக்கு வந்துவிட்டார். “என்ன வடிவேலர் டிசைனர் சேட்டும் அதுகுமா வெளிக்கிட்டிட்டீங்க. மகன் கனடாவில இருந்து வந்திருக்கிறார் போல?”
“மகன் வெளிக்கிடறதுக்கு முதல்லையே என்ர மனிசி கோல் பண்ணிச் சொல்லிப் போட்டுது “வால்மார்ட்டில வாங்கிற உடுப்புகளை மட்டும் இங்க கொண்டுவந்திடாத இஞ்ச சனம் நக்கலடிச்சுப் போடுங்கள்” எண்டு. இந்த சுவிஸ் காரர் கோவிலுக்கெண்டு வந்து நல்லாப் பழுதாக்கிப் போட்டாங்கள். அது கிடக்குது என்னவாம் இந்த விக்கிரமசிங்கி. 13 தருமோ தராதோ. பாத்தியா அந்தாளின்ர பேச்ச. சுமந்திரனையே வாயடைக்கப்பண்ணிப் போட்டுது. பாரிஸில அந்த தமிழ் மனிசன் எப்பிடிக் கஷ்டப்பட்டிருக்குமெண்டு இப்ப தெரியுது”
“விக்கிரமசிங்கவைத் தெரிஞ்சுகொண்டுதானே நாங்களும் போகவேணும். அவரின்ர சபையில அவரை மாதிரித்தானே நடக்கவேண்டும். ஆங்கிலத்தில இதை grandstanding எண்டு சொல்லுவினம். தமிழில வேணுமெண்டா ‘எடுப்புக்காட்டுதல்’ எண்டு சொல்லலாம்”
“சுமந்திரனைப் பிடிக்காத ஒரு காய் சொல்லுது இவங்கள் ரெண்டுபேரும் சேர்ந்து நாடகமாடிறாங்கள் எண்டு. பாராளுமன்றத்தில தூள் பறக்கப் பேசிற சுமந்திரன் ஏன் இப்பிடி அடங்கிப் போச்சுதெண்டு கனபேருக்குச் சந்தேகம்”
“சுமந்திரனை அந்தாள் எங்க கதைக்க விட்டது. ஒவ்வொரு வசனத்தையும் சொல்லிப் போட்டு கதைக்கிற ஆளின்ர முகத்தைப் பாக்காமல் மற்றவையின்ர முகங்களைப் பார்க்கிறவையில ஒரு உளநலக் குறைபாடு இருக்கு. “நான் அவரை மட்டந்தட்டிப் போட்டன்” என்கிற நினைப்பு. விக்கிரமசிங்க தமிழரை மட்டுமில்லை சிங்களவரையும் இப்பிடித்தான் செய்யிறது. அந்த மனிசன் தனக்கு எல்லாம் தெரியும் எண்ட நினைப்போட இருக்கிற ஆள். சுமந்திரனுக்கும் இது நல்லாத் தெரியும். எண்டபடியா இந்தக் கூட்டத்தில நடந்ததை வைச்சு நாங்க எதையும் முடிவெடுக்கத் தேவையில்லை”
“எண்டாலும் தமிழாக்களை இப்பிடி நடத்தேக்கை பாக்கக் கஷ்டமாக எல்லோ இருக்கு”
“இல்லை வடிவேலர். சுமந்திரன் ஆதரவாளர்களோ அல்லது எதிராளியளோ உணர்வாளர்களுக்கு மட்டும் தான் அப்பிடி இருக்கும். அதில சுமந்திரன் வடிவாகச் சொல்லுது “நீங்க உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவனெண்டு சொல்லிப்போட்டு பிறகு பின்வாங்கீட்டீங்க. அதை முதலில நடத்தி உங்கள் மீது நம்பிக்கையை உண்டாக்குங்கோ மிச்சத்தைப் பிறகு பாப்பம்” எண்டதுதான் சுமந்திரன்ர வாதம். அதுக்கு “நீங்க குழம்பிப் போயிருக்கிறீங்க” எண்டு பதில் சொல்கிறது விதண்டாவாதம். அவர் சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி. நல்லாட்சி காலத்தில எல்லாப் பிழைகளையும் மைத்திரி தலையில போட்டுவிட்டுத் தப்பினவர். சனத்துக்குத் தெரிஞ்சபடியாலதான் அவரை எலெக்ட் பண்ணேல்ல. இப்பவும் அவரின்ர வண்டவாளம் எல்லாம் உலகுக்கும் தெரியவந்திட்டுது. எண்டபடியா நீங்க பயப்பிடுகிறமாதிரி ஒண்டுமில்லை. நுணலும் தன்வாயால் கெடும். இருந்து பாருங்கோ”
“அது சரி, ஒரு சமரசத்துக்காக “வடக்கு கிழக்கு இளைஞர்களைப் பொலிசில சேர்த்துக்கொள்ளுவம். பொலிஸ் அதிகாரமில்லாத அதிகாரப் பகிர்வை நாங்க எடுப்பம்” எண்டிற மாதிரி விக்கியர், அங்கஜன் போல ஆக்கள் சொல்லுகினம். அதைப்பத்தி நீ என்ன நினைக்கிற?”
“அதில ஒரு விசயமிருக்கு. என்ன இருந்தாலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் எழுத்தில இருக்குது. அதில இருக்கிற ஒரு சரத்துக்களும் மாத்துப்படவில்லை. அதைச் செய்யிறதெண்டா பாராளுமன்றத்தில மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடதான் செய்யலாம். இப்ப இருக்கிற மாகாணசபைக்கு மத்திய அரசு குடுக்க வேண்டிய பொலிஸ் காணி அதிகாரங்களைக் குடுக்கேல்லை எண்டாலும் அவை இல்லை எண்டு ஆகிவிடாது. எண்டபடியா காணி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு மாகாணசபையை நடத்திறது தான் நல்லது. இப்ப எங்கட அதி முக்கிய பிரச்சினை காணி பறி போவது. அதை உடனடியா நிப்பாட்ட காணி அதிகாரத்தோட அதிகாரப் பகிர்வு உடனடியாகத் தேவை. அதுமட்டுமில்லை. காணி அதிகாரம் மாகாணசபையிட்ட இருந்தாலும் தொல்லியல், வனத்துறை, சூழல், இயற்கை வளம், பேராறு எண்டு பல திணைக்களங்களுக்கு கீழ வருகிற காணிகள் மாகாணசபைக்குக்கீழ் வராது. அதனாலதான் அவங்கள் அவசரம் அவசரமாக காணிகளுக்கு எல்லைக்கல் போடுறாங்கள். காசை வாங்கிக்கொண்டு எங்கட சனங்களே எல்லைக் கல்லுகளை நடுகுதுகள். இதனால எந்த வடிவத்தில 13 கிடைச்சாலும் அதை எடுக்கிறது நல்லது. எண்டபடியா 13 அவங்கள் சொல்லிறதும் சரிதான்”
“ஆனாக் கூட்டமைப்பு விடாப்பிடியா 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தச்சொல்லி நிக்கிது. அவங்களுக்கு இது விளங்காமலில்லையோ?”
“அவங்களுக்கும் அது தெரியும். இந்தியாவின்ர ஆலோசனையில்லாம அவை ஒண்டையும் செய்யமாட்டினம். 13 ஆவது திருத்தத்தை முழுமையா அமுல் செய்யும்படிதான் இந்தியா தொடர்ச்சியாகக் கேட்டு வருகுது. அதே ரெக்கோர்ட்டைத் தான் கூட்டமைப்பும் பிளே பண்ணவேணும். வேற சொய்ஸ் இல்லை. எல்லாரும் ட்பிள் கேம் தான். அதுதான் இண்டய உலக அரசியல்”
“அப்ப சைக்கிள் கோஷ்டி சமஷ்டி பற்றிக் கத்திறதையும் இப்பிடித்தான் எடுக்க வேணுமா?”
“இல்லை. இதைபத்தி நான் உங்களுக்கு முன்னமும் சொல்லியிருக்கிறன். சமஷ்டி நல்லது தான். ஆனால் சமஷ்டி தீர்வு என்பது பற்றி 13 ஆவது திருத்தம் பேசவே இல்லை. அதை ஒரு திருத்தமாகக் கொண்டுவாறதெண்டா முதல்ல பாராளுமன்றத்தில மூன்றில் இரண்டு பெரும்பான்மையோட அது பாராளுமன்றத்தில நிறைவேறவேணும். அப்பிடியான சூழல் இப்ப இல்லை. அப்ப ஜே.ஆர். ரஜீவின்ர ‘கைதி’. இப்ப மோடி ரணிலின்ர ‘கைதி’. எண்டபடியா சைக்கிள் காரர் கேக்கிறதில லொஜிக்கே இல்லை. அதனால தான் அவையின்ர கூச்சல்களை உலகம் கவனிக்கிறதில்லை. அதுக்காக அவங்கள் தேவையில்லை எண்டதில்லை. அவங்களால கூட்டமைப்பு நல்ல பேர் வாங்குது. காணி பறிப்பு விசயங்களில கஜேந்திரன் களத்தில நிக்குது. அதால் அவங்களுக்கும் ஒரு காத்திரமான இடம் இருக்குது. ஆனால் கதைக்கிறதை கொஞ்சம் லொஜிக்காக் கதைச்சா சர்வதேச சமூகம் கொஞ்சம் கவனிக்கும்”
“சரி, இந்தச் சந்திப்பில விக்கியர் சொல்லுறேர் பொலிஸ் அதிகாரம் இல்லாட்டியும் காணி அதிகாரத்தோடயாவது தருகிறதைத் தாருங்கள் எண்டிறேர். சுமந்திரன் உள்ளூராட்சித் தேர்தல்களை முதலில் வையுங்கோ எண்டிறேர். இதனால தானே ரணிலும் “உங்களுக்குள்ளேயே குழப்பம்” எண்டு புழுதியைக் கிளப்புது. அதில நியாயம் இருக்குதா?”
“உள்ளூராட்சித் தேர்தல்களை வைக்கிறாதால கனக்க நன்மையள் இருக்குது பாருங்க வடிவேலர். ஒண்டு, வடக்கு கிழக்கிலை இப்ப என்ன செய்யிறதெண்டாலும் ஆளுனரிட்டப் போகோணும். இதுவரை நமக்குக் கிடைத்த ஆளுனர்கள் கொத்தடிமைகள் தான். அவை எல்லாத்துக்கும் கோட்டைக்கு ஆமிக் கொமாண்டரிட்ட ஓடுவினம். நடக்கிறது ஒண்டுமில்லை. அட் லீஸ்ட் பல்லில்லாத மாகாண சபை எண்டாலும் சில தீர்மானங்களை அது எடுக்கும். இரண்டு: பல சிங்கள கட்சிகளும் உள்ளூராட்சித் தேர்தல்களை வைக்கச்சொல்லி அடம்பிடிக்கினம். இதனால ரணில் மீதான அழுத்தம் அதிகரிக்கும். பட்ஜெட்டில் காசு போதாது எண்டு தொடர்ந்தும் அவர் தொடர்ந்தும் பேய்க்காட்ட முடியாது. மூன்று: உள்ளூராட்சித் தேர்தல்கள் கிட்டத்தட்ட அமெரிக்காவில் நடக்கும் மிட் ரேர்ம் எலெக்ஷன்ஸ் மாதிரி. சனத்தின்ர மனநிலை எப்பிடியிருக்கு எண்டிறதை அது காட்டிவிடும். அதுக்கு ரணில் தயாரில்லை. அதனால தான் அவர் 13ஐ தூக்கிப் பிடிக்கிறார். ஆனால் ரணில் சொன்னதில ஒரு உண்மை இருக்கு. விக்கியரும், கூட்டமைப்பும் இதைப் பத்தி முன்னரே கதைச்சு ஒரு முடிவோட போயிருந்தா அல்லது ஒரே முடிவைச் சொல்லியிருந்தா ரணில் அப்பிடிச் சொல்லியிருக்கேலாது. எங்கட ஆக்களும் ஈகோவைத் தலையில வைச்சுக்கொண்டு திரியிறது சிங்களவருக்கு ஈசியாப் போய்விட்டுது. பாத்தனீங்களே விக்கியர் கதைக்க வெளிக்கிட ரணில் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. அது தான் ரணில்”
“ரணில் கூப்பிட்ட இந்தக் கூட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் போயிருக்கக் கூடாது எண்டு சிலர் சொல்லுகினமே”
“இல்லை. பிறகு அந்தாள் சர்வதேசங்களின்ர கதவுகளைத் தட்டி “நான் தீர்வுப் பொதியோட போனான். தமிழர் அதை உதாசீனம் செய்துபோட்டினம்” எண்டு ரெக்கோர்ட்டைத் திருப்பிவிட்டிடும். நாங்க பலவீனமாக இருக்கிறனாங்க. எங்களுக்கு வேற சொய்ஸ் இல்லை”
“ரணில் 13 ஆவதைத் தூக்கிக்கொண்டு ஆடிறதால அந்தாளுக்கு என்ன நன்மை?”
“அந்தாள் ஒரு நரி எண்டிறது உங்களுக்குத் தெரியும்தானே. அந்தாளின்ர குறி அடுத்த ஜனாதிபதி எலக்ஷன். தமிழாக்களின்ர வாக்குகள் தான் அதைத் தீர்மானிக்கப்போகுது எண்டதையும் அந்தாள் உணர்ந்து வைச்சிருக்கு. இதற்கு ரக்ரிக்கல் ஆக அந்தாள் விளையாடுது. கூட்டமைப்பைத் தமிழ் வாக்காளரிட்டயிருந்து பிரிச்சுவிட்டா தனக்கு வாக்குக் கிடைக்குமெண்டு அந்தாள் நம்புது. ரணிலோட டீல் போட கூட்டமைப்பு விரும்பாது. எண்டபடியா அவையளை ஐசொலேட் பண்ணத்தான் இந்த நாடகம். உட்கட்சிப் பிரச்சினை, விக்கியர், சைக்கிள் காரர் எண்டு கூட்டமைப்புக்குத் தலை நிறைஞ்ச பிரச்சினையள். சிலவேளை சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக்கட்சியில இருந்து வெளிக்கிட்டாலும் ஆச்சரியப்படக் கூடாது. தமிழரின்ர வாக்குகளை எடுக்கிறதுக்குத்தான் ரணில் 13 ஐத் தூக்கிப் பிடிக்குது”
“அட்ப் பாவி. அப்ப ரணில் கிட்டத்தட்ட அரைவாசி வெண்டிட்டுது எண்ட மாதிரி”
“அண்ண, தமிழரைப் பிரித்தாளிறது சின்ன விசயம். சோழரின்ர காலத்தில இது நடந்துவருகுது. அதனால தான் நான் சொல்லிறன் நமக்குத் தீர்வு நம்மாட்களினால கிடைக்காது. வெளியில இருந்துதான் வரவேணும்”
“இந்தியாவோ?”
“இந்தியாவின்ர மாஸ்டர் பிளான் இதுதான். வேணுமெண்டாப் பாருங்கோ. இலங்கையைத் தரை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னோட இணைக்கிறதுதான் இந்தியாவின்ர திட்டம். அரசியல் ரீதியாக அது சாத்தியமாகாது. அதால முதலில வடக்கு – கிழக்கு தான் அதின்ர கண். அதானி போல ஆக்களைக் கொண்டு துறைமுக அபிவிருத்தி, பாலம் போடுதல், கப்பல் விடுதல் எல்லாம் நடக்கும். பொருளாதார ரீதியான ஈடுபாடு வளர்ந்ததும் அவற்றைப் பாதுகாக்கவென சில தலையீடுகளைச் செய்யும். இதுக்கு இப்ப இருக்கிற ஒரே பலம் 13 ஆவது திருத்தம் தான். அதைப் பலமிழக்கச் செய்ய இந்தியா விடாது. இதால தான் சிங்களவர் இப்ப காணி பிடிக்கிறதிலை மும்முரமா இருக்கிறாங்கள். இந்தியா வரேக்க வடக்கு கிழக்கு முழுவதும் நேவியும் ஆமியும் இருக்கும். அது மத்திய அரசின் கீழ் வருவது. அவற்றை அகற்றச்சொல்லி இந்தியா டிமாண்ட் பண்ண இயலாது”
“அப்ப இந்த காணி பிடிக்கிறதை நிப்பாட்டைச் சொல்லி ஏன் இந்தியா வெளிப்படையாச் சொல்லக் கூடாது?”
“அது உள்நாட்டு அரசிலலில தலையிடுகிற மாதிரி வந்திடும். அதுக்காகத்தான் 13 ஆவதி முழுமையாக அமுல்செய்யும்படி அது கேட்குது. அது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில இருக்கிறபடியா அதைக் கேட்கும் உரிமை அதற்கு இருக்குது. அது காணி பறிபோறதை நிப்பாட்டும்”
“அப்ப இந்த ரணில் கூட்டின சர்வகட்சி மாநாடு எதுக்கு?”
“எல்லாக் கட்சிகளையும் ஒரு பொறிக்குள் மாட்டுவதற்கு. சிங்களக் கட்சிகள் 13 க்கு ஒத்துவரமாட்டின எண்டது அந்தாளுக்கு நல்லாத் தெரியும். இந்தியா இல்லாம பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க ஏலாது. இந்தியாவின்ர எதிர்பார்ப்பு 13 ஆவது திருத்தம். பொருளாதாரம் எதிர்பார்த்தமாதிரி முன்னேறாவிட்டால் பிழையை மற்ற சிங்களக் கட்சிகளில போட்டுவிடலாம். மற்ற கட்சிகளின் ஒப்புதலோட 13 ஐ அமுல் படுத்தினால் அந்த வெற்றிக்கு தானே காரணம் எண்டு சொல்லி தேர்தலில ஈசியா வெண்டுவிடலாம்”
“அப்ப ரணில் புலம்பெயர்ந்த அமைப்புகளோட டீல் ஏதும் போடுமெண்டு நினைக்கிறியோ? அப்பிடி ஏதும் நம்ம ஆட்கள் முயற்சிக்கினமோ?”
“அப்பிடித்தான் கேள்விப்படுறன். அது பிழையெண்டும் சொல்லமாட்டன். ஏதோ ஒரு சனலில கொம்மூனிக்கேசன் இருக்கவேணும் எண்டதும் ஒரு மூலோபாயம் தான். பாப்பம்”
“சரி வாறன். வெளிச்சமிருக்கேக்க போனாத்தான் தவறணையில சேட்டைக் காட்டலாம்”. என்ன இருந்தாலும் வடிவேலர் ஒரு குழந்தைப்பிள்ளைதான்.