Sri Lanka

13 ஆவது திருத்தம்: கருத்துக்களை முன்வைக்க கட்சித் தலைவர்களுக்குக் காலக்கெடு

ஆகஸ்ட் 15 க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்

13 ஆவது திருத்தம் தொடர்பாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு சர்வ கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆகஸ்ட் 15 இற்கு முன்னர் அவை சமர்ப்பிக்கப்படவேண்டுமெனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கோரிக்கையை ஜனாதிபதி செயலர் சுமன் ஏகநாயக்க கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் முன்வைத்துள்ளார். 13 ஆவது திருத்தம் முழு நாட்டையும் பாதிக்கிறது என அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு ஜூலை 26 நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். சகல கட்சிகளினதும் கருத்துக்களைத் தான் உள்வாங்கி இதற்கு விரைவான முடிவொன்றைத் தான் எடுக்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி திட்டத்தின் சமகால நிலைப்பாடு குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் தருவதற்காக இம்மாநாடு கூட்டப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அப்போது தெரிவித்திருந்தது.