Sri Lanka

13 வது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த நான் அரசாங்கத்துக்கு உதவுவேன் – பிள்ளையான்


வட-கிழக்கில் வாழும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் – விக்னேஸ்வரன்

ஆகஸ்ட் 20,2020: இலங்கையின் 9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதிநிதி சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது முதலாவது உரையை நிகழ்த்தினார்.

யாழ் மாவட்ட பா.உ. சீ.வி.விக்னேஸ்வரன்

“நான் பதின்ம வயதினனாக இருக்கும்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேநாயினும் தற்போது முழுமையாக ஜனநாயக பாதையில் இறங்கியிருக்கிறேன். 13 வது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். நாட்டை அபிவிருத்தி செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கும் முயற்சிகளுக்கும் எனது முழுமையான ஆதரவு கிடைக்கும்” என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பாராளுமன்றத் தேர்தலில் நான் தெரிவு செய்யப்பட்டிருந்தும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள சட்டமா அதிபர் எனக்கு அனுமதி தருகிறாரில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதய சூழ்நிலையில் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் நீதிமன்ற அனுமதியைப் பெறவேண்டியுள்ளது.

இதே வேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சியின் சார்பில் பாராளுமன்ற அமர்வில் முதல் தடவையாகக் கலந்துகொள்ளும் பா.உ. திரு சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது ஆரம்பப் பேச்சில் “வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் சுய நிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் எனவும், ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு எதிர்ச் செய்கை இருக்கும் எனவும் கூறி, அதை சிங்கள மொழியில் “கால கால தே பால பால தே” என மீளவும் தெரிவித்தார்.

பிள்ளையானும், விக்னேஸ்வரனும், சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மஹிந்த யாப்பா அபயவர்த்தனவுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.