13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் அதற்கு மேலாகவும் நடைமுறைப்படுத்தி இலங்கை தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இந்தியா
இலங்கை இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம், 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாலும் சென்று அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ்வர்த்தன் ஷ்ரிங்க்லாவின் நான்கு நாள் சுற்றுப்பயணத்தின்போது அவர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியபோதே மேற்படி தெரிவித்திருந்ததாக அறியப்படுகிறது.
“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனம் செலுத்துவோம் என்று இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை அது காப்பாற்ற வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது: எனக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ்வர்த்தன் தெரிவித்ததாக பா.உ. சுமந்திரன் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“1983 இலிருந்து இந்தியா இப்படியான பிரச்சினைகளை எஹிர்கொண்டு வருகிறது. எமது தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் வரை அது தொடர்ந்து எம்முடன் பயணிக்கும் எனவே நாமும் நம்புகிறோம்” என நேற்று (04) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது சுமந்திரன் தெரிவித்தார்.