Sri Lanka

13 A | அனைத்துகட்சி சந்திப்பு – சுதந்திரக் கட்சி, சமாகி ஜன பலவேகய பங்கேற்பு; ஜே.வி.பி. (NPP) மறுப்பு

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுதுவது தொடர்பாக ஜனாதிபதி விக்கிரமசிங்க ஏற்பாடு செய்யும் அனைத்துக்கட்சி சந்திப்பில் கலந்துகொள்ள ஜே.வி.பி. யை அங்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி மறுப்புத் தெரிவித்துள்ளது. இம்மாதம் 26 ஆம் திகதி இச்சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.

“இனப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் நல்லனவாக இருப்பினும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை நாம் ஆதரிக்கப் போவதில்லை. வரப்போகும் தேர்தலில் தமிழ்மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஏமாற்று வித்தையே இது. ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் ஏற்கெனவே தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டனர்” என தேசிய மக்கள் கட்சி பா.உ. விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இநப்பிரச்சினைக்கான தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவேன் என ரணில் விக்கிரமசிங்க கடந்த பெப்ரவரி மாதம் தமிழ் மக்களுக்கு வாக்குறிதியளித்திருந்தார் என்பதை இவ்விடத்தில் பா.உ. ஹேரத் நினைவூட்டினார்.

சிறுபான்மை இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காண இந்த அரசாங்கம் மனப்பூர்வமாக எடுக்கும் முயற்சிகளுக்கு தாம் ஆதரவு தருவோம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரா தெரிவித்துள்ளார். ஆனாலும் இன்றைய எதிர்க்கட்சிகளின் சந்த்திப்பைத் தொடர்ந்தே சமாகி ஜன பலவேகய தனது நிலைப்பாட்டை அனைத்துக்கட்சி சந்திப்பில் முன்வைக்கும் என அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மட்டுமபண்டார கூறியுள்ளார்.

“13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆணை ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கிடையாது. அவர் மக்களால் தெரியப்பட்டவரல்ல. அவரது அதிகாரம் கோதாபய ராஜபக்சவுக்குரியது” என ஆளும் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் ஏற்கெனவே தமது கட்சியின் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பாராளுமன்ற ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்குமென்பதில் சந்தேகமிருக்கிறது. ஆனாலும் 13 ஆவது திருத்தம் ஏற்கெனவே அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு அம்சம் என்ற வகையில் அதை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.