Sri Lanka

13 A: ஜனாதிபதி முதலில் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் – பெளத்தமதத் தலைவர்கள்

“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி ஜனாதிபதி முதலில் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்” என பெளத்த மத பீடங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து பெளத்த பீடாதிபதிகள் சார்பில் அஸ்கிரிய பீடாதிபதி கலாநிதி மெடகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

“13 ஆவது திருத்தம் இனங்களுக்கிடையே பிரச்சினை உட்படப் பல்வேறுபட்ட தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணங்களுக்காக அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது. இதற்கு முந்திய ஜனாதிபதிகள் எவரும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்ட படியால் அவர் அதைப் பற்றி பெளத்த மத பீடாதிபதிகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுடனும் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்” என தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி தமிழ் பிரதிநிதிகள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி கலந்தாலோசித்திருந்தார். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு மக்கள் கொடுத்த ஆணையை வைத்து ஆட்சிக்கு வந்தமையினால் இத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தார்மீக உரிமை இல்லை என பிரதான ஆளும் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதனால் நாடு பிளவுபடும் ஆபத்து இருக்கிறது என்பதனால் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமெனக் கோரி நான்கு பெளத்த பீடாதிபதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்று ஏற்கெனவே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொலிஸ் அதிகாரங்களில்லாமல் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்றிற்கு வாக்குறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.