13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது – ஜனாதிபதி விக்கிரமசிங்க

பெப்ரவரி 08 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வியாழனன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்துக்கட்சிகளின் மாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளியன்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்த அறிக்கையில், நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உள்ளது எனவும் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு அங்கம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

“கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 13 ஆவது திருத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. அதை நான் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதை யாராவது எதிர்ப்பதானால் அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டுவந்து அதை மாற்றிக் கொள்ளலாம் அல்லது முற்றாக நீக்கிவிடலாம். 13 ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டுமா அல்லது முற்றாக நீக்கிவிட வேண்டுமா என்பதை நாடு தீர்மானிக்க வேண்டும். இரண்டில் ஒன்றையேனும் செய்யாமல் நாம் இருக்க முடியாது. 13 ஆவது திருத்தத்தை முற்றாக நீக்க எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனியார் சட்டமூலமொன்றைக் கொண்டுவரமுடியும். அப்படியானால் பல உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தராவிட்டால் என்ன நடக்கும்? நாங்கள் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டி வரும்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“நான் 13 ஆவது திருத்தம் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நான் வேலை செய்கிறேன். முதன்மை நீதிபதி பாளிந்த ரணசிங்க அளித்த தீர்ப்பை நாம் விசேடமாகப் பார்க்க வேண்டும். நாங்கள் இன்னும் ஒற்றையாட்சி வரைமுறைகளுக்குள்ளேதான் இருக்கிறோம். நான் சமஷ்டி ஆட்சிக்கு எதிரானவன் ஆனால் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை நான் ஆதரிக்கிறேன். லண்டன் மாநகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட மாகாணங்களுக்கு இல்லை. எனவே இவற்றை சமஷ்டி மாநிலங்கள் என நாம் அழைக்க முடியாது.

“13 ஆவது திருத்தம் சமஷ்டி ஆட்சிக்கு வித்திட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனாவும் அவரது சட்ட ஆலோசகர்களும் மிகுந்த பிரயத்தனம் எடுத்திருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவில் வடக்கு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான பெருமளவு நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறீசேன காலத்தில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன. ஏறத்தாழ 3000 ஏக்கர்கள் மட்டுமே இன்னும் பாதுகாப்பு படைகளின் வசம் இருக்கின்றன. தேசிய பாதுகாப்புக்கு பங்கம் வராது அவற்றை விடுவிக்க படைகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். காணி ஆணையமும் விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான வரைவு மார்ச் மாதமளவில் வழங்கப்பட முடியும். இவ்வாணையத்தில் 9 மாகாணங்களிலிருந்தும் 9 அங்கத்தவர்கள் இருப்பார்கள். மேலும் 12 பேரை ஜனாதிபதி நியமிப்பார். இதன் பிறகு நாங்கள் தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்கலாம். இவ்வாணையம் அக்கொள்கையை நடைமுறைப்படுத்தும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் வனங்கள் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில் ” நாட்டின் 30 வீதமான நிலங்கள் வனங்களுக்கென ஒதுக்கப்படும். மலைநாட்டிலும் ஆற்றங்கரைகளிலும் இருந்த பெருவாரியான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. வனக்கூரைகளை நாம் அதிகரிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு காணி ஆணையத்துக்கு வழங்கப்படும்” எனக் கூறினார்.

13 ஆவது திருத்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி பெப்ரவரி 08 அன்று அறிவிக்கவுள்ளதாகவும் இதுபற்றி முன்மொழிவுகளைத் தரவிரும்பும் கட்சிகள் சுதந்திர தினமான பெப்ரவரி 04 இற்கு முதல் தரவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.