13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி கோருவதற்கு இந்தியாவுக்குத் தார்மீக அருகதை இல்லை – வீரசேகரா

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி கோருவதற்கு இந்தியாவுக்குத் தார்மீக அருகதை இல்லை – வீரசேகரா

Spread the love

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கோருவதற்கு இந்தியாவுக்குத் தார்மீக அருகதை இல்லை என உள்ளூராட்சி, மாகாணசபை அமைச்சர் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையுடனான வெளிநாடுகளின் ஒப்பந்தங்கள் பற்றிய விவாதத்தின்போது ” இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இந்தியா நிறைவேற்றுமென வாக்களித்த பல விடயங்கள் நிறைவேற்றப்படாமையால் அவ்வொப்பந்தம் கேள்விக்குரியதாகிவிட்டது என அவர் தெரிவித்தார்.

“அது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதையும் மீறி, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது பிரதமரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஜம்மு, காஷ்மீர் தொடர்பாக 370வது உட்பிரிவை இந்தியா மீறியபோது “அது உள்நாட்டு விவகாரம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

“13வது திருத்தம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிந்திருந்தும் பிரதமர் மோடி அதை நிறைவேற்றும்படி வற்புறுத்துகிறார். இந்தியா தன்பக்கத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது எங்களை எப்படி வற்புறுத்த முடியும்?. 13வது திருத்தம் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவே இல்லை. இவ்வொப்பந்தம் இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.

“இவ்வொப்பந்தத்தைப் பற்றி எனக்கு ஆட்சேபணை உண்டு. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அகதிகளாக வாழும் சிங்கள, முஸ்லிம் அகதிகளை இலங்கைத் தேர்தல்களில் வாக்களிக்க இந்தியா அனுமதிக்க வேண்டும். ஆயிரக் கணக்கான சிங்கள, முஸ்லிம் அகதிகள் இலங்கைக்கு மீள முடியாமால் அங்கு தவிக்கிறார்கள்.


“இவ்வொப்பந்தத்தின்படி, 48 மணித்தியால மோதல் தவிர்ப்பும் அதைத் தொடர்ந்து சகல இயக்கங்களும் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். சம்பிரதாயத்திற்காக விடுதலைப் புலிகள் கொஞ்ச ஆயுதங்களை மட்டும் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால் மோதல் தவிர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றான IPKF பல இழப்புக்களுடன் திரும்பவேண்டியதாகிவிட்டது. சரியான அரசியல் தலைமையின்கீழ், இலங்கைப் படைகள் தான் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தனர். 29,000 உயிரிழப்புகள், 14,000 காயப்பட்டோர் என நாம் அதற்கு நாம் கொடுத்த விலை பெரிது.

“ஒப்பந்தத்தின் இன்னுமொரு உட்பிரிவான வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை நீதிமன்றம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்துவிட்டது.

“இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிடர்களால் பிரிவினை கோரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஈ.வெ.ரா. பெரியாரின் போராட்டத்திற்கு அஞ்சிய ஜவகர்லால் நேரு 28 மொழிவழி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்தார். “மொழிவழி மாநிலங்கள் நாடு பிரிவதற்கு முதஹ்ற்படி” என அம்பேத்கார் எச்சரித்தார். எனவே வடக்கிற்கோ அல்லது வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்திற்கோ அதிகாரப் பரவலாக்கம் செய்வது பற்றி இந்தியா ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தாக வந்து முடியலாம்” என அமைச்சர் வீரசேகர தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email